மகளிர் கல்வி

தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

ஆற்காடு பெளஸியா தபஸ்ஸூம்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 'வறுமை ஒழித்தல' என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமது ஆய்வை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் சமர்பித்து தங்கபதக்கம் பெற்ற சாதனை மாணவி பெளஸியா சமரசம் இதழுக்கு (ஜூலை 2005) அளித்தப் பேட்டியை இங்கு வெளியிடுகிறோம். செல்வி பொஸியாவிற்கு இதுதான் இஸ்லாம் இணைய குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பேட்டி:

எங்கள் குடும்பம் கூட்டு குடும்பமாகும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் ஆரம்ப காலம் முதல் படிப்பில் ஆர்வம் கொண்டு படித்து வந்தேன். என்னுடைய படிப்பிற்கு பல விதங்களில் என்னுடைய மாமா நௌஷாத் மற்றும் சித்தி சயிதுன்னிசா உதவியாக இருந்தார்கள். படித்து பல விதங்களில் சாதனைப் புரிய வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்தது. கல்வியறிவு பெறுவதை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. பெண்களுக்கு இதில் பெரும் பங்கு உண்டு என்பது என் சிந்தனையில் நிலைத்து நின்றது. பல கட்டுப்பாடுகள் தடைகள் இருந்தாலும் நாம் கல்வியறிவு பெற்று மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்க வேண்டும் என எனக்குள் பல நேரம் சொல்லிக் கொள்வேன்.

எனது முதுகலைப்பட்டம் பொருளாதாரத்தில் முடிந்ததும் எம். பில் ஆய்வு படிப்பிற்காக நான் மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடு அதன் காரணமாக வறுமை எப்படி ஒழிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய விருப்பம் கொண்டு அந்த பணியில் கடந்த 18 மாதங்களாக உழைத்து என்னுடைய ஆய்வை பல்கலைகழகத்தில் சமர்பித்து அதற்காக தங்கப்பதக்கம் பெற்றேன். என்னுடைய ஆய்வில் எனக்கு பெரிதும் துணையாக இருந்த பேராசிரியர் ஹரிஹரன், திருமலை டிரஸ்ட் பூமா பார்த்தசாரதி, மோகன் மற்றும் தனியாக மகளிர் சுய உதவி குழுக்களை நடத்தும் ராஜேஸ்வரி ஆகியோருக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

என்னுடைய ஆய்வில் பல விஷயங்களை அறிய முடிந்நது. நான் வாலாஜா பகுதியில் மொத்தம் 15 மகளிர் குழுக்களை ஆய்வு செய்தேன். ஒவ்வொருக்குழுவிலும் மொத்தம் 20 பேர் இருந்தனர். 18 வயது முதல் 65 வயது வரையுள்ள பெண்கள் சேர்ந்து பயனடைந்து வருவதை அறிய முடிந்தது. இதில் படிக்காதவர்கள் 39 சதவிகிதம்பேர் இருந்தனர். ஆரம்ப கல்விக் கற்றவர்கள் 18 சதவிகிதமும் நடுத்தர கல்விக் கற்றவர்கள் 15 சதவிகிதமும் 10ம் வகுப்பு படித்தவர்கள் 25 சதவிகிதமும் மேனிலை படிப்பை முடித்தவர்கள் 8 சதவிகிதம் பேரும் இருந்தனர். பலர் இந்தக் குழுக்களில் ஆர்வத்துடன் சேர்ந்து ஆரம்பத்தில் தங்களுடைய பங்களிப்பாக ஒரு சிறு தொகையை செலுத்தி வருகிறார்கள். மேலும் அடிக்கடி நடக்கும் ஆலோசனைக் கூட்டங்கறில் கலந்துக் கொண்டு பயன்பெறுகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் ஆளுமை திறன் வளர்கிறது எனலாம். இப்படி படிப்படியாக தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பெண்கள் ஒரே வருடத்தில் வங்கி மூலம் கடன் உதவிப் பெறுகிறார்கள். வங்கியில் கடன் பெறும் இவர்களுக்கு அவர்கள் ஆரம்பிக்க போகும் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் கிடைத்து விடுகின்றன. இதனால் இவர்களால் தொழிலை துணிச்சலுடன் செய்ய முடிகிறது எனலாம.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 3627 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 60,095 பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டு பலவிதங்களில் பலன் பெற்று வருகிறார்கள். இவர்கள் பல எளிமையான தொழில்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள். குறிப்பாக அகர்பத்தி செய்தல் பால் சம்பந்தப்பட்ட பொருள்களை தயார் செய்தல், சிறிய பெட்டிக் கடை வைத்தல், புடவை வியாபாரம் செய்தல், தையல் தொழில், டிபன் சென்டர், பேப்பர் கப் தயாரித்தல் என பல தொழில்களை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள். என்னுடைய ஆய்வில் ரூ 100 முதல் 500 வரை 23 பேரும், 500 முதல் 1000 வரை 45 பேரும், 1000 முதல் 2000 வரை 21பேரும், 2000 முதல் 3000 வரை 9 பேரும், 3000 முதல் 4000 வரை 2பேரும் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கிறார்கள் என்பதை அறிந்தேன். இதன் காரணமாக இவர்களின் வாழ்க்கைத் தரம் முன்பை விட உயர்ந்துள்ளது.

இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களில் முஸ்லிம் பெண்கள் மிக குறைவாகவே உள்ளனர். பலர் இந்தக் குழுக்களின் நன்மைகளை இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் அறிவு பெறுவதுடன் வங்கிக் கடன் மிக எளிமையாக கிடைக்கின்றது. மேலும் கடனை மிக எளிதாக திருப்பி செலுத்தும் வாய்ப்பும் உள்ளது. எனவே முஸ்லிம் பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இத்தகைய மகளிர் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் நல்ல தொழில் நுட்ப அறிவை பெறுவதுடன் சுயமாக ஒரு தொழில் தொடங்க வாய்ப்புள்ளதை அறிந்து அதற்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும்.

இதன் காரணமாக அவர்களின் வறுமை ஒழிவதுடன் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்புள்ளது. இந்தக் குழுக்கள் மூலம் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக முஸ்லிம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வழியாக தொழிற் அறிவு பெறுவதுடன் மார்க்கமும் கற்க வாய்ப்புகள் ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் நிறுத்த வேண்டும்.

இஸ்லாம் பெண்களுக்கு தேவையான அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளது. கல்விக் கற்பது - தொழிற் செய்வது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதை முஸ்லிம் பெண்கள் கவனத்தில் வைக்க வேண்டும். மார்க்கம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பெற - அதை பயன்படுத்த தீவிரமாக அதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நம்முடைய வாழ்க்கைத் தரம் உயரும். அதன் காரணமாக நாம் அமைதியான வாழ்வை வாழ்வதுடன் இஸ்லாமிய பண்புகளை வாழ்வில் கடைப்பிடிக்கவும் வாய்ப்புக் கிட்டும்.

இத்தகைய குழுக்களை உருவாக்க முனையும் ஆர்வமுள்ள முஸ்லிம் பெண்களுக்கு நான் கண்டறிந்த செய்திகளை பகிர்ந்துக் கொள்வதுடன் எந்த விதத்தில் நடத்துவது என்பதையும் தெரிவிக்க ஆர்வத்துடன் உள்ளேன்.

இஸ்லாமிய பெண்கள் கல்வியறிவு பெறுவதுடன் எளிமையான முறையில் வருமானம் கிடைக்கக் கூடிய பாதுகாப்பான இத்தகைய மகளிர் குழுக்களை ஆரம்பித்து அதன் மூலம் நல்ல பயன் அடைய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம் பெண்கள் கவனம் செலுத்தி வாய்ப்புகளை முழுமையாக பபயன்படுத்தி சிறப்பான முறையில் செயல் புரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

முஸ்லிம் பெண்கள் குழுக்களாக இதில் ஈடுபட்டால் வறுமை ஒழியும், குடுமத்பத்தில் வளம் பெருகும், வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கும், சேமிப்பு வளரும் இந்த நான்கும் கிடைத்தால் நிச்சயமாக ஒரு நல்ல நிலைக்கு நம்முடைய பெண்கள் வரலாம் என்பதுதான் எனது முயற்சியில் - ஆய்வில் நான் கண்ட உண்மையாகும்.

இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த வாழ்வை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். தினமும் ஐந்து வேளை தொழுவதுடன் குர்ஆனை தமிழில் பொருளறிந்து படித்துவருகிறேன். முதலில் என்னை முழுமையாக அறிந்து நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் பிறகு பெண்களின் முன்னேற்றத்திற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் என்னை நானே தயார்படுத்திக் கொண்டு வருகிறேன். மேலும் சிவில் சர்விஸ் தேர்வில் கவனம் செலுத்தவும் ஆர்வம் கொண்டுள்ளேன். இறைவனின் விருப்பம் எப்படியோ அப்படியே நடக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை என்று பொஸியா தமது பேட்டியில் குறிப்பிட்டார்.

சகோதரி பொஸியாவின் உயர்ந்த எண்ணங்கள் நிச்சயம் நிறைவேற வேண்டும். அதன் காரணமாக மற்ற மகளிர்கள் பாடம் பெற்று தங்களுடைய வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என்ற தப்பான எண்ணம் களையப்பட வேண்டும்.
 

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த...

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை.

www.tamilmuslim.com