| பதில்கள் - 32 |
|
கேள்வி பதில் தொகுப்பு - 33 |
406) கேள்வி - அன்புடையீர் எனது நண்பர் தனது நண்பர் வசம் தொழுகையைப்பற்றி எடுத்துக்கூற அவர் அதற்கு முதலில் நீ பின்பற்றிவிட்டு பிறகு என்னிடம் சொல்லவா என்கிறார். இதற்கு விளக்கம் கொடுக்கவும் mohamed20@hotmail.com
நீங்கள் குறிப்பிட்ட இரண்டுப் பேருமே தங்களைப் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்.
பிறருக்கு இஸ்லாமிய அழைப்பை கொடுப்பவர்கள், நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் தாம் எதை சொல்கின்றோமோ அதை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஒரு காரியத்தை நம்மால் செய்யக் கூடிய சூழ்நிலை இருந்தும் அது நம்மீது கடமையாக இருந்தும் அதை செய்யாமல் அதே காரியத்தை பிறரை செய்ய சொல்வதற்கு முதலில் நாம் வெட்கப்பட வேண்டும். தொழுகை என்பது முஸ்லிம்களின் மீதான வலியுறுத்தப்பட்ட கடமைகளில் ஒன்றாகும். 'மரணத்திற்கு பிறகுள்ள மறுமை விசாரணையில் முஸ்லிம்களிடம் முதல் கேள்வி தொழுகைப் பற்றியதாகும். எவர் அதற்கு முறையான பதலளித்து விடுகிறாரோ அவரது மற்றக் கேள்விகள் இலகுவாக்கப்படும் முதல் கேள்விக்கு பதிலளிப்பதில் சிரமப்படுபவர்களுக்கு மற்றக் கேள்விகளும் கடினமாக்கப்படும்' என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
எனவே தொழுகையை அலட்சியப்படுத்துபவர்கள் பாவிகளாகவே மறுமையில் நிறுத்தப்படுவார்கள் என்பதால் முஸ்லிம்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இறைவன் பற்றிய அச்சத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்துனை அவசியமான ஒரு கடமையை ஒருவர் தாம் செய்யாமல் பிறருக்கு ஏவுகிறார் என்றால் அவர் இறைவனின் வெறுப்புகுரியவராகிறார்.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். செய்யாததை சொல்வது இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும் (அல் குர்ஆன் 61:2,3)
இரண்டு விதமான சொற்சொடர்களை இந்த வசனம் தடுக்கின்றது.
ஒன்று. தாம் செய்யாததை செய்ததாகக் கூறி பெருமையடித்துக் கொள்வது
இரண்டு தாம் செய்யாமல் பிறரை செய்யும் படி தூண்டுவது.
இஸ்லாத்தைப் பொருத்தவரை எடுத்துச் சொல்வதை விட வாழ்ந்துக் காட்டுவதே மிக சிறந்த செயலாகவும் முன்மாதிரியாகவும் கருதப்படும்.
தொழாதவர்கள் பிறரை தொழுகைக்கு போகச் சொல்வது, செல்வம் இருந்தும் ஜகாத்தோ தர்மமோ செய்யாதவர்கள் தான தர்மங்களுக்கு பிறரை தூண்டுவது. பிரித்தாள்பவர்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது போன்றவை வெறும் நடிப்பான வார்த்தைகளாகி விடும். வெறும் நடிப்பாக இருப்பதால்தான் இறைவன் அதை வெறுக்கின்றான்.
இந்த உலகில் பிறருக்கு நன்மையை எடுத்துச் சொல்லி அழைத்தவர்கள், இவர்களின் அழைப்பை ஏற்று நன்மையின் பக்கம் திரும்பியவர்கள் இவர்களில் நன்மையின் பக்கம் அழைத்தவர்களில் சிலர் நாளை மறுமையில் நரகில் கிடப்பதை இவர்களின் அழைப்பை ஏற்று நன்மை செய்து சொர்க்கம் சென்றவர்கள் பார்ப்பார்கள். அப்போது 'நீங்கள் எங்களுக்கு நன்மையை ஏவினீர்களே இப்போது நரகில் கிடக்கின்றீர்களே..ஏன் என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'நாங்கள் உங்களுக்குத் தான் நன்மையை ஏவினோம் அதை நாங்கள் செய்யவில்லை அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது" என்று புலம்பி கதறுவார்கள் என்ற எச்சரிக்கையை முஹம்மத்(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளதை நாம் மறக்காமல் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனி 'நீ செய்து விட்டு என்னிடம் கூறு' என்று தத்துவம் பேசுபவர்கள் அறிவாளிகளா.. என்பதை சிந்திப்போம்.
சொல்பவர்கள் தூய்மையானவர்களாகவும் வாய்மையானவர்களாகவும் இருந்தால் தான் அவர்கள் சொல்வதை கேட்டு செயல்படுவேன் என்று முடிவெடுப்பவர்கள், தங்களை மறந்து விட்டு தங்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களின் குறைகளை அலசுபவர்கள் ஒருவித மனநோய்க்கு ஆட்பட்டவர்களாவார்கள். அந்த மனநோயின் அடையாளம் தான் "நீ முதலில் செய்து விட்டு என்னிடம் கூறு" என்ற இறுமாப்பு வெளிபாடாகும்.
தாம் தொழாதவர்கள் பிறரை தொழுகைக்கு போக சொல்கிறார்கள் என்றால் அந்த அழைப்பை ஏற்று தொழுகைக்கு சென்றால் அதனால் இவர்களுக்கு என்ன குறை வந்து விடப்போகின்றது? அழைக்கப்படும் அந்த அழைப்பு இறைவனை நோக்கிய அழைப்பாகும் என்பதை மறுக்கும் துணிவை இவர்கள் எங்கிருந்துப் பெற்றார்கள்?. தம்மை நன்மையின் பக்கம் அழைக்கக் கூடியவர்களிடம் சில குறைப்பாடுகள் இருக்கலாம். குறைப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் யார்தான் இருக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கையில் குறைப்பாடு இருக்கிறது என்பதால் அவர்களின் வார்த்தைகளும் குறைப்பாடு உடையதாகி விடுமா..?
ஷெய்த்தான் ஒரு நல்ல காரியத்தை ஏவினாலும் அதையும் ஏற்று பின்பற்றலாம் என்ற வித்தையை இஸ்லாம் நமக்கு சொல்லி கொடுக்கின்றது.
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கும் நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியில் 'யார் இரவில் ஆயத்துல் குர்ஸி' (என்ற வசனத்தை)யை ஓதுகின்றாரோ அவர் விடியும் வரை ஷெய்த்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்' என்று ஒரு திருடன் தனக்கு கற்றுக் கொடுத்ததாக அபூஹுரைரா அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறுகிறார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'சொன்னவன் பொய்யன் சொல்லப்பட்ட வார்த்தை உண்மை, ஷெய்த்தான் தான் இதை உனக்குக் கற்றுக் கொடுத்துள்ளான்" என்றார்கள். (பல ஹதீஸ் நூல்களில் இந்த சம்பவம் இடம் பெறுகின்றது) (அந்த வசனம் குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255வது வசனமாக இடம் பெற்றுள்ளது)
இந்த செய்தியில் 'சொன்னவன் பொய்யன் என்பதால் அதை புறக்கணித்து விடு' என்று நபி(ஸல்) சொல்லவில்லை. சொன்னவன் பொய்யன் என்றாலும் அவன் சொன்ன விஷயம் உண்மையானது. அவ்வாறு செய்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். ஷெய்த்தான் சொன்னதால் இதை செய்யமாட்டேன் என்று யாராவது முடிவெடுத்தால் சந்தேகமில்லாமல் அவரை மனநோயாளி என்று முடிவு செய்து விடலாம்.
எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சமயாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம். (அல் குர்ஆன் 32:22).
இறை வசனங்கள் நினைவூட்டப்பட்டப் பிறகு அவற்றை (ஆட்களை காரணம் காட்டி உட்பட) புறக்கணிக்கக் கூடாது அது இறைவனின் கோபத்திற்குரிய செயலாகி விடும் என்பதை இந்த வசனத்திலிருந்து ஐயமற விளங்கிக் கொள்ளலாம். எனவே பிறர் நம்மிடம் நன்மையை ஏவும் போது 'நீ முதலில் சரியாக இருந்துக் கொண்டு என்னிடம் கூறு' என்று மறுத்து புறக்கணிப்பது அவரை தவறான பாதையில் நிலைத்திருக்க ஷெய்த்தான் செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்றாகும். இறை நம்பிக்கையுள்ள எந்த அறிவாளியும் ஷெய்த்தானின் சூழ்ச்சிக்கு அடிபணிய மாட்டான்.
407) தஸ்பீஹ் தொழுகையை இஸ்லாம் அனுமதிக்கின்றதா... mbrahim@hotmail.com
தஸ்பீஹ் தொழுகை:
நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கக்கூடிய இந்த தஸ்பீஹ தொழுகையைப் பற்றி கூறும்
ஹதீஸ்கள் அபூதாவூத், திர்மிதி, ஹாக்கிம், இப்னுமாஜா ஆகிய
நூல்களில் இடம்பெற்றுள்ளன. இத்தனை நூல்களில் இடம்பெற்றிருந்தாலும், அதன்
அறிவிப்பாளர் தொடர்களை அலசிய அறிஞர்கள் எல்லா அறிவிப்பிலும் கோளாறு உள்ளதை
நிரூபித்துள்ளார்கள்.
அபூதாவூதில் இம்பெறும் ஹதீஸில் 'அம்ர் பின் மாலிக்'
என்பவர் இடம் பெறுகிறார். '' நல்லவர்கள் பெயரைப்
பயன்படுத்தி இவர் இட்டுக்கட்டக் கூடியவர் '' என இப்னு ஹஜர் அஸ்கலானி
விமர்சிக்கிறார். '' இவர் மறுக்கப்பட வேண்டியவரும், பலவீனமானவருமாவார் '' என
இப்னு அதீயும், அபுயஃலாவும் கூறுகிறார்கள்.
அபூதாவூதில் வேறொரு ஹதீஸ் இடம் பெறுகிறது.
அதன் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது, நான்காவதாக ஹகம்
இப்னு அஃபான் என்பவரும், மூஸா பின் அப்துல் அஜீஸ்
என்பவரும் இடம்பெறுகிறார்கள். இவர்கள் இருவரும் விமர்சிக்கபட்டுள்ளார்கள்.
''மூஸா பின் அப்துல் அஜுஸ் '' பற்றி 'இவர் பலவீனமானவர்'
என்று இப்னுல் மதனியும், 'இவரது ஹதீஸ்களை நிராகரிப்போம்'
என சுலைமானும், 'இவரை நம்பகரமானவராக ஏற்க முடியவில்லை' என இப்னு ஹஜரும்
கூறுகிறார்கள்.
'ஹகம் பின் பஃபான்'
பற்றி '' இவர் வணக்கசாலியா இருப்பினும், பலவற்றை
இட்டுகட்டி கூறியுள்ளார்' என இப்னு ஹஜர் தமது தக்ரீபில் கூறுகிறார்.
இவரது ஹதீஸ்கள் மறுக்கப்படக் கூடியவை. அறிஞர்கள் இவரை ஏற்கத் தயங்குகின்றனர் என
இப்னு குஸைமாவும், இப்னு ஹிப்பானும் கூறுகிறார்கள். தஹ்தீபுத் தஹ்தீபில் இந்த
விபரங்கள் வருகின்றன.
இப்னு மாஜா அறிவிப்புகள்:
ஒரு ஹதீஸில் நாம் மேலே விமர்சித்த அபூதாவூத் அறிவிப்பாளர்களான
'ஹகம் பின் அஃபான்', 'மூஸா
பின் அப்துல் அஜீஸ்' ஆகிய இருவரும் இடம்பெறுகின்றனர். எனவே இது பலவீனமான
அறிவிப்பாகும்.
மற்றொரு ஹதீஸில் 'மூஸா பின் உபைதா' என்பவர்
மூன்றாவதாக இடம்பெறுகிறார்.
'இப்னுல் மதீனி, இப்னு அதி' ஆகியோர் ''இவர்
பலவீனமானவர்'' என கூறியுள்ளனர். ''நான் இவரது
அறிவிப்புகளை ஏற்க மாட்டேன். அவை நிராககரிக்கப்பட வேண்டியவை' என புகாரி,
இப்னு ஹம்பல், இருவரும் விமர்சித்துள்ளார்கள்.
திர்மிதியில்:
திர்மிதியில் இம்பெறும் ஹதீஸிலும் மூன்றாவது அறிவிப்பாளராக அதே
மூஸா பின் உபைதாவே இடம்பெறுகிறார். இவர் கடுமையாக
விமர்சிக்கப்பட்டுள்ளதை மேலே கண்டோம்.
ஹாக்கிமில்:
இந்நூலில் நான்கு அறிவிப்புகள் இடம்பெறுகின்றன. இதில் மூன்று அறிவிப்புகளில்
நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய விமர்சனத்திற்கு உட்பட ஹகம்
பின் அஃபானும், மூஸா இப்னு அப்துல் அஜீஸுமே இடம்பெறுகின்றனர். நான்காவது
ஹதீஸில் அஹ்மத் பின் அபீதாவூத்
என்பவர் இடம் பெறுகிறார்.
இவர் இட்டுக்கட்டக் கூடியவர் என தஹபி தமது மீஸான்
என்ற நூலிலும் தக்க ஆதாரங்களைக் கொண்டு நிரூபித்துள்ளார்கள்.
இவர் பொய்யர் என தாரகுத்னியும், பலவீனமானவர் என
இப்னுஹிப்பானும் கூறியுள்ளார்கள்.
தஸ்பீஹ் சம்பந்தமான ஹதீஸ் பல வழிகளில் வந்தாலும், அத்துனை வழிகளிலுமே ஹதீஸ் கலை
மேதைகளின் ஆய்வுக்குப் பிறகு கண்டனத்துள்ளாக்கப்பட்டுள்ளது.
விமர்சனங்களும், சந்தேகங்களும், பலவீனங்களும் நிறைந்த இந்த அறிவிப்புகளை
தள்ளிவிடுவதுதான் அறிவு சார்ந்த செயலாகும். ஏனெனில் இறைவன்
''உனக்கு திட்டவட்டமான அறிவில்லாத விஷயங்களைப்
பின்பற்றாதே '' என தனது வேதத்தில் கூறுகிறான். (பார்க்க அல்குர்ஆன் - 17:36)
408) இந்தியாவின் அழைப்பாளர் பிஜே
பற்றி நாம் என்ன முடிவெடுப்பது அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் தவ்ஹீத் கொள்கைக்கு முரணானதா...?
ackytm@hotmail.com
ஆம் அப்படித்தான் என்று ஒரேயடியாக நாம் கூறிவிட
மாட்டோம். ஏகத்துவ கொள்கை விஷயத்தில் அவரிடம் தீர்க்கமான பார்வை இருந்தாலும்
இஸ்லாமிய சட்டங்களை விளங்கும் - விளக்கும் போக்கில் அவரிடம் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இது மனித இயல்புதான் என்றாலும் தவறை சுட்டிக்
காட்டினால் ஏற்கும் மனப்பக்குவம் அவரிடம் அற்றுப்போய் விட்டது.
பிறைப்பார்த்தல் - ஜகாத் - முதஷாபிஹாத் பிரச்சனை - சமூகத்தை பிரித்தாலும் இயக்க சிந்தனை - ஏகத்துவம் என்பது முஸ்லிம்களின் கொள்கையாக இருக்கும் போது ஏகத்தவவாதி - தவ்ஹீத்வாதி என்று அடிக்கடி கூறி அவரை பின்பற்றுபவர்களிடம் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி அவர்களை சாராதவர்களெல்லாம் தவ்ஹீதுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை உருவாக்குவது என்று பட்டியலிடலாம்.
எந்த மெளலவியும் கவனம் செலுத்தாத - கண்டுக் கொள்ளாத - அக்கறை எடுத்துக் கொள்ளாத அரபு நூல்களையெல்லாம் புரட்டி அதன் கருத்தோட்டங்களை மக்கள் மன்றத்தில் வைத்தவர் பிஜே. கடந்தக்காலங்களில் ஏகத்துவ சிந்தனை தமிழக மக்களிடம் மலர்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அதற்கான உழைப்பும் குறைத்து மதிப்பிட முடியாத அளவிற்கு உயர்ந்ததாகும். 1990களுக்குப் பின் ஏகத்துவத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லத்துவங்கிய யாராக இருந்தாலும் அவர்கள் ஏதோ ஒரு வித்தில் பிஜேயிடமிருந்து பாடம் படித்தவர்கள் என்று அடித்து சொல்லலாம். இதை அவர்கள் மறுத்தாலும் அதுதான் உண்மை.
அரபு மதரஸாக்களில் பாடம் படித்து வெளியேறுபவர்களில் ஒரு சதவிகிதத்ததைத் தவிர மற்றவர்கள் உலகக் கல்வியற்றுப் போய் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் சுமையாக கிடந்த காலகட்டங்களில் அதிலிருந்து தனித்துவத்துடன் வெளிபட்டவர் சகோதரர் பிஜே. தன்நம்பிக்கை, அயராத உழைப்பு என்று அவரிடம் இருக்கும் படிப்பினைகள் பிற மெளலவிகளுக்கு வழிக்காட்டக் கூடியவைகளாகும்.
தமிழகத்தின் மொத்த முஸ்லிம்களும் மீடியாவின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என்றால் சந்தேகமில்லாமல் அது பிஜேயின் மீடியா உத்திதான்.
குர்ஆனும் - சுன்னாவும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று இன்றைக்கு ஆயிரம் பேர் பேசினாலும் அதை தமிழர்களின் மனங்களில் ஆழமாக பதிய செய்தவர் பிஜே. இறைவன் அவரது உழைப்பின் வழியாகத்தான் மகா கொடியப் பாவமான இணைவைத்தலிலிருந்து நம் அனைவரையும் மீட்டான் என்பதில் நாங்கள் ஆனந்தம் கொள்கிறோம். புகழுக்குரியவன் இறைவன்.
அதே சமயம் ஆரம்பக் காலத்திலிருந்து அவரிடம் உள்ளக் குறைப்பாடுகளை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. அதில் மிக முக்கியமானது தனக்கு பிடிக்காத யாராக இருந்தாலும் அவர்களை குறைக் கண்டு ஒதுக்குவதாகும். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் ஏராளம். ஆரம்பத்தில் அபூ அப்தல்லாஹ், பிறகு ஜாக் என்ற ஒரு இயக்கமும் அதன் நிர்வாகம் முதல் உறுப்பினர்கள் வரை, ஹாமித் பக்ரி, பழ்லுல் இலாஹி, மொய்தின் (முன்னாள் முபீன் ஆசிரியர்) ஸாஜிதா புக் சென்டர் ஜகரிய்யா இவர்கள் அனைவரும் ஏகத்துவ பிரச்சாரத்தில் அவருடன் முன்னணியில் நின்றவர்கள் என்பது மட்டுமின்றி அவருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கியவர்கள். அதன் பிறகு இன்றைக்கு தமுமுக என்ற வலுவான ஒரு மக்கள் இயக்கம், நஜாத்திலிருந்து வெளியேறிய அன்றயை கட்டத்தில் நஜாத் புத்தகத்தை அழிக்க முயற்சி, பின்னர் ஜாக் என்ற இயக்கத்தை துவங்கி அதிலிருந்து வெளியேறி அந்த இயக்கத்தை அழிக்க முயற்சி, அரும்பாடு பட்டு தமுமுக வளர்ந்த பிறகு அதிலிருந்து வெளியேறி இன்றைக்கு அந்த இயக்கத்தை இல்லாமலாக்க தீவிர முயற்சி என்று அவருடைய மனப்பான்மை இதே வழியில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. (அவரால் ஒதுக்கப்பட்ட இதர சமுதாய பிரமுகர்களையும் தனி மனிதர்களையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை) அவரால் ஒதுக்கபட்ட அனைவரும் அவரால் குறைப்பாடுள்ளவர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்களாவார்கள். அவர் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் தான் குறைப்பாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்று அவர் நினைத்துக் கொள்கிறாரா... தனி மனிதனாக நின்று இவர் பலரை குறைக்காணும் அதே போக்கில் நூற்றுக்கணக்கான கைகள் அவரை நோக்கி குறைப்பாடுள்ளவர் என்று நீள்கிறதே அதற்கு என்ன பதில்? பிறருடைய குறைக்களை சீடிக்களாக போட்டு வெளியிடுபவர் (பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பது குர்ஆன் வசனம்) தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மெளனமாகி விடுகிறார் என்றால் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்குப் பெயர் என்ன? இன்றைக்கு அவருடன் இருப்பவர்களில் ஒரு நான்கு, ஐந்து பேர்களைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள். அவரை தூரத்தில் நின்று பார்த்தவர்கள் இன்றைக்கு நெருங்கி இருக்கிறார்கள். இவர்களும் நாளைக்கு ஒதுக்கப்படுவார்களோ... இறைவன் தான் அறிவான்.
பிஜே சொன்னால் தான் தவ்ஹீத் - பிஜே சொன்னால் தான் இஸ்லாம் என்று கண்மூடித்தனமாக பின்பற்றும் சிறு அளவிளான ஒரு கூட்டம் உருவாகியுள்ளது நிசர்தனமான உண்மை. இதை நன்கு பிஜே அறிந்த நிலையிலும் கண்டிக்காமல் மேலும் வளர்க்கவே விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. 'மனிதன் பகுத்தறிவால் தான் சிறப்புப் பெறுகிறான் அதை என்றைக்கு அவன் இழக்கின்றானோ அன்றைக்கே அவன் தனது நிலையிலுந்து தாழ்ந்து விடுகிறான். எதையும் குர்ஆன் சுன்னாவுடன் உரசிப் பார்த்து சிந்தித்து விளங்குவதே சிறந்த முஸ்லிமுக்கு அடையாளம்" என்ற பாடத்தை பிஜேயிடமிருந்து படித்தவர்களில் ஒரு சாரார் தங்கள் பகுத்தறிவிற்கு பிஜே மூலாம் பூசிக் கொண்டார்கள். குர்ஆன் சுன்னாவை நேரடியாக பார்ப்பதுமில்லை. பிறர் கூறுவது அவர்களுக்கு குர்ஆன் சுன்னாவாக தெரிவதுமில்லை. பிஜே சொன்னால் தான் குர்ஆன், பிஜே சொன்னால் தான் சுன்னா, பிஜே சொன்னால் தான் இஸ்லாம் என்று மத்ஹப் வெறியை விட தீர்க்கமான வெறித்தனத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்கள். அந்த மக்களை நினைக்கும் போது உண்மையிலேயே மனக் கஷ்டமாக இருக்கிறது.
ஓரிறைக் கொள்கை என்ற அந்த ஒரு இறைவனை சார்ந்து நிற்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான தவ்ஹீத் கொள்கையில் பிஜேயின் உறுதிபப்பாட்டைத் தவிர மார்க்கத்தை விளங்குவதில் சில குறைப்பாடுகளும், சமூகத்தை கையாளும் விதத்தில் பெருத்த குறைப்பாடும் அவரிடம் உண்டு. அவரது சமுதாயப்பார்வை மிக பலவீனமானது என்பதற்கு சமீபத்திய உதாரணம் அவர் ஆரம்பித்துள்ள புதிய இயக்கம்.
பிஜேயின் அரசியல் பார்வை ஜீரோவாகி விட்டது என்பதற்கு நிறைய உதாரணம் சொல்லலாம். புதிய உதாரணம். ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்ததாகும். ஜெயலலிதா உட்காரும் மேடையில் கூட அவர் இருக்கும் போது உட்கார மாட்டேன் என்று கொள்கை பேசியவர் இன்றைக்கு தேதி கேட்டு போய் சந்திக்கிறார் என்றால் 'ஒண்ணுமே புரியல அவர் போக்கில'
409) அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன் இப்படி இருக்க அல்லாஹ் என்னை வணங்கு, புகழ், பெருமைப்படுத்து என மக்களிடம் தேவைபடுவதேன் என மாற்றுமத நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் இதற்கு எவ்வாறு பதில் அளிப்பது? nowsanaf@yahoo.com
ஒருவரிடம் ஒன்றை செய் என்று கூறுவது தேவையின் வெளிபாடு என்று விளங்குவது முதலில் தவறு. பல சிறப்பம்சங்களைப் பெற்று உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு தந்தை தன் மகனிடம் 'என் வழியில் நட' 'என் சொல்லுக்குக் கட்டுப்படு' 'என் வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு முன்னேறு' என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த தந்தை தன் மகனிடத்தில் தேவையுள்ளவராக இருக்கிறார் என்று முடிவு செய்ய முடியுமா..? அது தன் மகனின் மீதுள்ள அக்கறையின் வெளிபாடாகும்.
நோய் தாக்கப்பட்ட ஒருவரிடம் மருத்துவர் 'நான் சொல்வது போன்று தவறாமல் மருந்து மாத்திரை சாப்பிட்டு வா' என்றால் டாக்டர் நோயாளியிடம் தேவையுள்ளவர் என்று கூற முடியுமா..? இந்த வார்த்தையும் நோயாளி குணமாக வேண்டும் என்ற டாக்டரின் அக்கறையின் வெளிப்பாடாகும்.
இப்படி நிறைய சொல்லலாம்.
இஸ்லாமிய நம்பிக்கைப் படி சாத்தான் மனிதனை வழிகெடுத்து பாழ்படுத்த அனைத்து சதி திட்டங்களையும் ஓய்வில்லாமல் செய்துக்கொண்டிருக்கிறான். அதில் மனிதன் சிக்கினால் மகா பயங்கர பாதிப்புக்கு ஆளாகி விடுவான் என்பதால் அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வழிகளை இறைவன் சொல்கிறான்.
என்னை வணங்கு என்று இறைவன் கூறுகிறான் என்றால் 'நான் தேவையுள்ளவன்' என்பதற்காகவல்ல. சாத்தானை வணங்கினால் பாழ்பட்டுப் போவாய் அதற்கு ஒரு மாற்றுவழி என்னை வணங்குவதுதான் என்ற நினைவூட்டல் தான் அதில் அடங்கியுள்ளது.
என்னைப் புகழ்ந்து பெருமைப்படுத்து என்று இறைவன் கூறுகிறான் என்றால் புகழும் பெருமையும் மனிதனிடத்திலிருந்து தனக்கு தேவை என்ற அர்த்தத்தில் அல்ல. மனிதன் புகழ்ந்தாலும் புகழாவிட்டாலும் - பெருமைப்படுத்தினாலும் பெருமைப்படுத்தாவிட்டாலும் இறைவனின் புகழோ பெருமையோ குறையப்போவதுமில்லை. கூடப்போவதுமில்லை. அவன் அவனாக அவனுக்குரிய தன்மைகளுடன் நிலைத்திருக்கக் கூடியவன் அவன்.
இதை இறைத்தூதர் ஒரு முறை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
(உலக)மனிதர்களே.. நீங்கள் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுக் கூடி நாங்கள் அனைவரும் இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கப் போகிறோம் என்று தீர்மானித்து வணங்கத் துவங்கினாலும் அதனால் அவனுடையப் பெருமையும் புகழும் கொஞ்சம் கூட கூடப்போவதில்லை. நீங்கள் அனைவரும் ஒருமனதாக தீர்மானித்து இனி இறைவனை வணங்கவே மாட்டோம் என்று முடிவு செய்தாலும் அதனால் அவனது புகழோ பெருமையோ அணுவளவுக்கூட குறையப் போவதுமில்லை. (திர்மிதி)
இந்த செய்தியிலிருந்து மனிதனிடமிருந்து இறைவன் எந்தத் தேவையுமற்றவன் என்பது கூடுதலாக விளங்குகிறது. அப்படியானால் அவனை மனிதன் புகழ்வதும் பெருமைப்படுத்துவதும் ஏன்?
மனிதன் எந்த விஷயத்தில் குறைப்பாடு உள்ளவனாக இருக்கின்றானோ அதில் அவனைப் பக்குவப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
புகழுக்கு ஆசைப்படாத, புகழை விரும்பாத மனிதர்களை பார்ப்பது மிகவும் அறிது. மனித மனங்கள் பிறர் தன்னை புகழ்வதையும் பெருமைப்படுத்துவதையும் விரும்பவே செய்யும். புகழுக்காக மனிதன் எதையும் செய்கிறான். லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கிறான்.
தான் செய்யும் ஒரு காரியத்திற்காக தான் புகழப்படவில்லை என்றால் மனிதன் கோபப்படுகிறான். தன் மதிப்புக்கு களங்கம் வந்து விட்டது என்று பழிவாங்க துடிக்கிறான். இதனால் குடும்பங்களுக்கு மத்தியில் நண்பர்களுக்கு மத்தியில், அரசியல் வட்டங்களில் ஏன் நாடுகளுக்கு மத்தியில் கூட பெரும் பிரச்சனைகள் உருவெடுக்கின்றன. இது உலகில் தினந்தோரும் நடக்கும் நிகழ்வுகளாகும். தனது புகழும் பெருமையும் கீர்த்தியும் உயர வேண்டும் என்று நினைப்பவர்களே இத்தகைய அழிவிற்கு காரணமாகி விடுகிறார்கள்.
சிந்தித்துப் பார்ப்போம், இறைவனை நம்பி அவனது வல்லமையை உணர்ந்தவர்கள் தனது செயல்கள் அனைத்திற்கும் இறைவனையே பொறுப்பாக்குவார்கள். தான் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது எத்துனை வியக்கத்தக்கதாக இருந்தாலும் 'இதை செய்து முடிக்கும் ஆற்றலை எனக்கு வழங்கிய இறைவன் தான் இதன் புகழுக்குரியவன்" என்று நம்புவார்கள். இவர்களே தங்கள் செயல்களுக்காக இறைவனைப் புகழ்வதால் பிறர் தன்னை புகழ்வதாலோ புகழாமல் இருப்பதாலோ இவர்களிடம் எத்தகைய மாற்றமும் ஏற்படாது. புகழுபவர்கள் சொந்தங்களாகவும் மாட்டார்கள் புகழாதவர்கள் எதிரிகளாகவும் மாட்டார்கள்.
புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன் இறைவன் தான் என்ற மனநிலை உருவாகிவிடும் போது எளிமையான எண்ணங்களும் வாழ்க்கையும் வந்து விடும். ஆண்டியும் அரசனும் அதை சமமாக உணர்வார்கள்.
இஸ்லாமிய வரலாற்றை புரட்டினால் லட்சக்கணக்கான மக்கள் இப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பதை கண்டுக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவதை இஸ்லாம் வணக்கமாக்கியுள்ளது. முறையே இதன் அர்த்தம் 'இறைவன் பரிசுத்தமானவன்' 'இறைவனுக்கே புகழனைத்தும், 'இறைவன் மகாப் பெரியவன்' என்பதாகும்.
இறைவன் தான் பரிசுத்தமானவன் என்று ஒருவன் விளங்கும் போது தான் அனேக குறைப்பாட்டுகுரியவன் என்பதை உணர்வான்.
புகழனைத்தும் இறைவனுக்கே என்பதை புரியும் போது ்நான் புகழுக்கு சொந்தக்காரன்' என்ற எண்ணத்தை தூக்கி எரிவான்.
இறைவன் மகாப் பெரியவன் என்பதை விளங்கும் போது மற்ற அனைத்தும் அவனுக்கு சிறியதாகி விடும்.
இந்த மூன்றையும் புரிந்துணர்ந்தவர்களால் உலகில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பேயில்லை.
அவன் தன்னை புகழச் சொல்வது ஏன் என்பதின் அர்த்தம் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.
(உங்களின் இதரக் கேள்விகள் வரிசையாகப் பரிசீலிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்)
410)மனைவி, மக்கள், தாய், தந்தையரை பணம் சம்பாரிக்க வெளிநாட்டில் இருக்கலாமா? வருடக்கணக்கில் வெளிநாட்டில் மனைவியை விட்டு பிரிந்திருக்கலாமா (ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்கு)? வருடத்திற்கு ஒருமுறை 1 மாதம் அல்லது அதிக பட்சமாக 40 நாள் தான் விடுமுறை தருகிறார்கள்? இது மாதிரியான வெளிநாட்டு வாழ்க்கை இஸ்லாத்தின் அடிப்படையில் சரியா? இதனால் தாய் - தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமை, மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை, குடும்பத்தார்களுக்கு செய்ய வேண்டிய கடமை பாதிக்கிறது. ஆனால் வெளிநாட்டில் பணிபுரிந்துக் கொண்டிருப்பதால் அல்லாஹ்வின் கிருபைக் கொண்டு திருப்தி அடையும் அளவிற்கு சம்பளம் கிடைக்கிறது? இஸ்லாத்தின் அடிப்படையில் எது சிறந்தது? குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரத்தோடு விளக்கம் தரவும். learn_education@yahoo.co.in
குடும்பத்தைப் பிரிந்து வெளியில் மிக நீண்டக் காலங்கள் இருக்கவேக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. அவசியங்களும், தேவைகளும் இருக்கும் போது நீண்டக் காலம் வெளி உலகில் இருக்கலாம் என்பதற்கு நபித்தோழர்களை போருக்காக அழைத்து சென்று மாதக்கணக்கில் தங்க வைத்திருந்த நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை இருக்கதான் செய்கின்றது.
'குடும்பத்தை பிரிந்து இவ்வளவுக் காலம் தான் இருக்க வேண்டும்' என்ற காலவரைகளை இஸ்லாம் சொல்லவில்லை. அதே சமயம் ஒருவர் மீது பிறருக்கு இருக்கக் கூடிய உரிமைகளையும் கடமைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு அவர்களாகத்தான் இதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
கவனிப்பதற்கு வேறு யாருமே இல்லாத நிலையில் இருக்கக் கூடிய முதிர்ந்த வயது தாய் தந்தை உள்ளவர்கள் அவர்களை பாதுகாப்பதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஹாஜிமா என்ற நபித்தோழர் போரில் கலந்துக் கொள்ள உத்திரவு கேட்டபோது உனக்கு தாய் இருக்கிறாளா.. அவளுக்குப் போய் பணிவிடை செய் ஏனெனில் தாயின் காலடியில் தான் சொர்க்கம் .இருக்கிறது என்று நபி(ஸல்) கூறியதை இங்கு நாம் நினைவுக் கூற வேண்டும். (அபூதாவூத்)
இஸ்லாமிய ராணுவ கட்டமைப்பில் இணைந்து இறைக் கொள்கையையும் நாட்டின் இறையாண்மையையும் நிலைநாட்ட ஒருவர் தயாரான நிலையில் தான் நபி(ஸல்) இந்த முடிவை அவருக்கு அறிவிக்கிறார்கள்.
இறைவனின் வழியில் தன்னுயிரை தியாகம் செய்வது எத்துனை சிறந்தது என்பதை நாம் விளங்கி வைத்துள்ளோம். இருப்பினும் பிறர் உதவியை எதிர்பார்த்து நிற்கக்கூடிய வயதில் உள்ளவர்கள் இருந்தால் அவர்களை பிறர் முன்னிலையில் அவலப்பட வைத்து விட்டு போருக்கு செல்ல இஸ்லாம் சொல்லவில்லை. ஏனெனில் போரைப் பொருத்தவரை ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர் வந்து விடுவார். ஆனால் தாய் தந்தையை கவனிப்பதற்கு பெற்ற பிள்ளைகளின் மனநிலையில் பிறர் கிடைப்பது அபூர்வம் அதனால் தான் இஸ்லாம் கருத்தில் கொள்கிறது.
இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொக்கிறவரும் புனிதப்போரில் பங்கு கொண்டவராவார். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கிறவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். (புகாரி)
இந்த செய்தியை கவனியுங்கள். இறைவனின் பாதையில் புறப்பட்டவரின் வீட்டாரை கவனித்துக் கொள்வதற்கும், அவர்களின் நலம் பேணுவதற்கும் பிறர் இருக்க வேண்டும் என்பதில் நபி(ஸல்) அக்கறை செலுத்தியுள்ளது விளங்கும். இந்த செய்திகளிலிருந்து தினசரி வாழ்க்கைக்கு பிறர் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அது தாயாகவோ தந்தையாகவோ மனைவியாகவோ யாராக இருந்தாலும் அவர்களை 'அப்படியே' விட்டு விட்டு பொருள் திரட்ட செல்வது கூடாது. ஏனெனில் ஆதரவற்ற நிலையில் இவர்கள் தனித்து விடப்படுவது பெரும் மனப்போராட்டத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை விரக்தியாக்கி விடும் என்பதால் இஸ்லாம் அதை விரும்பவில்லை.
கணவன் மனைவி உறவு நிலை என்பதும் இதையே அடிப்படையாகக் கொண்டதுதான். தாய் தந்தையுடன் மகனுக்கு இருக்கும் உறவு முறையும் மனைவியுடன் கணவனுக்கு இருக்கும் உறவு முறையும் வித்தியாசம் நிறைந்ததாகும். தாய் தந்தை மீது மகனுக்கு இருக்கும் கடமையை விட மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமையும் கடமையும் அழுத்தமும் வீரியமும் நிறைந்ததாகும்.
அதை மிகச் சரியாக புரிந்துக் கொண்டால் தான் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கும்.
இல்லறத் தேவை.
திருமணம் என்பதே உடல் தேவையை குறைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் தான். அந்தத் தேவை நிறைவுறாவிட்டால் மனிதன் குறிப்பாக ஆண் உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி விடுகிறான். அவனால் சிறப்பாக இயங்க முடியாது. மனைவியுடன் இல்லறத்தில் இணைவதில் ஏற்படும் ஆனந்தமும் பிறகு கிடைக்கும் நிம்மதியும் தியாகம் செய்ய முடியாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
குடும்ப பராமரிப்பு.
இது ஆண்களுக்கான தலையான கடமையாகும். மனைவியுடன் கூடி தேவைகள் நிறைவேறிய பின் தன் பொறுப்பிலிருந்து விடுபடும் உரிமை எந்த ஆணுக்கும் இல்லை. மனைவியை பொருத்தவரை அவள் ஆணுக்கு அமானத்தாக (இரவல் பொருளாக)த்தான் வருகிறாள். அவளை அனைத்து வகையிலும் பாதுகாக்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளது.
குழந்தை வளர்ப்பு.
இல்லறத்தின் தீர்வாக கிடைக்கும் அன்பளிப்புகள் குழந்தைகள். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் எந்தக் குடும்பத்திற்கும் சிறப்பில்லை. ஆடு மாடு உட்பட அத்துனை ஜீவராசிகளும் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றன. குழந்தைகளை வளர்ப்பதில் தான் மனிதன் சிறப்புப் பெறுகிறான். இதை உணராத பெற்றோர்களை (மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான் என்ற வெத்து சித்தாந்தம் பேசுபவர்களை) ஆங்காங்கே பார்க்க முடிகின்றது. பெற்றோர்களின் அன்பும் பராமரிப்பும் இல்லாமல் -திட்டமிட்டு வளர்க்கப்படாத குழந்தைகள் உலகிற்கு பெரும் பாரமாக அமைந்து விடுகிறார்கள்.
இல்லறத் தேவைமட்டும் வாழ்வின் குறிகோள் என்று உணர்பவர்கள் அடுத்த குடும்ப பராமரிப்புப் பற்றியோ, குழந்தை வளர்ப்புப் பற்றியோ எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் இரவுகளை மட்டுமே தனதாக்கிக் கொள்வார்கள். இத்தகைய கணவர்களைப் பெற்ற பெண்களின் வாழ்க்கை அதோ கதி என்றாகி விடும்.
குழந்தைகளின் எதிர்காலம், குடும்ப நிம்மதி என்பதையெல்லாம் விளங்கிய ஆண்கள் கூடுதலாக பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாக இருந்து வருகிறது.
இருப்பதைக் கொண்டு வாழ்ந்துக் கொள்வோம் என்று தீர்மானித்துக் கொள்பவர்கள் கூட தீடீரென்று ஏற்படும் சோதனைகளில் துவண்டு விடுகிறார்கள். கடன் சுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனவே நெருக்கடியான பொருளாதார சூழ்நிலை உள்ளபவர்கள் வெளிநாடு சென்று சம்பாதிக்கலாம். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எத்துனைக் காலங்கள் வேண்டுமானாலும் பிரிந்திருக்கலாம். ஆனால் இதற்கு மனைவியின் அனுமதித் தேவை.
கணவனின் அன்புக்காக ஏங்குபவர்கள், கணவன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த பெண்களாக இருந்தால் சூழ்நிலையை புரிந்துக் கொள்ளக் கூடிய பக்குவம் இல்லாதவர்களாக இருந்தால் அவர்களை பிரிந்திருப்பது கணவனைப் பொருத்தவரையில் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகி விடும். கணவனை பிரிந்திருக்கும் மனைவிகளும் மனைவியை பிரிந்திருக்கும் கணவர்களும் அங்காங்கே தவறான பாதையில் அவ்வப்போது விழுந்து எழுகிறார்கள் இது இப்படியும் அப்படியுமாக நடக்கத்தான் செய்கின்றது. இந்த திருமண துரோகம் இறைவனிடம் பெரும் தண்டனையைப் பெற்றுக் கொடுத்து விடும்.
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய கற்பை) அவனுக்காக பாதுகாத்துக் கொள்வாள். (உமர் (ரலி) அபூதாவூத்)
நபி(ஸல்) சுட்டிக் காட்டியுள்ள இத்தகைய மனைவி அமைந்தால் கணவன் பொருள் திரட்ட வெளியில் செல்வதில் பிரச்சனையொன்றும் இல்லை. ஏனெனில் கணவனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி தன் குடும்ப மகிழ்ச்சி என்று இத்தகைய பெண்கள் வாழ்வார்கள். தனக்காக தன் குழந்தைகளுக்காக பணம் சம்பாதிக்கவே வெளி நாட்டில் தன் கணவர் இருக்கிறார் என்ற எண்ணத்தில் உள்ள பெண்கள் தெலிபோனிலும், கடிதத்திலும் தன் கணவனை மகிழ்விப்பார்கள். வேறு எந்த எண்ணமும் நினைவும் அவர்களைத் தொட்டுக் கூட பார்க்காது. பக்கத்திலிருந்து உடல் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் மனைவியின் அன்பில், பேச்சில், சிரிப்பில் கணவனால் வெளியில் ஓரளவு டென்ஷன் குறைந்து பொருள் திரட்ட முடியும். பிரிவுக்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பொழுதுகள் ஆகாயத்தில் அரண் கட்டி அவர்களைத் தாலாட்டும்.
உடல் தேவை விஷயத்தில் பெண்ணை விட ஆண் பலமானவன். உடல் அத்தகைய தேவையை குறித்து அவனை உசுப்பி விட்டால் அந்த டென்ஷனைக் குறைத்துக் கொள்வதற்காக வழி தேடுபவன். இன்றைக்கு உலகமெங்கும் விபச்சாரம் நடைப்பாதை தொழிலாகி விட்டது. அந்த மானக் கேடான வழியில் ஆணைத் தள்ளுவதற்கான அத்துனை ஏற்பாடுகளும் உலகை தன் வயப்படுத்தி வந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தொலைகாட்சிகளை சொல்லலாம். ஆண்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களை சபலப்படுத்தும் சூழ்நிலை நிறைந்துள்ள உலகில் வாழ்கிறோம். (சில நாடுகள் மட்டும் இத்தகைய நடைப்பாதை ஒழுக்கக் கேட்டிற்கு இடம் கொடுப்பதில்லை) ஆண்கள் மிக உஷாராக இருக்க வேண்டும் தனக்காக தன் மனைவி காத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்காக நாமும் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உறுதி தொடர்ச்சியாக ஆண்களிடம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
'யாரும் தான் பார்க்கவில்லையே ஒரு முறை தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாமே..' என்ற எண்ணம் உதித்தால் யாரும் பார்க்காவிட்டாலும் படைத்தவன் கண்காணிக்கின்றான் என்பதை ஒரு முஸ்லிம் மறந்து விட மாட்டான்.
வரம்பு மீறுபவர்களுக்கு 'எயிட்ஸ்' போன்ற கொடிய நோய்களால் கூட இறைவன் தண்டனைக் கொடுப்பான். இந்த தண்டனை இவர்களை மட்டுமல்லாமல் இவர்கள் வழியாக இவர்களின் குடும்பத்தையும் தாக்கி அழிக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.
எனவே தவறமாட்டோம் என்ற உறுதி இருவரிடமும் இருந்தால் அவர்களுக்குள் பேசி இதை தீர்மானித்துக் கொண்டால் அவர்கள் பிரிந்திருப்பதை ஆட்சேபிக்க வழியில்லை.
ஆனாலும்,
பொருளாதார தேவை என்பதை இறுதி மூச்சுவரை மனிதனால் நிறைவு செய்ய முடியாது என்பது மனித வரலாற்றிலிருந்து நாம் காலாகாலமாக கற்று வரும் பாடமாகும். எனவே அந்த ஒன்றைமட்டும் கூறிக்கொண்டு 15 - 20 வருடங்களெல்லாம் மனைவியை பிரிந்து தனித்திருப்பவர்களை சாதாரணமாக பார்க்க முடிகின்றது. இப்படி பிரிந்திருப்பதற்கு திருமணம் என்ற ஒன்றோ, கணவன் மனைவி என்ற சொந்தமோ தேவையில்லாத ஒன்றாகும்.
சிக்கனமான முறையில் குடும்பத்தை நடத்தும் பக்குவத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டோடு போய் இருப்பதுதான் அனைத்திலும் சிறந்ததாகும் என்பது நாம் சொல்லித் தெரியவேண்டும் என்பதில்லை.
411) கேள்வி - இஸ்லாத்தில் நல்ல நேரம்,கெட்ட நேரம் என்பது கிடையாது அப்படி இருக்க சில குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்றும் சில நேரங்களில் தொழ கூடாது என்று சொல்வது எதனால்?வாரத்தில் வெள்ளியன்று மட்டும் சிறப்பு நாள் என்று கூறப்படுவதேன்?(மாற்று மத சகோதரரின் கேள்வி) nowsath_munaf@yahoo.com
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கென்று நேரம் ஒதுக்கியாக வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் நேரங்கள் நல்ல நேரம் கெட்ட நேரம் என்ற அடிப்படையில் உள்ளவையல்ல. இது சாதாரண உண்மை. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் இஸ்லாம் வணங்குவதற்காக ஒதுக்கியுள்ள நேரங்களுக்கு நல்ல - கெட்ட சாயம் பூச மாட்டார்கள்.
இஸ்லாத்தின் ஐந்து நேரத் தொழுகைகளைப் பொருத்தவரை முஸ்லிமுக்கு ஒரு நாள் என்பது இறைநினைவோடு (வணக்கத்தோடு) துவங்கி இறைவணக்கத்துடன் முடிய வேண்டும் என்பதற்காக ஆரம்ப, கடைசி தொழுகைகள். உலக ஆசாபாசங்களில் முழு மூச்சாக மூழ்கி விடக் கூடாது என்பதால் இறை நினைவுகளுக்கு உரமூட்டிக் கொள்வதற்காக மற்றத் தொழுகைகள். இந்தத் தொழுகைகளால், இந்தத் தொழுகைகள தொடர்ச்சியாக தொழுபவர்களால் உலகிற்கு கிடைக்கும் மொத்தப்பலன். உலக அமைதி. (உலக அமைதி என்பதை நீங்கள் விரிவாக சிந்தித்துக் கொள்ளலாம்)
இறைத்தூதர் முஹம்மத் அவர்களின் அறிவிப்புப்படி உலகம் படைக்கப்பட்டதும் அது அழிக்கப்படுவதும் வெள்ளிக் கிழமையன்றுதான் நிகழும் என்பதாகும். முதல் இறைத்தூதர் ஆதம் அவர்கள் உலகிற்கு வந்ததும் வெள்ளிக் கிழமைத் தான். இப்படி பல சம்பவங்கள் அந்த தினத்தில் நடந்துள்ளதாலும் இனி மகா பயங்கர சம்பவமான உலக அழிவும் அன்றைய தினம் நடக்கவுள்ளதாலும் அத்துனையையும் நினைவுக்கூறும் விதமாக வெள்ளிக் கிழமைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளது இஸ்லாம்.
உலகில் எத்துனையோ நாட்கள் முக்கியத்தும் பெறுகின்றன. உழைப்பாளர் தினம், மகளிர் தினம், குழந்தைகள் தினம், எயிட்ஸ் தினம் என்று வரிசையாக சொல்லலாம். வருடத்திற்கு ஒருமுறை நினைவுக் கூர்நது அந்த நினைவுகளைத் தள்ளி விடுகிறார்கள். வெள்ளிக் கிழமையைப் பொருத்தவரை உலகம் அழியும் நாள் என்று வாரந்தோரும் நினைவுறுத்துவதன் நோக்கமே மனிதன் இறைவனை சந்தித்தேயாக வேண்டும் என்பதற்காகத் தான். அதனால் தான் மற்ற நினைவு நாட்களை விட இந்த நினைவு நாள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
412) கேள்வி - நாம் (முஸ்லிம்கள்) எதனால் தமிழில் பெயர் வைத்துக் கொள்வதில்லை என்று விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். சிலர் அரபி வெறி(பிரி)யர்கள் என்று அவதூறு செய்வது தாங்களுக்குத் தெரியும். abdurrahchennai@yahoo.com
மொழிப் பெருமையடிப்பவர்களால் இஸ்லாத்திற்கு எந்தப் பலனுமில்லை. அத்தகையவர்களை இஸ்லாம் ஊக்குவிக்கவுமில்லை. உண்மையில் இந்திய முஸ்லிம்களிடம் அரபு மொழிப் பெருமை என்பதும் கிடையாது. பெயர் என்பது ஒருவரை சுட்டிக் காட்டுவதற்குரிய இடுகுறியாகும். அதை அவர்கள் விருப்பப்பட்ட மாதிரி வைத்துக் கொள்ளலாம்.
முஸ்லிம்களை விடுத்து பிற தமிழ் மொழி பேசக்கூடிய அனைவரும் தமிழில் தான் பெயர் வைத்துள்ளார்களா.. என்பதை கொஞ்சம் சிந்திக்கச்சொல்லுங்கள்.
மொழிப் பற்று, மொழிக்காகப் போராட்டம், மொழிக்காக உயிர் என்றெல்லாம் வீர வசனம் பேசி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கட்சிக்காரர் வீட்டில் ஸ்டாலின் தென்படுவார். சன் நெட்வொர்க் தென்படும். ஸ்டாலின் - சன் தமிழ் மொழி அடையாளங்களா...?
தமிழ் நாட்டில் வெளிவரக் கூடிய பத்திரிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் கூட அவ்வப்போது மொழிக் கொள்கைப் பேசத்தான் செய்யும். (ஜுனியர் விகடன், சினிமா எக்ஸ்பிரஸ், குமுதம் ரிபோர்ட், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்றவை) இந்தப் பத்திரிக்கையின் பெயர்களில் தமிழ் அடையாளங்கள் மட்டும் இருக்கின்றதா...
தமிழ் நாட்டில் இயங்கக் கூடிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், வணிக நிருவனங்கள் இவற்றையும் கருத்தாயுங்கள். தமிழ் பற்றின் தரம் புரியும்.
இதையெல்லாம் நாம் சுட்டிக் காட்டுவதற்கு காரணம் முஸ்லிம்கள் அரபியில் பெயர் வைப்பதை சந்தேகக் கண்களுடன் பார்க்கும் அதே வேளை உண்மையில் தமிழ் மொழியின் நிலவரம் தமிழ் நாட்டில் எப்படி இருக்கின்றது என்பதையும் சிந்திப்பதற்காகத்தான்.
முஸ்லிம்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பல்வேறு நிலைகளில் தங்களை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகின்றது.
வரட்டுத் தனமாக தமிழ் மொழிப் பற்று பேசி தமிழில் பெயர்வைத்தாார்கள் என்றால் பலகட்டங்களில் அவர்கள் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும்.
குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், குழந்தைகளில் பள்ளிப் படிப்பு இங்கெல்லாம் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். பெயரை வைத்து ஒருவரை அடையாளப்படுத்துவதுதான் உலகில் எளிமையான சிறந்த வழியாக இருந்து வருகின்றனது. அதில் குழப்பம் ஏற்படும் போது பல பிரச்சனைகள் உருவாகும். அப்துர் ரஹ்மான் என்ற பெயர் கொண்ட நீங்கள் இதே பெயருடன் உங்களுக்கான அனைத்து வேளைகளையும் செய்து விட்டு வந்துவிட முடியும். நீங்கள் உங்கள் பெயரை 'அருளடியார்' என்று மாற்றிக் கொள்ளுங்கள். (அப்துர் ரஹ்மானுக்கு நேரடி தமிழ் அர்த்தம் அருளடியார் தான்) இப்போது ஓட்டுச்சாவடிக்கு செல்லுங்கள், குடும்ப அடையாள அட்டைப் பெற செல்லுங்கள். எத்துனை கண்கள் உங்களை வேறுவிதமாக பார்க்கிறது என்பதை கண்டுக் கொள்வீர்கள்.
தமிழில் பெயர் வைக்கக் கூடாது என்று எந்த தடையுமில்லை. நாம் அனேக தமிழ் பெயர்களைத் தான் அரபியில் மொழியாக்கி நமக்கு வைத்துக் கொள்கிறோம். (சில எடுத்துக் காட்டுகள்: தங்கப்பன் - அபூதஹப், கயல் விழி - நூருல்ஐன், அருட்செல்வன் - ஹிதாயத்துல்லாஹ் - அழகப்பன் - அபுல்ஹஸன், பெரியார் - ஷேக்,)
இது வாழும் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் அவசியமாகின்றது. இது தவிர வேறு காரணமில்லை. அதே சமயம் முஸ்லிமுக்கு அரபுமொழி பற்று (அதாவது அதை கற்று - விளங்குவது) இருக்க வேண்டும் அதற்குரிய காரணங்கள் அறிவுப் பூர்வமானவையாகும். தேவைப்பட்டால் அதை தனியாக விளக்குவோம்.
413) கிருஸ்துவ பெண்ணை ஒரு முஸ்லிம் ஆண் திருமணம் செய்துக் கொள்ளலாமா? அதுபோல ஒரு முஸ்லிம் பெண், கிருஸ்துவ ஆணை திருமணம் செய்துக் கொள்ளலாமா? ஆதாரத்துடன் விளக்கவும். yusuf_deen@yahoo.com
கிறிஸ்தவப் பெண்களை நாம் மணம் முடிப்பது என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் நம் பெண்களை கிறிஸ்தவ ஆண்கள் மணம் முடிக்க தடையுள்ளது.
உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டப் பெண்களை தவறான முறையில் அனுபவிக்காமல் அவர்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை மணந்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை கூடுதலாக சில நிபந்தனைகளுடன் 5 வது அத்தியாயத்தின் 5 வது வசனம் முன் வைக்கிறது.
உங்களுக்கு
முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களை ஆசை நாயகிகளாக்கிக்
கொள்ளாமலும் விபச்சாரம் செய்யாமலும், அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து,
மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை
நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில
நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
வேதக்கார பெண்களை நாம் மணக்கலாம் என்றால் வேதக்கார ஆண்களுக்கு நம் பெண்களை ஏன்
திருமணம் செய்து வைக்கக் கூடாது என்ற சந்தேகம் எழுவது இயல்புதான்.
கிறித்துவர்கள் கூட இதை பெரிய ஆட்சேபனையாக அவ்வப்போது முன் வைப்பார்கள்.
வேதக்காரர்களை மணக்கலாம் என்று இறைவன் பொதுவாக சொல்லாமல் 'வேதக்காரப் பெண்கள்'
என்று குறிப்பிட்டுள்ளதால் நம் பெண்களுக்கு வேதக்கார ஆண்களை மணம் முடித்துக்
கொடுக்கக் கூடாது அதற்குத் தடையுள்ளது.
இந்த பாகுபாட்டின் நியாயத்தை நாம் புரிந்துக் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.
திருமணத்திற்கு பிறகு மனைவி கணவனோடு - அவனை சார்ந்து - அவன் வாழும் இடத்தில்
வாழ்வைத் துவக்குகிறாள். ஒரு கிறிஸ்த்துவப் பெண் முஸ்லிம் ஆணை மணந்து அவனோடு
தனது புதிய வாழ்வை அவன் சார்ந்த கூட்டுக் குடும்பத்திலோ அல்லது தனியாகவோ
துவங்குகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் போய் வாழும் இடத்தில் அவளது மத
நம்பிக்கைக்கு எவ்வித கலங்கமும் ஏற்படவேப் படாது. தான் மதிக்கும் (சில போது
வணங்கும்) ஏசுவை முஸ்லிம்கள் மிக மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும்
அற்புதத்தை அவளால் அங்கு பார்க்க முடியும். சில சிறப்புகளிலும் - தன்மைகளிலும்
முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட முஹம்மத் என்ற இறைத்தூதரை விட இயேசு சிறந்து
விளங்கினார் என்ற உண்மைகள் முஸ்லிம்களின் வாயிலிருந்து வரும்போது அவளால்
மகிழ்ந்துப் போகாமலிருக்க முடியாது.
இயேசு பற்றியும் - மரியாள் பற்றியும் குர்ஆனில் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது
என்பதை அவள் அறியும் போது குர்ஆனுடன் தொடர்புக் கொள்வதற்கும், இஸ்லாத்திற்கும்
கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை கண்டறிவதற்கும் அது
அவளுக்கொரு தூண்டுகோலாக அமையும். அவள் செல்லுமிடம் இஸ்லாமிய கல்வி மிக்க வீடாக
இருக்கும் பட்சத்தில் அவள் நம்பிக்கைக் கொண்டுள்ள இயேசுப் பற்றிய - அவள் அதுவரை
அறியாத - பற்பல உண்மைகள் அவளது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தூண்டும் இடமாக
அந்த இடம் அவளுக்கொரு கல்விச்சலையாகவே மாறி விடும்.
இப்படி ஒரு சூழலில் அவள் வாழும் போது எந்த சந்தர்பத்திலும் இயேசு - மரியாள்
பற்றி அவள் கொண்டுள்ள நம்பிக்கை (அவளாக விரும்பி சில சீர்திருத்தங்களுக்கு
உட்படுத்தப்படலாமேத் தவிர) காயப்படுத்தப்படாது.
அதே சமயம் ஒரு முஸ்லிம் பெண் கிறிஸ்த்துவரை திருமணம் செய்துக் கொண்டு அவர்
வீட்டுக்கு செல்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவள் முதலில்
சந்திப்பதே அவள் நம்பிக்கைக் கொண்டுள்ள இஸ்லாத்தைப் பற்றியும் - முஹம்மத் என்ற
அந்த இறைத்தூதர் பற்றியும் துளியும் அறிவில்லாத - அக்கறையில்லாத ஒரு
சூழ்நிலையேயாகும். இது அவளது வாழ்வில் முதலாவதாக பெரும் காயத்தை ஏற்படுத்தும்.
ஒருவேளை தனது நம்பிக்கைப் பற்றிய அறிவு அங்கு இருப்பதாக தெரிந்தாலும் கூட அது
பெருமளவு தப்பும் தவறுமாக அங்கு சூழன்றுக் கொண்டிருப்பதையே அவள் உணர்வாள்.
முஹம்மத் என்ற அந்த தீர்க்கதரிசியைப் பற்றி கேவலமான பார்வைப் பார்ப்பதும் ஒருபடி
மேலே போய் அவர் தீர்க்கதரிசியே கிடையாது என்று மொத்தமாகப் புறக்கணிக்கப்படுவதும்
நடக்கத்தான் செய்கின்றது. இது கிறிஸ்த்துவ குடும்பங்களின் குறைப்பாடு என்று
சொல்ல முடியாது. 'பவுல் உருவாக்கிய கிறிஸ்த்துவம் சீர்திருத்தப்பட வேண்டும் -
இயேசுவின் மீது சுமத்தப்பட்ட சிலுவைப் பலி என்ற கலங்கம் துடைத்தெரியப்பட
வேண்டும்' என்ற கருத்துக்களை முஹம்மத் என்ற தீர்க்கதரிசி வாயிலாக குர்ஆன்
என்றைக்கு வெளிப்படுத்தியதோ அன்றிலிருந்தே இஸ்லாத்திற்கெதிரான பொய்யும் -
அவதூறும் கிறிஸ்த்தவ உலகத்தால் துவங்கப்பட்டு உலகலாவிய அளவில் பரப்பப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. முஹம்மத்(ஸல்) அவர்கள் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள்
பைபிளில் இருந்தபோதும் (இதுபற்றி நல்லறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் 'முஹம்மத்
அவர்கள் பற்றி பைபிள் என்னக் கூறுகிறது' என்று ஒரு ஆய்வு செய்து ஆப்பிரிக்க
கிறிஸ்த்தவ போதகர்களிடம் சமர்பித்த உண்மைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது)
அவற்றையெல்லாம் கிறிஸ்த்தவ தலைமை மிக எச்சரிக்கையாக கிறிஸ்த்தவ உலகில் - அந்த
மக்களிடம் - காண்பிக்காமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றன. இந் நிலையில்
அங்கு போய் ஒரு முஸ்லிம் பெண் வாழும் போது அவள் தன் உயிரை விடவும் அதிகமாக
நேசிக்கும் இஸ்லாம் கறைப்படுத்தப்படும் போது அவளது வாழ்வு அங்கு கசந்து போய்
சண்டை சச்சரவில் துவங்கி சில வேலை விவாகரத்தில் முடியும் சில வேளை வாழ்வே
முடிந்துக்கூடப் போகும்.
தான் கொண்டுள்ள கொள்கைக்கும் நம்பிக்கைக்கும் பங்கமில்லாமல் வாழவேண்டும் என்பதே
முஸ்லிம்களின் முதல் ஆசையாகும். இப்படித்தான் வாழ வேண்டும் என்பது இஸ்லாம் முன்
வைக்கும் அறிவுரையாகும்.
கொள்கையில் சமசரம் செய்துக் கொண்டுப் போவதற்கு (மிகக் கடுமையான
நிர்பந்தத்திற்குள்ளாக்கப்பட்டால் தவிர) இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதால்
இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு இயேசுவை இறை மகனாக ஆக்கிக் கொள்ளும் கொடிய
பாவத்தை ஒரு முஸ்லிம் பெண்ணால் ஒரு போதும் செய்ய முடியாது என்பதால் அவளை
கிறிஸ்த்துவ ஆண் திருமணம் செய்யும் அனுமதியை இஸ்லாம் வழங்கவில்லை.
414) கேள்வி - நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன். சமீப காலமாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் போட்டி பிரச்சாரத்தினால் மார்க்க விஷஷயங்களில் மக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். இங்கு டாண் என்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எம்.எஃப். அலி என்ற மார்க்க அறிஞரும், மௌலவி முஜீபுர் ரஹ்மான் உமரி அவர்களும் ஜக்காத் பற்றிய குர்ஆன் விளக்கங்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் எடுத்து வைத்தார்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் தற்போது ஜக்காத் பறறிய சர்ச்சைகளும் சரியான விளக்கங்களும் என்ற தலைப்பில் மௌலவிக்கள் ஆர்.ரஹ்மத்துல்லா, அப்துந் நாசர், பக்கீர் முகம்மது ஆகியோர் குர்ஆனிலிருந்து ஹதீஸ்கள் பல இடங்களில் மாறுபடுகின்றது வாதாடிக்கொண்டிரூக்கிறார்கள். இதற்கு புகாரியிலிருந்து பல ஆதாரங்களை எடுத்து வைக்கிறார்கள். இது போன்ற விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுமானால் மக்களுக்கு இமாம்கள் மீதும் ஹதீஸ்கள் மீதும் உள்ள நம்பிக்கை போய்விடும். இவர்களுடைய குறிக்கோள் என்ன? இந்த விவாதங்களின் நோக்கம் என்ன? என்பது புரியாத புதிராக இருக்கிறது. இது விஷஷயமாக தங்களின் விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். sickandar@yahoo.com
மார்க்கத்தின் சட்ட பிரச்சனைகளை கையாள்வதில் - விளங்குவதில் - மாறுபாடுகள் வருவதென்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. இன்றைக்கு புதிதாக தமிழகம் இந்த பிரச்சனையை சந்திக்கவில்லை. நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு துவங்கி காலாகாலமாக நடந்து வருவதாகும். ஆனால் அதற்காக அடிதடியிலும், குரோதமனப்பான்மையிலும் ஈடுபடவேண்டுமா.. என்பதுதான் கேள்வியாகும்.
கல்வியறிவு மிக்க தலை சிறந்த அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு வரும் சந்தர்பங்களில் இரு சாராரும் மீடியாக்களில் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து 'என்னுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய வரை இந்த கருத்துதான் சரியாக இருக்கிறது. மாற்றுக் கருத்துள்ளவர்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. மக்கள் சிந்தித்து விளங்கிக் கொள்ளட்டும்" என்று இரு சாராருமே தங்கள் வாதங்களை எடுத்து வைத்து மாற்று கருத்துள்ளவர்களை கண்ணியப்படுத்தி முடித்துக் கொள்வார்கள். இவற்றை கேட்கக் கூடிய மக்களுக்கு மத்தியில் அவர்களின் மனங்களில் யாரைப்பற்றியும் குரோதமனப்பான்மை ஏற்படாது.
அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது (பார்க்க 29:46)
விவாதம் செய்வதாக இருந்தால் அதற்கு அழகான முறையொன்று வேண்டும். இல்லையெனில் விவாதமே வேண்டாம் என்று இறைவன் கூறுகிறான். கருத்துப்பறிமாற்றங்கள் நடக்கும் போது எத்தகைய பண்புகளுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து பாடமாக கற்றவர்கள் குதர்க்கமும், விதண்டாவாதமும் பேசி மனிதமனங்களில் 'தீ'யை வளரக்க மாட்டார்கள். ஆனால் தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை குறிப்பாக குர்ஆன் சுன்னா பேசுபவர்களுக்கு மத்தியில் அத்தகைய 'தீ'ய போக்கு வளர்ந்து நிற்கின்றது. இதற்கு என்ன காரணம் என்றால் 'என்னால் மட்டும் தான் எதையும் சரியாக விளங்க முடியும்' என்ற இறைத் தன்மையை வெளிப்படுத்துவதாகும்.
கருத்து மாறுபாடுள்ள ஒன்றைப் பற்றி கருத்து கூறும் போது இறுதியில் 'இறைவன் மிக்க அறிந்தவன்' என்று கூறி விடுங்கள் என்று நபி(ஸல்) வழிகாட்டியுள்ளார்கள். இதன் அர்த்தம் 'என்னுடைய இந்த ஆய்வில் தவறுகள் நிகழலாம் நான் பலவீனமானவன் என்பதால் தவறுகள் இல்லாமல் அறியக்கூடியவன் இறைவன் மட்டுமே' என்று கூறி நமது பலவீனத்தை ஒப்புக் கொள்வதாகும்.
ஆனால் இன்றைய தமிழ் இஸ்லாமிய விவாதங்களில் 'தான் பலவீனமானவன் என்பதை உணர்வதற்கு பதிலாக எதிர்கருத்துள்ளவர்களை பலவீனப்படுத்த வேண்டும்' அவர்களின் கருத்துக்களை பொய்படுத்தி விட வேண்டும் என்ற மனப்பான்மையே உச்சி முதல் உள்ளங்கால் வரை நீடித்திருக்கின்றது.
சகோதரர் முஜிபுர்ரஹ்மான் வெளியிட்ட கருத்துக்கள் என்னவென்று நமக்கு தெரியாததால் அதுபற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஜகாத் சட்ட விஷயத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்'தின் நிலைப்பாடு தவறானதும், இறைத்தூதர் காலத்திலிருந்து நிலைப்பெற்று வந்துள்ள ஒரு அடிப்படை சட்டத்திற்கு புதிய விளக்கம் கொடுப்பதுமாகும். எனவே ஜகாத் விஷயத்தில் அவர்களின் கருத்துக்கு மாற்றமான கருத்தில் தான் நாம் இருக்கிறோம். அவர்களின் கருத்துக்கள் என்னென்ன, ஆதாரங்கள் என்னென்ன என்பதையெல்லாம் பரிசீலித்து நமது நிலைப்பாட்டையும் ஜகாத் பற்றி தொடரில் விரிவாக விளக்கியுள்ளோம். அதன் லிங்க் (ஜகாத் ஆண்டுதோருமா...)
சார்பு நிலையில்லாமல் எதையும் தீர்க்கமாக பரிசீலித்தால் நம்மிடம் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விடும்.
415) கேள்வி - என்னுடைய கேள்வி
என்னவெனில் இந்திய நாட்டில் டி.சி. யில் சாதி குறிப்பிடும் போது முஸ்லிம்(லெப்பை,
பட்டானி) என்று உள்ளதே இஸ்லாமில் சாதி இல்லையென்றால் அதற்கு என்ன காரணம்?
riya_aha@yahoo.co.in
சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் என்று முழங்கியவர்கள் வாழ்ந்த நாட்டில்
பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் போது கூட சாதி பற்றிக் கேட்பது வெட்கக்கேடான
ஒன்றாகும்.
இஸ்லாத்தில் சாதிகளுக்கு துளியும் வேளையில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்கள் (லெப்பை, பட்டானி, ராவுத்தர், மரைக்காயர்.... போன்றவை) சாதிகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. குடும்பங்கள், கோத்திரங்கள், செய்யும் தொழில்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களை அடையாளப்படுத்துவதற்காக காரண, இடுகுறி பெயர்கள் சூட்டப்படும். இது உலகில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கும் பழக்கமாகும். அரபுநாடுகளில் குடும்ப கோத்திரப் பெயர்களை நீங்கள் சாதாரணமாகப் பார்க்கலாம்.
அதேப் போன்று செய்யும் வேலையை தேவைக்கேற்ப குறிப்பிடும் பழக்கங்கள் நீடிக்கின்றன. இவை அரசு உழியர்கள் மற்றும் தனியார் நிர்வாகத்திற்கு பயன்படும் விதத்தில் அமைந்தால் அது தவறில்லை. அரசு பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், விமானப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கணக்கர்கள், ஆசிரியர்கள் .... போன்றவர்களை பெரிய பட்டியலிடலாம். இது நிர்வாகத்திற்கான அடையாளங்கள்.
இவற்றை பொதுப்பெயராக மாற்ற வேண்டும் என்பதோ, சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் என்பதோ சட்டமல்ல. ஆனால் அந்த போக்கு எப்படியோ சமூகத்தில் நீடிக்கின்றது. துப்பரவு தொழிலாளி, நாவிதர், சலவைத் தொழிலாளி என்று அந்தந்த வேலையை செய்பவர்களை செய்யும் வேலையுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தும் போக்கு சமூக அவலமாகவே இங்கும் அங்குமாக தொடர்கிறது.
இவைகளில் எதுவம் அரசு சான்றிதழ்களில் குறிப்பிடப்பட வேண்டும் என்பது தேவையற்ற ஒன்றாகும்.
ஆரம்பக் காலங்களில் முஸ்லிம்கள் பல்வேறு தொழில்களை செய்துவந்துள்ளதால் அன்றைய காலகட்டத்தில் தொழிற் குறியீடு அவர்களுக்கு இருந்தது. ராவுத்தர், மரைக்காயர், லெப்பை போன்றவை தொழிற் குறியீடுகளாக வந்தவைத் தான். இந்தக் குறியீடுகளுக்குரிய தொழிற்களிலிருந்து முஸ்லிம்கள் விடுபட்டு சில நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைக்கு முஸ்லிம்களுக்கு ஏதாவது குறிய