|
இஹ்ராம் அணிதல்:
இஹ்ராம் என்பது அகராதிப்படி தஹ்ரீம் என்ற
வார்த்தையிலிருந்து பிறந்த ஹரமில் அதாவது புனிதமான
அம்சத்தில் பிரவேசித்தல் என்ற பொருளைக் கொண்ட
வார்த்தையாகும்.
மார்க்க ரீதியாக, ஹஜ் - உம்ராவுக்கான காரியங்களில்
நுழைவதற்கான நிய்யத்தாகும், இஹ்ராமில் தடுக்கப்பட்ட
ஆடைகளைக் களையாதிருந்தாலும் சரியே!
இஹ்ராமின்போது செய்ய வேண்டியவை:
1) நகங்கள், அக்குள் மற்றும் மறைவிடத்திலுள்ள முடிகளைக்
களைந்து மீசையைக் குறைத்தல்: இஹ்ராம் அணிந்தபின் இவற்றை
நீக்க அனுமதியில்லையாதலால் அவற்றை அகற்றுவதற்கு
அவசியப்படாத வகையில் அவற்றைக் களைந்துவிட வேண்டும். ஏனெனில்
ஹஜ் காலங்களிலல்லாமல் எல்லா காலங்களிலும் இவற்றைக்
கவனத்தில் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள்
வலியுறுத்தியுள்ளார்கள்: இயற்கையான சுன்னத்கள் ஐந்து: கத்னா
செய்தல், மறைவிடத்திலுள்ள முடியைக் அகற்றுதல், மீசையைக்
குறைத்தல், நகங்களைக் களைதல், அக்குள் முடியைப் பிடுங்குதல்
ஆகியனவாம். (புகாரீ, முஸ்லிம்).
2) குளித்தல், மேனியில் வாசனை பூசுதல் (இஹ்ராம்
ஆடையிலல்ல): நபி (ஸல்) அவர்கள், இஹ்ராம் அணிவதற்கு
முன்பும் முதல் விடுப்பிற்குப்பின்பும் அதாவது தவாஃபுல்
இஃபாளாவுக்கு முன்பும் அன்னாருக்கு நான் வாசனை பூசியுள்ளேன்
என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ, முஸ்லிம்)
மேலும் ஆயிஷா (ரழி), உம்ராவுக்கு இஹ்ராம் அணிந்த நிலையில்
அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. பிறகு ஹஜ்ஜிற்காக அவர்கள்
இஹ்ராம் அணியும்போது அவர்களைக் குளிக்குமாறு நபி (ஸல்)
அவர்கள் ஏவியுள்ளார்கள்.
3) ஆண்கள் தையலுள்ள ஆடைகளைத் தவிர்த்தல்: ஆண்கள்,
தைக்கப்படாத ஒரு கீழாடையையும் ஒரு பரிவட்டத்தையும்
அணிந்துகொள்ள வேண்டும். அவ்விரண்டும் வெண்ணிறமாக அமைந்தால்
சிறப்பாக இருக்கும். நபி (ஸல்) அவர்கள், நீங்கள்
இஹ்ராமின்போது ஒரு கைலியையும் ஒரு பரிவட்டத்தையும்
செருப்புகளையும் அணிந்துகொள்க! எனக் கூறியுள்ளார்கள் (அஹ்மத்).
பெண்கள், ஆண்களின் ஆடைகளுக்கு ஒப்பாகாத வகையில் கறுப்பு,
பச்சை அல்லது வேறு நிறத்தில் எந்த ஆடையையும் அணியலாம்.
ஆயினும் அவர்கள் கையுறைகளையும் முகமூடியையும்
தவிர்த்துக்கொள்ள வேண்டும். தலையை மூடும் முன்றாணையால்
அந்நிய ஆடவர் முன்னிலையில் முகத்தை மறைத்துக்கொள்வது
தவறில்லை.
4) நிய்யத் செய்தல்: ஹஜ் அல்லது உம்ராவை
செய்யப்போவதாக மனதில் (நிய்யத்) எண்ணிக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், அமல்களெல்லாம் எண்ணங்களைப்
பொறுத்தேயாகும் எனக் கூறியுள்ளார்கள், (புகாரீ). மேலும்
இந்த நிய்யத்தை வாயால் கூறவும் வேண்டும். அதாவது, நிய்யத்,
உம்ரா செய்வதாக இருந்தால் லப்பைக்க உம்ரத்தன் அல்லது
அல்லாஹும்ம லப்பைக்க உம்ரத்தன் என்றும் ஹஜ் செய்வதாக
இருந்தால் லப்பைக்க ஹஜ்ஜன் அல்லது அல்லாஹும்ம லப்பைக்க
ஹஜ்ஜன் என்றும் கூற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு
செய்துள்ளார்கள். வாகனத்தில் ஏறி அமர்ந்த பின்னர் நிய்யத்
செய்வது - சொல்வதுதான் சிறப்பாகும். நபி (ஸல்) அவர்களும்
அவ்வாறுதான் செய்துள்ளார்கள். இஹ்ராமைத் தவிர வேறு எந்தச்
சந்தர்ப்பத்திலும் நிய்யத்தை வாயால் கூறுவது மார்க்கத்தில்
ஏற்படுத்தப்படவில்லை.
இஹ்ராம் அணிபவர் தமது காரியம் பூர்த்தியடையாது என்கிற
அச்சமுள்ளவராக இருந்தால் இஹ்ராமின்போது, வழியில் ஏதேனும்
தடை ஏற்பட்டுவிட்டால் தடை ஏற்படுத்தப்பட்ட இடமே நான்
இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்| என நிய்யத்
செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ளபாஆ பின்த் ஸுபைர் (ரழி),
அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்ய விரும்புகின்றேன். ஆனால்
நான் சுகமில்லாமலிருக்கின்றேன்| என்று கூறியபோது நபி (ஸல்)
அவர்கள், ஹஜ் செய்வீராக! நான் தடுக்கப்படுமிடம் நான்
இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும் என்று நிபந்தனை
விதித்துக்கொள்ளும்!| எனக் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்).
இஹ்ராமில் தடுக்கப்பட்டவை:
இஹ்ராம் அணிந்தவர் செய்யக்கூடாத
காரியங்கள் பதினொன்று:
1) காரணமின்றி உடம்பிலுள்ள முடிகளைக் களைதல்.
அல்லாஹ் கூறுகிறான்: பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடையும்
வரை உங்கள் தலை முடிகளை மழிக்காதீர்! (2:196). இதில் தலையை
மழிப்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும்
மழிப்பதுடன் களைவது பிடுங்குவது ஆகியவையும் அடங்கும்.
அதுபோலவே தலையுடன் உடம்பின் ஏனைய பகுதிகளும் அடங்கும்.
இஹ்ராம் அணிந்திருப்பவருக்கு அதிகமாக முடி இருப்பதன்
காரணமாக நோய், பொடுகு, காயம், தலை வேதனை, கடுமையான உஷ்ணம்
போன்ற சிரமங்கள் ஏற்பட்டால் முடியை அகற்றிவிட்டு அதற்காக
பரிகாரம் கொடுக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில்
யாரேனும் வியாதியுற்றாலோ அல்லது தலையில் ஏதும் தொல்லை
ஏற்பட்டாலோ (முடியை அகற்றிவிட்டு) அதற்கான பரிகாரமாக நோன்பு
நோற்றல், தர்மம் செய்தல் அல்லது பலியிடுதல் எதையேனும்
நிறைவேற்ற வேண்டும் (2:196). 'உமது தலையிலுள்ள பொடுகு
உமக்குத் தொல்லை தருகின்றதா?' என்று நபி (ஸல்) அவர்கள் கஃப்
பின் உஜ்ரா (ரழி) அவர்களிடம் கேட்டபோது அவர் 'ஆம்' என்றதும்
அன்னார், 'உமது தலையை மழிப்பீராக! அதற்குப் பரிகாரமாக,
மூன்று நோன்புகள் நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு
உணவளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடுவீராக!'
என்று கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்).
2) காரணமின்றி கை-கால் விரல்களிலுள்ள நகங்களை வெட்டுதல்
அல்லது களைதல்.
3) இஹ்ராம் அணிந்த பின் உடம்பிலோ ஆடையிலோ வாசனை பூசுதல்:
ஏனெனில் பூசப்பட்ட வாசனைத் திரவியத்தைக் கழுவுமாறு யஃலா
பின் உமய்யா (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள்
ஏவியுள்ளார்கள். இஹ்ராம் அணிந்த பின் வாகனத்திலிருந்து
விழுந்து இறந்தவரின் ஜனாஸாவுக்கு வாசனை பூச வேண்டாம் என நபி
(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரீ).
4) முக்காடு, தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் ஆண்கள்
தலையை மறைத்தல்: இஹ்ராம் அணிந்த பின் வாகனத்திலிருந்து
விழுந்து இறந்தவரின் ஜனாஸாவுக்கு அவரது தலையை மூடாதீர் என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது பொதுவாக தலையை
மூடுவதைக் குறித்தாலும் தலைப்பாகையைப் பற்றிய குறிப்பாகவும்
வந்துள்ளது. மேல் சட்டை, கால்சட்டை, தொப்பி, தலைப்பாகை,
காலுறை ஆகியவற்றை ஆண்கள் அணியக்கூடாது| என்பது நபிமொழி (புகாரீ,
முஸ்லிம்). ஆனால் குடை, கூடாரம் போன்றவற்றின் மூலமாக நிழலை
ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை. தலையை மூடுதல் என்ற
நோக்கமின்றி எதையேனும் தலையில் சுமப்பதும் தவறில்லை.
5) தரைவாழ் விலங்குகளைக் கொல்வது, வேட்டையாடுவது,
அது பற்றிய முயற்சிகளை மேற்கொள்வது மேலும் தமக்காவே
வேட்டையாடப்பட்டதை அல்லது தமது உதவியால்
வேட்டையாடப்பட்டதைப் புசிப்பது: அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசிகளே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டைப்
பிராணிகளைக் கொல்ல வேண்டாம்! (5:95) நீங்கள் இஹ்ராம்
அணிந்திருக்கும்போது தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுவது
உங்கள் மீது விலக்கப்பட்டுள்ளது. (5:86).
6) தைக்கப்பட்ட ஆடைகளை ஆண்கள் வேண்டுமென்றே அணிதல்:
தைக்கப்பட்ட ஆடை என்பது சட்டை, பனியன், கால்சட்டை போன்ற
வடிவங்களில் தைக்கப்பட்டதாகும். ஆனால் தையல் உள்ள துணி,
அதில் ஆடையின் வடிவமைப்பு ஏதும் இல்லையெனில் அதையணிவது
தவறில்லை, கச்சை, கைக்கடிகார வார், செருப்பிலிருக்கும்
தையல்களைப்போல.
7) பெண்கள் முகமூடி மற்றும் கையுறைகளை அணிதல்:
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், பெண்கள் முகமூடியையோ
கையுறைகளையோ அணிய வேண்டாம்! எனக் கூறியுள்ளார்கள். (புகாரீ)
அந்நிய ஆடவர் தம் முன்னால் வந்தால் முகத்தையும் கைகளையும்
மூடிக்கொள்ளலாம், முன்றாணையின் மூலமாக. இது பற்றி ஆயிஷh (ரழி)
அறிவிக்கும்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது வாகனத்தில் வந்த சிலர் எங்களைக் கடந்தபோது எங்களில்
சிலர் தங்கள் முன்றாணைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு
அவர்கள் போன பின்னர் திறந்து கொண்டோம். (அபூ தாவூத், இப்னு
மாஜா, தாருகுத்னீ).
8) திருமண ஒப்பந்தம் செய்தல்: இஹ்ராம்
அணிந்திருப்பவர் தமக்காகவோ அல்லது வலீயாக, வகீலாக மாறி
பிறருக்காகவோ திருமண ஒப்பந்தம் செய்யலாகாது. இஹ்ராம்
அணிந்திருப்பவர் திருமண ஒப்பந்தம் செய்வதோ
செய்விக்கப்படுவதோ அது பற்றிய பேச்சு வார்த்தையில்
ஈடுபடுவதோ கூடாது என்பது நபிமொழி. (முஸ்லிம்).
9) வீணான விஷயங்கள்: நண்பர்கள், பணியாளர்கள்
போன்றவர்களுடன் வீணாக சண்டை சச்சரவு மேற்கொள்ளல்.
10) ஆபாசமான காரியங்கள்: கட்டியணைத்தல், சுய இன்பம்
மூலமாக விந்தை வெளியேற்றல்.
11) உடலுறவு கொள்ளல்: அதன் ஆரம்ப நிலைகளான
முத்தமிடுதல் இச்சையுடன் தீண்டுதல், ஆண்-பெண் உடலுறவு
சம்பந்தமான செய்திகளைப் பேசுதல். அல்லாஹ் கூறுகிறான்: யார்
ஹஜ் செய்கின்றாரோ அவர் ஆபாசமான காரியங்களில் ஈடுபட வேண்டாம்.
(2:197) ஆபாசம் என்பது இங்கே உடலுறவைக் குறிக்கும் என இப்னு
அப்பாஸ் (ரழி) கூறியுள்ளார்கள்.
தடுக்கப்பட்டவற்றை
மேற்கொள்வோர் மூன்று வகையினராவர்:
1) தக்க காரணமின்றி மேற்கொண்டவர். அவர் குற்றவாளி
என்பதுடன் அதற்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்.
2) நோயின் காரணமாக தலையை மழிப்பது போன்ற தக்க
காரணத்தால் மேற்கொண்டவர், இவர் மீது குற்றமில்லை. ஆயினும்
பரிகாரம் செய்ய வேண்டும்.
3) உறக்கம், மறதி, அறியாமை, நிர்பந்தம் போன்ற
காரணங்களால் மேற்கொண்டவர், அவர் மீது குற்றமில்லை.
தடுக்கப்பட்டவற்றில் முடியை அகற்றுவது, நகங்களைக் களைவது,
நறுமணம் பூசுவது, உடலுறவு அல்லாத ஆபாச செயல்கள், ஆண்கள்
தையலாடை அணிதல் மற்றும் தலையை மறைத்தல், பெண்கள்
முகமூடியையோ கையுறைகளையோ அணிதல் ஆகியவற்றில் ஏதேனுமொன்று
மேற்கொள்ளப்பட்டால் அதற்கு மூன்று பரிகாரங்களில் ஒன்றை
நிறைவேற்ற வேண்டும். அவை:
(அ) ஓர் ஆட்டைப் பலியிட்டு அதனை ஏழைகளுக்குப் பங்கிட
வேண்டும், பலியிடுபவர் அதிலிருந்து உண்ணக்கூடாது.
(ஆ) ஓர் ஏழைக்கு அரை ஸாவு (1¼ கிலோ) வீதம் ஆறு ஏழைகளுக்கு
உணவு வழங்க வேண்டும்.
(இ) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.
தடுக்கப்பட்டவற்றில் சில, மேற்கண்ட சட்டங்களிலிருந்து
விலக்குப் பெறுகின்றன:
1- திருமண ஒப்பந்தம். இது தடுக்கப்பட்டதுதான்
என்றாலும் அதைச் செய்தால் அதற்காகப் பரிகாரம் செய்ய
வேண்டியதில்லை.
2- வேட்டைப் பிராணிகளைக் கொள்ளுதல். தடுக்கப்பட்ட
இதனை வேண்டுமென்றே மேற்கொள்பவர் தாம் கொன்றதற்குப் பகரமாக
அதற்கு ஈடான ஒன்றைப் பலியிட வேண்டும்.
3- உடலுறவு. தடுக்கப்பட்டவற்றில்
மிகப்பெரியது இதுவே. இதில் இரு நிலைகள்:
முதல் நிலை:
-
முதல் விடுப்புக்கு (பத்தாம்
நாள் இஹ்ராமைக் களைவதற்கு) முன்பு இது நிகழ்ந்தால்
அதற்கான சட்டம். 1- ஹஜ் நிறைவேறாது 2- ஹஜ்ஜின்
கிரியைகளை முழுமைப்படுத்தியாக வேண்டும் 3- அடுத்த ஆண்டு
அதைக் களா செய்ய வேண்டும் 4- ஓர் ஒட்டகத்தைப் பலியிட்டு
ஹரமில் உள்ள ஏழைகளுக்கு வழங்கி பரிகாரம் காண வேண்டும்
5- குற்றவாளியாகுவதால் அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா
செய்ய வேண்டும்.
-
இரண்டாம் நிலை: முதல்
விடுப்பிற்குப் பிறகு உடலுறவு நிகழ்ந்திருந்தால்.
இதனால் ஹஜ் நிறைவேறிவிடும். ஆனாலும் ஓர் ஆட்டைப்
பலியிட வேண்டும். இதில் பெண்ணுக்கும் இதே சட்டம்தான்,
நிர்பந்தமின்றி சுயமாக இணங்கியிருந்தால்.
எச்சரிக்கை: சிலர் ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்வது
அல்லது உழைப்பது தடுக்கப்பட்டுள்ளது என்றோ அதனால் ஹஜ்ஜின்
நன்மைகள் குறைந்துவிடும் என்றோ கருதுகின்றனர். ஆனால்
அவ்வாறொன்றுமில்லை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் இரட்சகனிடமிருந்து நீங்கள்
அருளைத் தேடுவதில் எந்தக்குற்றமும் உங்கள் மீது இல்லை.
(2:189).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
மக்கள் முதல் ஹஜ்ஜின்போது மினா,
அரஃபா, துல் மஜாஸ் சந்தை ஆகிய பகுதிகளில் வியாபாரம் செய்து
வந்தனர். பிறகு அது தடுக்கப்பட்டுவிட்டது என்று அஞ்சினர்.
அப்போதுதான் இந்த வசனம் இறங்கிற்று. (புகாரீ,
முஸ்லிம்).
|