|
ஹஜ்-உம்ரா செய்பவர்கள் மேற்கொள்ள
வேண்டிய பொதுவான அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம். அவைபோக
உம்ரா செய்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய அம்சங்களாக:
1- நிய்யத் செய்து இஹ்ராமில் நுழைந்ததும் நபி (ஸல்) அவர்கள்
கூறிய தல்பியாவை - லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்க லப்பைக்க
லா ஷரீக்க லக லப்பைக்க இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல்
முல்க் லாஷரீக்க லக - கூற வேண்டும்.
மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வலது காலை முன் வைத்து அதில்
நுழையும்போது பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா
ரஸூலில்லாஹி அவூது பில்லாஹில் அளீம் வ பிவஜ்ஹிஹில் கரீம்
வஸுல்தானிஹில் கதீம் மினஷ்ஷைத்தானிர்ரஜீம்,
அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக்க என்று ஏனைய
மஸ்ஜிதுகளில் நுழையும்போது ஓதுவதைப் போல ஓதிக்கொள்ள
வேண்டும். பிறகு கஃபாவை அடைகின்ற வரை தல்பியாவைத் தொடர
வேண்டும். 2- கஃபாவை அடைந்ததும்
தல்பியாவை நிறுத்திவிட்டு ஹஜருல் அஸ்வதிற்கு நேராகச் சென்று
பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் அல்லது அல்லாஹு அக்பர்
என்று கூறிக்கொண்டு அதை வலக்கையால் தொட்டுத் தடவ வேண்டும்.
இயன்றால் முத்தமிட வேண்டும். கூட்ட நெரிசலில் பிறருக்குத்
தொல்லை கொடுக்கக்கூடாது. முத்தமிட இயலாதபோது கையாலோ கைத்தடி
போன்றவற்றாலோ அதைத் தொட்டு தொட்டதை முத்தமிட்டுக்கொள்ள
வேண்டும். அதுவும் இயலாதபோது அல்லாஹு அக்பர் கூறி
எதைக்கொண்டேனும் அதை நோக்கி இஷாரா - சைகை செய்ய வேண்டும்.
சைகை செய்ததை முத்தமிட வேண்டியதில்லை. தவாஃப்
நிறைவேறுவதற்கு பெருந்தொடக்கு மற்றும் சிறுதொடக்கிலிருந்து
சுத்தமாகியிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். ஏனெனில்
தவாஃபு என்பது தொழுகையைப் போன்றதாகும், ஆயினும் தவாஃபில்
பேசுவதற்கு அனுமதியுள்ளது.
3- கஃபா, இடது புறமாக இருக்குமாறு அதை ஏழு முறை வலம் வர
வேண்டும். ருக்னுல் யமானிக்கு நேராக வந்ததும் இயன்றால்
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி வலக்கையால் அதைத்
தொட்டுக்கொள்ள வேண்டும்; முத்தமிட வேண்டியதில்லை. அது
சிரமமாகத் தெரிந்தால் அதை விட்டுவிட்டு தவாஃபைத் தொடர
வேண்டும். அதை நோக்கி சைகை செய்யவோ தக்பீர் கூறவோ கூடாது.
ஆனால் ஹஜருல் அஸ்வதைப் பொருத்தவரை நாம் ஏற்கனவே
கூறியிருப்பதைப் போல அதைக் கடக்கும்போதெல்லாம் தொட்டு
முத்தமிட்டு தக்பீர் கூற வேண்டும். அல்லது சைகை செய்து
தக்பீர் கூற வேண்டும். ஆண்கள் தவாஃபுல் குதூமில் முதல்
மூன்று சுற்றுக்களில் நெருக்கமாக அடிகளை எடுத்துவைத்து
சற்று வேகமாக விரைவது விரும்பத்தக்கது. அதுபோல ஆண்கள்
தவாஃபுல் குதூமின் எல்லா சுற்றுக்களிலும் மேலாடையின் வலது
பாகத்தை இடது கையின் அக்குள் வழியாக எடுத்து அதை இடது
தோளின் மீது போட்டு வலது புறத்தைத் திறந்து வைத்திருப்பதும்
விரும்பத்தக்கதாகும். இந்தச் சுற்றுக்களில் இயன்றவரை திக்ரு
மற்றும் துஆக்களை அதிகமதிகம் ஓதிக்கொள்வதும் நல்லது.
தவாஃபின் போது ஓதுவதற்கென்று எந்த துஆவும் திக்ரும்
குறிப்பிடப்படவில்லை. எனவே விரும்பிய துஆக்களை, திக்ருகளை
அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்து
சுற்றுகளிலும் ருக்னுல் யமானிக்கும் ஹஜருல்
அஸ்வதுக்குமிடையே
رَبَّنَا آتِنَا
فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْآخِرَةِ حَسَنَةً
وَّقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வ ஃபில்
ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்'| என்ற துஆவை
ஓதிக்கொள்ள வேண்டும்.
ஏழாவது சுற்றின் முடிவில் ஹஜருல் அஸ்வதைத் தொட்டோ
முத்தமிட்டோ சைகை செய்தோ தக்பீர் கூறி தவாஃபை முடித்ததும்
மேலாடையைச் சரிசெய்து வலது தோளையும் மறைத்து அணிந்துகொள்ள
வேண்டும்.
பைத்துல்லாஹ்வை வலம் வருதல்:
4- பிறகு இயன்றால் மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால்
இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இயலாதபோது பள்ளியின் எந்தப்
பகுதியில் வேண்டுமானாலும் தொழலாம். சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப்பின்
முதல் ரக்அத்தில் சூரத்துல் காஃபிரூனும் இரண்டாவது
ரக்அத்தில் சூரத்துல் இக்லாஸும் ஓதுவது மிகவும் சிறந்தது.
வேறு சூராக்களை ஓதினாலும் தவறில்லை. ஸலாம் கொடுத்ததும்
முடிந்தால் ஹஜருல் அஸ்வதை வலது கையால் தொட்டு முத்தமிடலாம்.
மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் தொழுதல்:
5- பிறகு ஸஃபா பக்கமாகப் போய் அதில் ஏறி (இயன்றால் ஏறுவதே
நல்லது) நின்று கொண்டு ஸயீயை ஆரம்பிக்கும் முன்பு إِنَّ
الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ 'இன்னஸ் ஸஃபா
வல் மர்வத்த லில்லாஹ்...' (2:158) என்ற வசனத்தை ஓத வேண்டும்.
கிப்லாவை முன்னோக்கி நின்றுகொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்து
தக்பீர் கூறி பிறகு,
لاَ إِلَهَ إِلاَّ
اللهُ وَاللهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ
لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهًوَ
عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ
وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ
الْأَحْزَابَ وَحْدَهُ
'லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு
வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா
குல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ் அன்ஜஸ
வஃதஹ் வ நஸர அப்தஹ் வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்' என்று
ஓதுவது விரும்பத்தக்கதாகும். பிறகு கைகளை உயர்த்தி இந்த
திக்ருகளைiயும் துஆக்களையும் மும்முறை ஓத வேண்டும். பிறகு
அங்கிருந்து இறங்கி மர்வாவை நோக்கி முதல் பச்சைக் கம்பம்
வரை நடக்க வேண்டும். பிறகு அங்கிருந்து இரண்டாவது
பச்சைக்கம்பம் வரை சற்று விரைய வேண்டும். பெண்கள் ஓட
வேண்டியதில்லை. பிறகு மர்வாவை வந்தடைந்ததும் அதில் ஏறி (அதுவே
சிறந்தது) நின்றுகொண்டு ஸஃபாவில் செய்தது போலவே (ஆயத்
ஓதுவதைத் தவிர மற்றவற்றைச்) செய்ய வேண்டும். இதுவெல்லாம்
ஆரம்பமாக ஸஃபா-மர்வாவில் ஏறும்போது மட்டும்தான். பிறகு
அங்கிருந்து இறங்கி மர்வாவை நோக்கி வரும்போது
பச்சைக்கம்பங்களுக்கிடையே சற்று விரைய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வா வரை ஓர் ஓட்டம், மர்வாவிலிருந்து ஸஃபா
வரை மறு ஓட்டம் என இவ்வாறு ஏழாவது ஓட்டம் மர்வாவில்
முடிவடையும். அவசியப்பட்டால் வாகனத்தில் சவாரி
செய்துகொண்டும் ஸயீ செய்யலாம். ஸயீயின்போது இயன்ற அளவுக்கு
திக்ரு, துஆக்களை அதிகப்படுத்திக் கொள்வதும் சிறு
தொடக்கிலிருந்து தூய்மையாகிக் கொள்வதும் விரும்பத்
தக்கவையாகும். சிறு தொடக்கிலிருந்து தூய்மையாகா விட்டாலும்
அதாவது உழூவின்றியும் ஸயீ செய்யலாம்.
ஸஃபா – மர்வாவுக்கிடையே ஸயீ செய்தல்:
6) ஸயீ முடிந்ததும் தலைமுடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ
வேண்டும். முழுமையாக மழிப்பதே சிறந்தது. ஆனால் ஹஜ்ஜுக்
காலத்தில் உம்ராவுக்கு வந்திருந்தால் ஹஜ்ஜிற்காகவும் முடியை
எடுக்க வேண்டியதிருப்பதால் இப்போது முடியைக் குறைப்பதே
சிறந்தது. பெண்கள் தங்கள் முடியின் நுனியில் நகக் கண்
அளவுக்கு அல்லது அதைவிடக் குறைவாக வெட்ட வேண்டும்.
இஹ்ராம் அணிந்திருப்பவர் மேற்கண்ட இந்தக் காரியங்களைச்
செய்து முடித்துவிட்டால் அவரது உம்ரா நிறைவேறி விடும்;.
அல்ஹம்து லில்லாஹ்!
உம்ராவின் ருக்னுகள் மற்றும் வாஜிபுகள் பற்றிய
சுருக்கம்:
உம்ராவின் ருக்னுகள்: (1) இஹ்ராம் அணிதல் (நிய்யத்) (2)
தவாஃபு (3) ஸயீ.
அதன் வாஜிபுகள்: (1) மீக்காத்தில் இஹ்ராம் அணிதல் (2)
முடியை மழிப்பது அல்லது குறைப்பது.
|