|
பாத்திமா முஜாஃபர் முஸ்லிம் பெண்கள் மத்தியிலிருந்து புறப்பட்டிருக்கும்
புதுவெள்ளம். வேகமான மேடைப்பேச்சாளர். புரட்சிகர கருத்துகளோடு அரசியல் பேசும்
இவர், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் மாநில மகளிர் அணி அமைப்பாளர். பெண்கள்
மீது திணிக்கப்பட்டிருக்கும் மூடத்தனங்களை தகர்த்தெறியும் துடிப்பு இவரது
பேச்சில் தெறிக்கிறது. அரசியலில் இருக்கும் அதே ஆர்வம், ஈடுபாட்டை கணவருடன்
இணைந்து டிராவல் ஏஜென்சி நடத்துவதிலும் காட்டுகிறார். குடும்பம், அரசியல்,
சமூகம் பற்றிய அவருடைய மதிப்பீடுகள்....
உங்க அப்பா அரசியல் தலைவர், பொதுவாக அப்படிப்பட்டவர்களின் குடும்பத்தில்
வளர்ப்புமுறை சாதாரண குடும்பங்களைவிட மாறுபட்டிருக்கம். சில குழந்தைகள்
மாதத்தில் ஓரிரு நாட்கள்தான் அப்பாவை பார்க்க முடியும். நீங்கள் எப்படி?
நான் ஐந்தாவது பொண்ணு. அப்பா அப்துல் சமதுவை எல்லாருக்கும் தெரியும். இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருந்தவர். மூணுமுறை எம்.பி.யாவும்
ஒரு தடவை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். அம்மா வசதியான குடும்பம். அவங்க
தாய்மொழி உருது. அப்பா தமிழ். ஆனா தாத்தாவுக்க (அம்மாவின் அப்பா) அப்பா
நம்பிக்கை. அதனால் மொழிபற்றி கவலைப்படாம அம்மாவை திருமணம் செய்து
கொடுத்திருக்கிறார். அம்மா பாவம், தமிழ் தெரியாததால் திருமணமாகி 40 நாள்
வரைக்கும் அப்பாவுடன் பேசவே இல்லையாம்! அப்புறமா தமிழ் கற்றுக்கொண்டு
பேசியிருக்கிறார்.
மூன்று அண்ணா. ஒரு அக்கா என்கூட பிறந்தவங்க. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம ஒரே
மாதிரிதான் வளர்ந்தோம். அம்மா கண்டிப்பா இருப்பாங்க. ஆனா குழந்தைகள்தானேனு
இல்லாம மரியாதையாகவும் நடத்துவாங்க. பெண்கள்னா வீட்டோடதான் இருக்கனும்னு அடக்கி
வைத்தது கிடையாது. சர்ச்பார்க் கான்வென்ட்ல படிச்சேன். அப்புறம் சென் மைக்கேல்
அகடமியில் அப்பா சேர்த்து விட்டார். அது கோ-எட் அகடமி. அப்பாவோட நண்பர்
ஆரம்பித்திருந்தார். அவரை ஊக்கப்படுத்த என்னை அங்கே படிக்கவைத்தார். ஐயோ பெண்ணை
கோ-எஜுகேஷன் ஸ்கூல்ல சேர்க்கிறாயே... பிரச்சினையாக போகுது'னு சில பேர்
கேட்டாங்க. 'என் குழந்தைகளுக்கு கலாசாரம், குடும்ப பாரம்பரியம் தெரியும்.
வழிதவற மாட்டாங்க'னு அப்பா சொல்வார். அந்த நம்பிக்கைதான் எங்களுக்கு நாங்களே
பொறுப்பா வளர உதவியா இருந்தது.
படிக்கும்போதே அரசியல் ஆர்வம் இருந்ததா?
1992ல் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தை பிறக்கும் வரை வீட்டில்தான்
இருந்தேன். கணவர் முஜஃபர் அகமது டிராவல் ஏஜென்சி வைத்திருந்தார். 'ஏன் உன்
திறமைய வீணடிச்சிட்டு வீட்ல இருக்க? ஆபீஸுக்கு வா'னு சொல்வார்.
அம்மா உடல்நிலை சரியில்லை. அவரையும் குழந்தைகளையும் பார்த்துக்கவே நேரம் சரியா
இருந்தது. அம்மா இறந்தபின் மனசு பாரமா இருந்தது. கணவர் அலுவலகத்துக்குப் போக
ஆரம்பித்தேன். அப்போதுதான் வெளியுலக மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைச்சுது. 99ல்
கட்சியின் பொன்விழா நடந்தது. மகளிர் அணியை உருவாக்கி இஸ்லாமியப் பெண்களை
அரசியலில் ஈடுபடுத்தணும்னு அப்பா மனிதில் கனவு இருந்தது. அவர் சொன்னப்போ
'முஸ்லிம் பெண்களை ஒன்று சேர்த்து மகளிர் அணியா? சாத்தியமே இல்லை'னு
சொன்னாங்க. சரி, முதலில் முஸ்லிம் பெண்களுக்கான கருத்தரங்கு நடத்துவோம்.
வரவேற்பு எப்படினு பார்த்து மகளிர் அணி பற்றி முடிவு செய்வோம் என்றார்கள்.
ஜெயந்தி நடராஜன், சற்குணபாண்டியன் மாதிரி பிரபலங்கள் வந்தாங்க. முதலில்
ஒன்றிரண்டு பெண்களா வந்தாங்க. போகப்போக அரங்கமே நிரம்பி வழிஞ்சுது. பெண்கள்
அரசியல்ல பொதுவிஷயங்கள்ல ஆர்வமாத்தான் இருந்திருக்காங்க. வழிநடத்தி ஒன்று
சேர்க்கதான் ஆளில்லைனு புரிஞ்சது. மேடைப் பேச்சுப் பழக்கம் இருந்ததால் நானும்
பேசினேன். 'மூளைக்கல்ல முக்காடு'னு தலைப்பிட்டு அடுத்த நாள் பத்திகைகள்ல என்
பேச்சை வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்கள். திடீர்னு அப்பாவுக்கு உடம்பு
சரியில்லாம ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவருக்கு நான் அரசியலுக்கு வரணும்னு
விருப்பம் இருந்தது. அப்போதும் என்னை பார்க்கும்போதெல்லாம் அதை பற்றியே பேசிக்
கொண்டிருந்தார். 31 நாள் கழித்து இறந்துவிட்டார். கட்சி பொதுக்குழு கூடியபோது
மகளிர் அணி ஏற்படுத்தி என்னை அமைப்பாளராக அறிவிச்சாங்க. அப்பா கனவு
நிறைவேறியது. கணவர் ஹஜ் யாத்திரை போயிருந்தார். வந்ததும், 'இது சாதாராண
வேலையில்லை. கல்லூரி காலம் மாதிரி ஈஸியா எடுத்துக்காதே. வழிநடத்திப் போகிற
சமூகப் பணி, கவனமா செய். எது செய்தாலும் குவாலிட்டியா செய்'னு
உற்சாகப்படுத்தினார். முடிவு எடுத்துட்டா ஜெயிக்கணும்னு நினைப்பேன்.
அப்படித்தான் அரசியலுக்கு வந்தேன்.
அலுவலகம், அரசியல், குடும்பம் எல்லாத்தையும் பார்த்துக்கறது சிரமமா இல்லையா?
எப்படி சமாளிக்கறீங்க?
அரசியலுக்கு வந்த புதுசில் மூணாவது மகள் நர்கீஸ் பாத்திமா பிறந்தா. அப்போ நிறைய
வெளியூர் நிகழ்ச்சிகள். தட்டிக்கழிக்க முடியாது. குழந்தையை தூக்கிக் கொண்டு போக
சிரமமாகத்தான் இருக்கும். தாய்ப்பால் கொடுக்க வேண்டுமே. சந்தோஷமான சிரமம்தான்.
நாங்க கூட்டுக் குடும்பம். சேர்ந்து இருப்பதால் குழந்தைகளைப் பார்த்துக்
கொள்வதில் சிரமமில்லை. நான் எந்த விஷயத்தையும் பிரச்சினையாக பார்ப்பதில்லை.
சந்தர்ப்பமாக பார்க்கிறேன். அவ்வப்போதைய சூழ்நிலையை சமாளிப்பது எப்படி
என்பதுதான் குறிக்கோளாக இருக்கும். அசவுகரியத்தையும் சவுகரியமாக மாற்றிக்
கொள்வது நம்ம கையில்தான் இருக்கிறது.
மகளிர் அணி என்ன செய்கிறது?
பெண்களுக்கு எதிராக எங்கே கொடுமை நடந்தாலும் மகளிரணி தட்டிக் கேட்கும்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்கு வந்த பெண்களுக்கு
ஊழியர்களால் நடந்த கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். தனிப்பட்ட
குடும்பப் பிரச்சினைகளையும் கவுன்சிலிங் மூலம் தீர்த்து வைக்கிறோம்.
சுயவேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். வறுமைக் கோட்டுக்குக் கீழே
இருக்கும் பெண்கள் ஊறுகாய், அப்பளம் போட்டு விற்க நிதியுதவி செய்கிறோம்.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
இப்படியொரு தவறான கருத்து முஸ்லிம்களிடமும் இருக்கிறது. மற்றவர்களிடமும்
இருக்கிறது. ஆனால் தவறான பார்வை. குர்ஆன் ஆணையும் பெண்ணையும் சமமாகத்தான்
பார்க்கிறது. கல்வி உரிமை, சமுதாய உரிமை கட்டாயம் பெண்ணுக்கு வேண்டும்
என்கிறது. பெண்சிசுக் கொலை, ஆண்சிசுக் கொலை, வரதட்சணை எல்லாமே தவறு என்கிறது.
அதை புரிந்து கொள்ளாத மக்கள் பெண் வயசுக்கு வந்தவுடனே பள்ளியை விட்டு நிறுத்தி
விடுகிறார்கள். அது ரொம்ப தப்பு, பெண்ணுக்கு கல்வி மிகமிக அவசியம்.
போன் மூலம் தலாக், தந்தி மூலம் தலாக் இப்படி சில சர்ச்சைகள் வந்திருக்கின்றன.
எளிமையான இந்த விவாகரத்து முறையினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களே?
இப்படி தலாக் சொல்வதும் இஸ்லாமிய கோட்பாடை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்
செய்வது. கணவன் மனைவி விடயம் அந்தரங்கமானது; அதை பொதுவில் கொண்டுபோய்
பேசவேண்டாம் என்பதற்காகத்தான் தலாக் முறையே வந்தது. ஆனால், தொடர்ந்து மூன்று
முறை தலாக் சொல்லி பிரிந்துவிடுவது, போன் மூலம் தலாக் சொல்வது இதெல்லாம்
இஸ்லாம் அனுமதிக்காதவை. ஒருத்தருக்கு ஒருத்தர் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை
என்றால் மதப்பெரியவர்கள் தலையிட்டு சமரசப்படுத்த வேண்டும். அது பலன்
தராவிட்டால் ஒரு மாதவிடாய் காலத்திற்கு ஒரு தலாக் மதப் பெரியவர்கள்
முன்னிலையில் சொல்ல வேண்டும். அதற்கு சாட்சியும் இருக்க வேண்டும். பொருளாதார
பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யாமல் தலாக் மூலம் விவாகரத்து செய்தால், அந்தப்
பெண் ஷரியத் கோட்பாட்டின்படி முஸ்லிம் தனி சட்டத்தின் கீழ் கோர்டில் கேஸ்
போட்டு உரிமை பெறலாம்.
மத ரீதியான வன்முறை அதிகமாகிறதே?
எப்பவுமே வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல்
பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள். விதவையாகிறார்கள், அநாதையாகிறார்கள். குஜராத்
கலவரம் நடந்தபோது ஒருவாரம் நான் தூங்கவே இல்லை. இப்போது அங்கே கோயிலில் நடந்த
வன்முறை நெஞ்சை உலுக்குகிறது. ஜனங்களுக்கு பாதகம் செய்பவன் உண்மையான முஸ்லிமே
கிடையாது. ஒருவன் தன் உயிரையையே பணயம் வைக்க முன்வருகிறான் என்றால் அவனுக்கு
பாதகம் ஏதோ ஏற்பட்டிருக்கும். தீவிரவாதிகள் அவனை பயன்படுத்தி நாசவேலை
செய்கிறார்கள். இதை ஒழிக்க வேண்டும் என்றால் நாடு தழுவிய ஓர் அமைப்பை உருவாக்கி
மக்களிடம் வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நன்றி : அவள் (விகடன்)
|
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை. |