www.tamilmuslim.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாலஸ்தீனத்தின் ஓயாக் கதறலும்! உலகின் கேளாச் செவிகளும்!!

அப்துல் அலீம் சித்தீக்

 
(குறிப்பு: இதுதான் இஸ்லாம் எடிட்டர்களில் ஒருவர் எழுதிய இந்தக் கட்டுரை 'மக்கள் உரிமை' வார இதழிலும் பிரசுரமாகியுள்ளது - நன்றி)

இன்னும் எத்தனைக் காலம்தான் பாலஸ்தீன மக்கள் மீது இழைக்கப்பட்டு வரும் கொடூரங்களும், குண்டு மழைகளும், அவமானங்களும், பசி பட்டினி அவலங் களும் தொடருமோ தெரியவில்லை! இன்னும் எத்தனைக் காலம்தான் சர்வதேசச் சமுதாயம் ஒரே குரலில் இஸ்ரேலின் இந்த மனிதநேயப் படுகொலைகளை எதிர்த்து தன் குரலை ஓங்கி ஒலிக்காமல் கிடக்குமோ தெரியவில்லை! இன்னும் எத்தனைக் காலம்தான் உலகத் தலைவர்களின் கண்கள் இஸ்ரேலின் அநியாய மான நில ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள் ளாமல் இருக்குமோ தெரியவில்லை! இன்னும் எத்தனைக் காலம்தான் உலக மக்களின் கவனம் முழுவதும் உலக விளையாட்டுக் கோப்பைகளில் விழுந்து இஸ்ரேலின் இரத்த வெறியாட்டத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருக்குமோ தெரியவில்லை!

ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசமைத்துள்ள ஹமாஸ் கட்சியை அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் 'தீவிரவாத அரசு' என்று அறிவித்தது. இது இஸ்ரேலுக்கு பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்க லைசென்ஸ் கொடுத்தது போலாகி விட்டது. சாதாரண குடிமக்களை மரண அச்சத்தில் தள்ளி தனது அட்டூழியத்தை இஸ்ரேல் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையிலேயே 'இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ள உரிமை இருக்கிறது' என்று இன்னும் ஜார்ஜ் புஷ் வக்காலத்து வாங்குவதும், அதைக் கேட்டு உற்சாகமடைந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் ஓல்மர்ட் இனி காஸா பிரதேசத்தில் யாரும் உறங்கவே முடியாது என்று சூளுரைத்ததும் இவர்கள் இருவரும் எவ்வளவு மோசமான, பயங்கரமான மனித இன விரோதிகள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

இஸ்ரேலின் வரம்பு மீறிய பாதகச் செயல்களின் உச்சக்கட்டமாக ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணாக, ஹமாஸ் அரசை கட்டுக்குள் கொண்டு வருவதாக நினைத்துக் கொண்டு, காஸாவில் உள்ள ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்தையும் ஏவுகணைகளைப் பாய்ச்சி இஸ்ரேல் தகர்த்து விட்டது. காஸாவின் 1.5 மில்லியன் குடிமக்கள் அனைவரும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர். மீண்டும் மின் உற்பத்தி யைத் துவங்க குறைந்தபட்சம் 8 மாதங்கள் வரை ஆகும் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர். இதற்குள் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் இறந்து விடுவர். எந்தவொரு மின் சாதனமும் இயங்காமல் குடும்பங்கள் அனைத்தும் சொல் லொணா துயரங் களுக்கு ஆளாகி வருகின்றனர். சுட்டெரிக்கும் இந்த கோடைக் காலத்தில் வயோதிகர்களும், பெண்களும், குழந்தைகளும் வெந்து மடிந்துக் கொண்டிருக்கின்றனர். அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் கம்ப்யூட்டர் கருவிகளும் இயங்காமல் செயலிழந்துள்ளன.

அதிகபட்ச வெப்பம் நிலவும் வளைகுடாப் பிரதேசங்களில் வசிக்கும் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் ஒருசில நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டாலும் எவ்வளவு தகித்து தாகித்துப் போய் விடுவார்கள் என்று! அப்படி யானால் மின்சாரம் இன்றி இதே பிராந்தியத்தில் உள்ள காஸா பகுதி பிரஜைகள் அடைந்துவரும் கஷ்டங் களை வார்த்தைகளில் வடிக்க முடியாது.

துயரம் இத்தோடு நின்றுவிடவில்லை. இனிமேல்தான் அதிகரிக்கப் போகின்றது. தொடர்ந்து அவசர உதவிக்கான ஜெனரேட் டர்கள் இயங்கி வருவ தால் அவற்றுக்குத் தேவையான எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருகின்றது. தண்ணீர் பற்றாக்குறை ஒருபுறம், தானியங்கி சாக்கடை வடிகால்களின் முடக்கம் மறுபுறம் என்று மிகப் பெரும் மனிதவள கோர விபத்துக்கள் நடக்க இருக்கின்றன. இவ்வளவு நடந்தும், இஸ்ரேலியப் பிரதமரின் நரவேட்டைத் தாகம் இன்னும் தனிந்தபாடில்லை. தனது இராணுவத்தை மேலும் கட்டவிழ்த்து விட்டு அவர்களால் முடிந்தளவு அட்டூழியங்களை அரங்கேற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.

''காஸாவில் நிலைமைகள் சிரமமாகத்தான் உள்ளது. ஏவுகணைகளை செலுத்தி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சற்று சிரமத்திற்கு உள்ளாகத்தான் வேண்டியிருக்கும்'' என்ற ஏ.சி. அறையில் அமர்ந்து கொண்டு அகங்காரமாக தனது அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கூறியுள்ளது கிஞ்சிற்றும் மனிதாபிமானம் இல்லாத மனித விரோதமான பேச்சாகும். ஆம், ஏவுகணைகள் கொல்லும். அதே போன்றது தான் விமானப் படைகளைக் கொண்டும், டாங்குகளைக் கொண்டும் உலகின் மிகப்பெரும் திறந்தவெளி சிறைச்சாலை யாகி விட்ட பாலஸ்தீனத்தின் மீது குண்டுமாரிப் பொழிவதும் ஆகும். தன்னைச் சுற்றி நடந்துவரும் பேரழிவில் இருந்தும், மரண ஓலத்திலிருந்தும் எந்த தாயாலும் தனது கையில் உள்ள குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. போதாக்குறைக்கு 24 மணி நேரமும் தலைக்கு மேல் தலைவெடித்து விடுமளவிற்கு பேரிறைச்சலைக் கக்கிச் செல்லும் இஸ்ரேலிய விமானங்களின் அட்டகாசம் வேறு.

இஸ்ரேலியப் பிரதமருக்கு வேண்டிய தெல்லாம் காஸாவில் ஒருவரும் நிம்மதியாக உறங்கிவிடக் கூடாது என்பதுதான். அதை அவர் நிறைவேற்றியும் விட்டார். ஆனால் நமக்கு வியப்பளிப்பது என்னவென்றால், கொடுங்கோலன் ஏரியல் ஷரோனு டைய கொள்கைப் புதல்வனான இந்த ஓல்மர்ட் மட்டும் எப்படி உறங்க முடிகிறது? சுயநினைவும், இதயமும் உள்ள ஒரு மனிதப் பிறவியாக அவர் இருந்தால் இது சாத்தியமா?

ஒரே ஒரு யூத ராணுவ வீரன் நியாயமாக கோரிக்கைகளை வைத்து கடத்தப் பட்டதற்காக இவ்வளவு பெரிய வெறியாட்டம் எதற்காக? தங்களது ராணுவ வீரனை மீட்பதல்ல நோக்கம், மாறாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை தனக்குத்தானே ஒரு வருடகாலமாக விதித்துக் கொண்டு ஜனநாயக வழியில் நம்பிக்கைக் கொண்டு வெற்றியும் பெற்று ஆட்சி அமைத்த ஹமாஸ் கட்சியை மீண்டும் தீவிரவாதத் திற்குள் தள்ளி அதன்மூலம் தனது இரத்த வேட்கையை தனித்துக் கொள்ள வேண்டும் அதற்காகத்தான். இதற்குச் சான்று, அமைதியாகத் தனது ஆட்சியைத் துவங்கிய ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து கடந்த ஆகஸ்ட் முதல் இஸ்ரேலியர்கள் கொன்றுவருவது கொடுமையாகும். இந்த நரித்தந்திரம் இப்போதல்ல, யாசர் அராஃபத் காலத்திலிருந்தே இஸ்ரேலின் கொள்கை இதுதான் லி யாசர் ஒவ்வொரு முறை சமாதான முயற்சி எடுக்கும்போதும் ஏதாவது ஒன்றைச் செய்து அவரது ஆட்களை கோபம் கொள்ளச் செய்து, அதன் மூலம் தனது தாக்குதலைத் தொடங்கி விடுவார்கள். சென்ற மாதம் கடற்கரையில் அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஒரு பாலஸ்தீன குடும்பத்தை தொலைவில் நின்றிருந்த இஸ்ரேலிய கப்பற்படை ஏவுகணை செலுத்தி கொன்று குவித்த கொடூரம் நினைவிருக்கலாம்.

எங்காவது இந்த அநியாயம் உண்டா? ஒரு நாட்டினது மக்களின் விருப்பத்திற்கு இணங்க ஜனநாயக முறைப்படி அமைந்த பாராளுமன்ற அலுவலகத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து அதன் அமைச்சரவை முழுவதையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, இவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று எக்காளமிடுகிறது இஸ்ரேலிய கொடுங்கோன்மை.

இது போதாதென்று தொடர்ந்து சிரிய அதிபரின் மாளிகைகளின் மீது போர் விமானங்களை அனுப்பி பயமுறுத்துவதும், அங்கே ஹமாஸ் கட்சியின் அலுவலகங்கள் இருக்கக் கூடாது என்று மிரட்டுவதும் இஸ்ரேலின் அராஜக நிகழ்வுகளின் அன்றாடப் பட்டியல்கள். ஆக, இஸ்ரேல் ஒரு போதும் சமாதானத்திற்கு தான் தயார் இல்லை என்பதை ஒவ்வொரு கணமும் நிரூபித்து வருகிறது.

இஸ்ரேலிய வீரனைக் கடத்தியவர்கள் சில நிபந்தனைகள் விதித்தார்கள். இஸ்ரேலியச் சிறைகளில் பெண்கள் சிக்கித் தவிக்கும் 335 குழந்தைகள் உட்பட 9,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கின்றனர். இதை இஸ்ரேல் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மிகமிக சாதுவான பாலகனாக சித்தரிக்கப்படுகின்ற இஸ்ரேலிய வீரனைப் பற்றி இவ்வளவு கவலைக் கொள்கிற இஸ்ரேலிய அரசு நீண்டகாலமாக தனது கொட்டடிகளில் சிதைந்து கொண்டிருக்கிற இந்த பாலஸ்தீனப் பிஞ்சுகளைப் பற்றி மட்டும் எந்த வொரு அசைவையும் காட்டவில்லை.

உலகின் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில் பாலஸ் தீனர்கள் இறைவனுக்கு அடுத்தபடியாக எகிப்து சமாதானக் குழுவினரை நம்பியுள்ளனர். சவுதி அரேபியாவின் மஸ்ஜித்களில் உருக்கமான பிரார்த்தனைகள் கோரப் படுகின்றன.

பாலஸ்தீனத்தில் புதிய மக்களாட்சி அமைத்த ஹமாஸ் கட்சியின் தலைவர் உலக மக்களிடம் ''உலக மக்களே! அரபுத் தலைவர்களே! இஸ்ரேலின் இந்த வெறி யாட்டத்திலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள்'' என்று நெஞ்சுருக வேண்டு கோள் விடுத்துள்ளார். நம்பிக்கையின் விளிம்பில் நின்று கேட்கப்படும் வேண்டு கோள் இதுவென்றாலும், இதைக் கேட்கும் ஒவ்வொரு செவியும் தனது செய லாலோ, சொல்லாலோ அல்லது மனதாலோ எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வெட்கித் தலை குனியட்டும்.

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை