|
அய்யாமுத் தஷ்ரீக்கில் மினாவில்
தங்குதல்:
1- பெருநாள் தினத்தன்று தவாஃபும் ஸயீயும் செய்தபின்
மினாவுக்கு வந்து 11, 12, 13 (தாமதித்தவருக்கு மட்டும்)
ஆகிய இரவுகளில் தங்குவது வாஜிபாகும்.
2- இம்மூன்று தினங்களிலும் மூன்று ஜமராக்களுக்கும் தலா ஏழு
கற்கள் வீதம் எறிய வேண்டும். ஆனால் இதற்கான நேரம் சூரியன்
உச்சியிலிருந்து சாய்ந்த பின்புதான் தொடங்குகின்றது. ஆக
ஒவ்வொரு நாளும் 21 கற்கள் வீதம் மூன்று ஜமராக்களுக்கும்
எறிய வேண்டும்.
3- முதலில் கைஃப் மஸ்ஜிதுக்கருகிலுள்ள முதல் ஜமரா, பிறகு
நடு ஜமரா, பிறகு பெரிய ஜமரா என வரிசையாக எறிய வேண்டும்.
முதலாவது மற்றும் இரண்டாவது ஜமராக்களுக்குக் கல்லெறிந்த
பிறகு கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது
விரும்பத்தக்கதாகும். பெரிய ஜமராவுக்குப் பிறகு துஆ செய்ய
வேண்டியதில்லை. இவ்வாறே மூன்று தினங்களும் கல்லெறிய
வேண்டும்.
4- 12ஆம் நாள் கல்லெறிந்த பின்பு பயணம் மேற்;கொள்ள
விரும்புபவர் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு அங்கிருந்து
புறப்பட்டு ஹரமுக்கு வந்து தவாஃபுல் விதாஃ செய்துவிட்டு
ஊருக்குப் புறப்படலாம். அல்லது 12-ஆம் நாளும் மினாவில்
தங்கி கல்லெறிந்துவிட்டு பிறகுப் பயணமாகலாம். இதுவே
சிறந்ததாகும். அல்லாஹ் கூறுகிறான்: 'இரண்டு தினங்களில் யார்
அவசரமாகப் புறப்படுகின்றாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை.
யார் தாமதிக்கின்றாரோ அவர்மீதும் எந்தக் குற்றமுமில்லை.
தக்வாவுடையவர்களுக்கு இதுவே நன்று!' (2:203).
5- 12ஆம் நாள் கல்லெறிந்துவிட்டுப் பயணமாக விரும்புபவர்
சூரியன் மறையும் முன்பு மினாவிலிருந்து வெளியேற வேண்டும்.
புறப்படும் முன் சூரியன் மறைந்துவிட்டால் அன்றைய தினம்
மினாவிலேயே இரவு தங்க வேண்டும். 13-ஆம் நாள் கல்லெறியவும்
வேண்டும்.
குறிப்புகள்:
(1) கல்லெறிய வேண்டிய நேரம் சூரியன் உச்சியிலிருந்து
சாய்ந்த பிறகு ஆரம்பித்து அது மறைவதோடு முடிவடைகின்றது.
அவசியப்பட்டால் இரவிலும் எறியலாம். ஏனெனில் 'மேய்ப்பவன்
இரவில் கல்லெறிவான் பகலில் மேய்ப்பான்'|என்பது நபி மொழி.
(2) முதுமை, வியாதி, சிறு பிராயம் போன்ற அச்சம் மற்றும்
இயலாமை ஏற்பட்டாலேயொழிய கல்லெறிவதற்குப் பிறரைப்
பொறுப்பாளியாக்கக் கூடாது. பொறுப்பாளி தமக்காக முதல்
ஜமராவில் எறிந்த பின்பு பொறுப்புச் சாட்டியவருக்காக எறிய
வேண்டும் இவ்வாறே ஏனைய ஜமராக்களிலும் நடந்துகொள்ள வேண்டும்.
(3) ஜமராக்களில் முதலில் சிறியது பிறகு நடுத்தரமானது
அடுத்து பெரியது என்ற வகையில் கல்லெறிவதில் வரிசைக் கிரமம்
அவசியம்.
(4) ஹஜ்ஜின் அனைத்து அமல்களும் முடிந்து ஊருக்குப்
பயணமாகும்போது 'தவாஃபுல் விதா' செய்வது கட்டாயமாகும். அது
மாதவிடாய், பேற்றுத் தொடக்கு ஏற்பட்டவர்கள் மீது கடமையில்லை.
இத்துடன் ஹஜ்ஜின் கிரியைகள் நிறைவுறுகின்றன. |