www.idhuthanislam.com

கேள்வி - பதில் தொகுப்பு - 36

நமது வலைப்பூவில் அப்டேட்டான கேள்வி பதில்கள்

 
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அதே போன்று அண்ணனுடைய மனைவி, மாமாவுடைய மனைவி போன்றோர்களையும் இச்சை இல்லாமல் பார்க்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது?

Name: Azeezudheen
email: skn.azeesudeen@....
Location: Dubai
Subject: Question

...............

நமக்கு உரிமையுள்ள மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இச்சையில்லாமல் பார்ப்பது என்பது பொதுவான அனுமதியாகும்.

அண்ணன், தம்பி மனைவிகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது அவசியம்.

ஏனெனில்

முகம் கை தவிர மற்றப் பாகங்கள் முழுதும் மறைந்துள்ள நிலையில் பெண்கள் இருந்தால் அவர்களை தேவைக்காக பார்க்கலாம் என்ற அனுமதி அடங்கியுள்ள வசனம் கீழே!

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

வீடுகளில் இருக்கும் போது பெண்கள் சாதாரண உடைகளுடன் இருப்பார்கள். அது அவர்களின் உடலில் முகம் முன் கைகளைத் தவிர மற்றப்பாகங்களை மறைக்காத நிலையில இருந்தால் அவர்கள் மற்ற ஆண்களுக்கு மத்தியில் வெளிவரக் கூடாது. வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டால் மறைத்த நிலையிலேயே வர வேண்டும். முகம், கைகளில் முற்பகுதி தெரியும் நிலையில் வெளிப்படலாம் என்பதிலிருந்தே ஆண்கள் அவசியத் தேவைக்காக பெண்களைப் பார்க்கலாம் என்பது விளங்குகின்றது.

வீட்டில் சாதாரணமாக வீட்டு உடைகளுடன் இருக்கும் போது யார் யார் முன்னிலையில் அந்த உடையுடன் வரலாம் என்பதையும் வசனம் தொடர்ந்து விளக்குகின்றது.

(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
தம் தந்தையர்கள், (பெற்றத் தந்தை - வாப்பா, அத்தா, பெரியத்தா, சின்னத்தா)
தம் கணவர்களின் தந்தையர்கள் (மாமனார்கள், சின்ன பெரிய மாமனார்கள்)
தம் புதல்வர்கள் (மகன்கள்)
தம் கணவர்களின் புதல்வர்கள், (கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குந்தைகள் இருந்தால் அவர்கள்)
தம் சகோதரர்கள் (அண்ணன் தம்பிகள்)
தம் சகோதரர்களின் புதல்வர்கள், (அண்ணன் தம்பிகளின் மகன்கள்)
தம் சகோதரிகளின் புதல்வர்கள், (அக்காள் தங்கைகளின் மகன்கள்)
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) தளர்ந்து போன முதியவர்கள்.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. (அல்குர்ஆன் 24:31)


திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் ஆண்களுக்கு முன் சாதாரண உடையில் காட்சியளிக்கலாம். அதாவது மாமி, சின்னம்மா போன்றவர்கள் (திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்பதை அல்குர்ஆன் 4:23 வசனத்தில் அறியலாம்.

சாதாரண உடையுடன் பார்வையில் படலாம் என்ற பட்டியலில் அண்ணிகள் (அண்ணன் - தம்பி மனைவிகள்) அடங்கவில்லை என்பதால் அவர்கள் முகம் முன்கைகள் தெரியும் நிலையில் மட்டுமே மச்சான்களிடம் (கணவரின் உடன் பிறந்த சகோதரர்களிடம்) இருக்க வேண்டும்.

பெண்களை சாதாரணமாக பார்க்க அனுமதியுள்ளது என்றால் முஃமினான ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருள் அல்குர்ஆன் 24:30 வசனத்தின் பொருள் என்ன?

இங்கு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது பெண்களை விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் மட்டும் வரவில்லை. பொதுவாகவே தவறான - பாவமான அனைத்தையும் விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் வந்துள்ளது.

பார்வையில் பாவம் உருவாகும் நிலை இருந்தால் பெண்களை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.

கண்ணுக்கு இமையப் பாதுகாப்பாகத் தந்த அல்லாஹ் பெண்ணுக்கு \"புர்கா\"வைப் பாதுகாப்பாக தந்து உள்ளதால் துணிவுடன் அவர்கள் பணியிடங்களில் செயலாற்ற்லாம். ஆணுக்கும் கற்பு நெறி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் தான் ஆணகள் பார்வையைத் தாழ்வாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

Name: kavianban KALAM, Adirampattinam
email: shaickkalam@....
Location: Abu Dhabi, U.A.E
Subject: Appreciation
Message:

 


அஸ்ஸலாமு அலைக்கும். "விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது" நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதந்த வழிமுறையாகும். ஆனால் ஒருவரது வருமானம் ஹராமான முறையில் பெறப்பட்டதாக இருக்கும்போது அவருடைய அழைப்பை ஏற்றுகொள்ளலாமா?

Name: Azeezudheen
email: skn_azeesudeen@....
Location: Dubai
Subject: Kelvi

........

அனுமதிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஹராமான வழியில் பெறுகிறார் அதை அவர் பிறருக்கு கொடுக்கிறார் என்றால் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் தடையொன்றும் இல்லை.

பணம் என்பது ஹலாலான ஒன்று. அதை லஞ்சமாக பெற்ற ஒருவர் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறார் அல்லது நற்பணிகளுக்கு கொடுக்கிறார் என்றால் லஞ்சம் பெற்றதற்கு அவர் குற்றவாளியாவாரே தவிர அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளும் எவரும் மார்க்கம் அனுமதிக்கப்பட்டவழியில் அதைப் பெறுவதால் அவர்களுக்கு அது ஹராமாகாது.

நபி(ஸல்) அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தர்மப் பொருளை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஹலாலான பொருளை ஒருவர் தரமமாக நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு ஹராமாகும்.

பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2576

அல்லாஹ்வின் தூதரிடம் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார்.

.............................

இதை கவனத்தில் கொண்டு கீழுள்ள நபிமொழியைப் பாருங்கள்.

பாகம் 2, அத்தியாயம் 24,எண் 1495 அனஸ்(ரலி) அறிவித்தார்.

தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்' என்றார்கள்.

...........................

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5279

பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம்! (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு' என்றார்கள்.

....................

பரீரா என்ற நபித்தோழியருக்கு ஆட்டிறைச்சி தர்மமாக கிடைக்கின்றது. தர்மம் என்ற நிலையில் அது பரீராவுக்கு ஹலாலாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமாகவும் இருந்தது. தனக்கு கிடைத்த தர்மத்தை பரீரா நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றார். அதை நபி(ஸல்) பெற்றுக் கொண்டு (பிறருக்கு விளக்கமளித்து விட்டு) உண்கிறார்கள்.

இதிலிருந்து நமக்கு கிடைக்கும் வழி அனுமதிக்கப்பட்ட வழியா என்பதை மட்டும் பார்த்து விருந்தையோ - இதர எதுவொன்றையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்கலாம்.

இதை இன்னும் சற்று விளக்கமாக சொல்வதென்றால் யுதர்கள் பற்றிய விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

யுதர்கள் மீது வட்டி ஹராமாக்கப்பட்டது ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வட்டியில் மூழ்கினார்கள்.

وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُواْ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல் குர்ஆன் 4:161)

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2224
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.

யுதர்களைப் பொருத்தவரை அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது என்பதற்கு இந்த வசனமும் நபிமொழியும் சான்றாக உள்ளது.

இவர்களோடு நமக்குள்ள உறவைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,

وَطَعَامُ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ حِلٌّ لَّكُمْ

வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. (அல்குர்ஆன் 5:5) என்று குறிப்பிடுகின்றது. வேதக்காரர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்களைப் பற்றி குர்ஆன் 'அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது' என்று கூறிவிட்டு அவர்களின் உணவு உங்களுக்கு ஹலால் என்றும் குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நமக்கு வரும் வழி அனுமதிக்கப்பட்ட வழியாக இருந்தால் நாம் சாப்பிடலாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்க முடிகின்றது.

எனவே ஹராமான வழியில் பொருள் திரட்டுபவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தால் அதில் கலந்துக் கொள்வது பற்றி தடையொன்றும் இல்லை. அதே நேரம் அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்


அஸ்ஸலாமு அலைக்கும்.

யாருக்கு எது நடந்தாலும் 'இறைவன் உனக்கு எழுதி வைத்த தலை எழுத்து என்று சொல்லுவார்கள்' அப்படியிருக்கும் போது அதன் படிதான் மனிதனும் நடக்கின்றான்.குடிக்காரன் குடிக்கிறான் கெட்டவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், இதுவும் இறைவன் எழுதிய எழுத்து என்றால், ஏன் தண்டனை தர வேண்டும் இறைவன். இது என் தோழியின் கேள்வி.

nahl199(att)...dotcom


எல்லாமும் இறைவனின் விதிப்படிதானே நடக்கின்றது. பிறகு நாம் எப்படி குற்றவாளியாவோம் என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கின்றது. இறைவன் நாடியதுதான் நடக்கும், இறைவன் நாடாமல் எதுவொன்றும் நடக்காது என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வசனங்களை இவர்கள் தங்களின் விதி நம்பிக்கைக்கு சாதகமாக நினைத்துக் கொள்கின்றார்கள். விதியைப் பற்றியோ அல்லது குர்ஆன் வசனங்களை விளங்காமையோதான் இத்தகைய சிந்தனைக்கு அவர்களைத் தள்ளுகின்றது.

அவர்கள் விளங்கும் விதத்தி்ல் நாமும் சில கேள்விகளைக் கேட்போம்.

இறைவன் விதித்தப்படிதான் எல்லாமும் நடக்கின்றது என்று கூறினால் அதே இறைவன் தான் தூதர்களை அனுப்பி, வேதங்களை வழங்கி 'தூதர் காட்டிய வழியிலும், வேதத்தின் வழியிலும் வாழுங்கள்'என்கிறான். இதுவும் இறைவனின் விதிதான். விபச்சாரம் செய்து விட்டு 'இது விதி' என்று சொல்லுபவர்கள், தவறான காரியங்களில் ஈடுபட்டு விட்டு 'இது விதி' என்று கூறுபவர்கள் இறைவன் விதித்த "நல்வழியில் செல்லுங்கள்' என்ற விதியை ஏன் புறக்கணிக்கிறார்கள். அதுவும் விதிதானே..

விபச்சாரம் செய்வதற்கோ, திருடுவதற்கோ, கொலை செய்வதற்கோ, மோசடிப் போன்ற அநேக ஈனச்செயல் செய்வதற்கோ அதில் ஈடுபடுபவர்கள் புறத்திலிருந்து ஒரு முயற்சி இருக்கத்தான் செய்கின்றது. அவர்களின் சுய முயற்சி இல்லாமல் இதுவெல்லாம் நடப்பதில்லை.இதே முயற்சியை அவர்கள் நல்லக்காரியங்களில் செய்து விட்டு 'விதிப்படிதான் நடக்கின்றது' என்று சொல்லிப் பார்க்கட்டும் அப்போது விதியின் அர்த்தம் புரியும்.

விதிவாதம் பேசுபவர்கள் தங்கள் வீட்டில் ஒரு திருட்டுப் போனால் விதிப்படி போய்விட்டது என்று பேசாமல் இருப்பதில்லை. அதை கண்டுப்பிடிக்க முயல்கிறார்கள், காவல் நிலையம் செல்கின்றார்கள். சொந்த பந்தஙகள் சொத்துப் போன்றவற்றை அபகரித்துக் கொள்ளும் போது விதியென்று மெளனமாக இருக்காமல் நீதிமன்றம் செல்கின்றார்கள். வீட்டில் இருக்கம் கன்னிப் பெண்களுக்கு 'விதிப்படி கல்யாணம் நடக்கும்' என்றில்லாமல் நல்லக் கணவனைத் தேடி அலைகின்றார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் அவர்கள் சிந்தித்தால் விதி என்னவென்பது அவர்களுக்கு விளங்கும்.

இஸ்லாம் விதியை நம்ப சொல்கின்றது. அதன் அர்த்தம் என்ன?

எந்த ஒரு காரியம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் மீறி நடக்கின்றதோ அது இஸ்லாமியப் பார்வையில் விதி.மரணம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் கடந்து நடப்பதாகும் அது விதி. இழப்பு (உதாரணம் சுனாமி) நம் பாதுகாப்பு அரண்களை மீறி நடந்ததாகும் அது விதி. விபத்துக்களில் உயிரிழப்பது, கடும் நோய்களால் அவதிப்பட்டு மடிவது, குழந்தைப்பேறுக்காக அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகும் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போவது, பருவ மழைத் தவறி விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவது போன்ற உதாரணங்களை இங்கு சொல்லலாம்.ஈராக், பாலஸ்தீனம், சோமாலி, ஆப்ரிக்காவின் அநேக நாடுகளாக இருந்தால் இதே உதாரணங்கள் அங்கு வேறு விதமாக வெளிப்படும்.

நம் கட்டுப்பாட்டுக்குள் ஒரு தவறு நடந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு. (உதாரணம் தற்கொலை) இதற்கு இறைவன் தண்டனை அளிப்பான். வட்டி - சூது -திருட்டு - அபகரிப்பு போன்ற பாவங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்து நடப்பதாகும். அதாவது அதற்கு நாமே முயற்சிக்கிறோம் என்பதால் அதற்கு தண்டனையுண்டு. ஏனெனில் இவ்வாறு நடந்துக் கொள்ளக் கூடாது என்று இறைவன் தான் விதித்துள்ளான். இவற்றைப் புரிந்துக் கொண்டால் விதி என்றால் என்னவென்று விளங்கும்.

சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். ”நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்” என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற் கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர்.

மேலும் அவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் ‘விதி’ இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது. இறைவணக்கத்தில்
ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா? தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர்எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக் காதது முரண்பாடாகவும் உள்ளது.

எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக் கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

விதியை விளக்கும் இறைவசனம்.

”உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காக வும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ” (திருக்குர்ஆன் 57:23)


அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா? ஏன் என்றால் நான் ஒரு மாற்றுமத பெண்ணை விரும்புகிறேன். அவள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக நான் அவளை திருமணம் செய்து கொள்வேன். இருப்பினும் இதுவரை நான் அவளை இஸ்லாத்தை ஏற்குமாறு சொல்லவில்லை. இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாம் என்ன சொல்கின்றது? அந்த பெண்ணின் கவர்ந்த பார்வையிலிருந்து / அழகிலிருந்து விலகிக்கொள்ள ஏதேனும் துஆ உள்ளதா?

Name: riyaaz
email: riy_z@.....
Location: chennai
Subject: ques..

......................

ஆண்களும் பெண்களும் இரண்டற கலந்து - அதிலும் பெண்கள் கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்திக் கொண்டு உலவும் - சமூகங்களில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இறை நம்பிக்கையும் கட்டுப்பாடும் நிறைந்தவர்களாக வாழ வேண்டும். இதில் இடற்பாடோ குறைப்பாடோ ஏற்படும் போது 'இத்தகைய' காதலும்? வரும். காதலைக் கடந்த நிலைகளும் வரும்.

கால மாற்றங்களால் காதலும் மாறிப்போய் விட்டதை நாம் சொல்லி்த் தெரிய வேண்டியதில்லை. கணடதும் காதல் என்பதும், காதலின் அர்த்தம் கலவிக்கு இடம் தேடுவதுதான் என்பதும் இன்றைய பெரும்பாலான காதல்களின் பொதுவிதியாகி போய் விட்டது.

உலகெங்கும் அங்கீகரிக்க்ப்பட்டு விட்ட ஒரு திறந்த நிலை விபச்சார நாளுக்கு 'காதலர்தினம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக திரையரங்குகளும், ஹோட்டல் ரூம்களும், பார்க், கடற்கரையின் ஒதுங்குப்புறங்களும், பிறரின் தொந்தரவு இல்லாத ஒதுங்குப்புறங்களும் காதலரர்களால் 'புக்' பதிவு செய்யப்படுகின்றன.

டிஸ்கோதேக்கள், பார்கள், கிளப்கள் அன்றைய தினம் நிறைந்து வழியும். விடிய விடிய குடி கூத்து கும்மாளம் என்று பொழுது நகரும். அன்றய தினம் இங்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தால் வந்துள்ள அவ்வளவு பேருமே 'காதலர்களாக?ஸ இருப்பார்கள்.

அழகுப் பெண்ணின் தாயார் என்றால் அத்தையாக்கிக் கொள்ளும் காதலையும், பாவாடை தாவணி கிடைக்கலைன்னா சுடிதார் பொண்ணை லவ் பண்ண தூண்டும் காதலையும் திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கின்றன. திரைப்படங்கள் சொல்லும் காதல்கள்தான் உண்மையான காதல் இலக்கணம் என்றே இன்றையக் காதலர்கள் நம்புகிறார்கள். அதுவே அவர்களின் காதல் உணர்வாக இருக்கின்றது.

அதன் விளைவுதான் யார் யாரை வேண்டுமானாலும் 'லவ்' பண்ணலாம் என்ற நிலைக்கு இளைஞர்களையும், இளைஞிகளையும் தள்ளுகின்றது.

இஸ்லாம் காதலுக்கு எதிரானதல்ல. காதல் என்றால் என்னவென்று தீர்மானிப்பதில் இஸ்லாம் வேறுபடுகின்றது.

திருமண வாழ்க்கை என்பது சந்தோஷ்ப்பதற்குதான். சந்தோஷம் வேண்டுமானால் மனதிற்கு பிடித்த துணை வேண்டும். அதனால் தான் 'மன விருப்பமான' திருமணங்களையே இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

فَانكِحُواْ مَا طَابَ لَكُم (உங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்துக் கொள்ளுங்கள், அல்குர்ஆன் 4:3) என்ற உரிமையையே இஸ்லாம் வழங்குகின்றது.

பிடித்தமானவர்கள் என்று இறைவன் சொல்லி இருந்தாலும், பிடித்தமானவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறான். திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையாக, கூடி களையக் கூடிய வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. அது பாரம்பரியத்தையும் பிறருக்கு நல்லப் பாடத்தையும் உணர்த்த வேண்டும். அதற்கு தேவையான, பிடித்தமான பெண் வேண்டுமானால் இறைவன் சொல்லும் இலக்கணத்துக்குரியவர்களே பொருத்தமாக அமைவார்கள்.

وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ (இறைவனுக்கு இணைத்துணை, மனைவி மக்கள் என்று நம்பி) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். (அல் குர்ஆன் 2:221)

இந்த வசனத்திலிருந்து பிற மதப்பெண்களால் நாம் கவரப்படுவோம் என்பது விளங்குகின்றது. (சகோதரர் ரியாஸ் போன்றவர்களின் காதல் சொல்லும் பாடம்). ஆனாலும் ஒரு முஃமின் அந்தக் கவர்ச்சியில் மயங்கி தன்னை அந்த நிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அவர்கள் ஓரிறைக் கொள்கையால் கவரப்பட்டு மனமாற்றம் அடைந்தால் அப்போதுதான் அவர்களுடனான திருமண உடன்படிக்கையை இஸ்லாம் அங்கீகரிக்கும். அதுவரை அவர்கள் எத்துனைப் பேரழகியாக, படித்தவர்களாக, பணக்கார்களாக, பண்புள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களுடனான வாழ்க்கைத் துணைக்கு பொருந்தாதவர்கள் என்பதை முஸ்லிம் இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விழியில்விழுந்து
இதயம் நுழையும் காதல்
உயிரில் கலந்த
உறவாக ஆக வேண்டுமானால்
அது உயர்வான இறைவனின்
வழிகாட்டுதலில் வந்தால்தான் நடக்கும்.

சகோதரர் ரியாஸ் போன்றவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை. நீங்கள் விரும்பும் பெண்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், ஓரிறைக் கொள்கைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அந்தக் கடமை நமக்கு உண்டு. இறைவன் நாடி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாம் சொல்லும் வரைமுறையில் நின்று பழகி திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

முடியாத பட்சத்தில், நம் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு ஒதுங்கிச் செல்வதுதான் நமக்கு மேல்.


முஸ்லிம் ஆண்கள் தங்கம் அணிவதற்கு ஏன் அனுமதியில்லை. மாற்றுமத சகோதரர் இதைப்பற்றி என்னிடம் கேட்கிறார். தெளிவாக விளக்கவும்.

Name: Syed Mansoor
email: alshifas@...
Location: Abu Dhabi
Subject: Question

...................

ஆண்களுக்கு தங்கம் ஹராம் என்று இறைத்தூதர் தடுத்தது உண்மைதான். எல்லா நிலைகளிலும் ஆண் ஆணாகவும் - பெண் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்ற இயல்பை இஸ்லாம் விரும்புகின்றது. நடை - உடை - பாவனை - பேச்சு - செயல்பாடு என்ற அனைத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

பெண்ணை பெண் என்று எடுத்துக் காட்டும் உடைகளை ஆண்களோ, ஆண்களை அடையளாப்படுத்தும் உடைகளைப் பெண்களோ அணியக் கூடாது என்றும் இஸ்லாம் சொல்லியுள்ளது.

அதே போன்று தான் அணிகலன்களும். தங்கம் என்பது பொதுவாக, காலாகாலமாக, பெண்களுக்கான ஆபரணம் என்று வழக்கில் உள்ளது. தங்க நகை அணியும் போது ஒரு பெண் கூடுதல் அழகைப் பெறுகிறாள். அவளுக்கென்று, அவள் அழகை மேம்படுத்தும் ஆபரணமாக இருப்பதை ஆணும் தனக்காக்கிக் கொள்ளக் கூடாது என்ற கருத்து இதில் அடங்கி இருக்கலாம். ஆண் தங்கம் அணிவதால் அவன் அழகு மேம்படப் போவதில்லை. அது வெறும் 'பந்தா' தோரணையை மட்டுமே ஏற்படுத்தும்.

மைனர் சைன் என்று போட்டுக் கொள்ளும் சிலர் தங்கள் சட்டையின் சில பொத்தான்களை திறந்து விட்டுக் கொண்டு, தெருக்களில் பெண்களுக்கு முன்னால் உலவுவதைப் பார்க்கலாம். ஆண்கள் தங்கம் அணிவது இத்தகைய செயல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

தேவைக்கு ஆண்கள் தங்கம் அணிவதை இஸ்லாம் தடுக்கவில்லை. உடைந்துப் போன, அல்லது பிடுங்கி எடுத்த பற்களுக்கு பதிலாக இன்றைக்கு நவீன சிகிட்சை முறை பிரபல்யமாகி புதிய செயற்கைப் பற்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் பற்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்தி வந்தனர். அத்தகைய தேவைக்கா ஆண் தங்கத்தைப் பயன்படுத்தினால் தடையில்லை. நவீன அறுவை சிகிட்சையில் இன்றைக்கு பொருத்தப்படும் உடல் உறுப்புகள் போன்ற வளர்ச்சியில்லாத காலத்தில் போரில் மூக்கு வெட்டப்பட்ட ஒருவர் தங்கத்தால் மூக்கை வடிவமைத்துக் கொண்டார் அதை இறைத்தூதர் அனுமதித்தார்கள்.

சிறிய அளவிளான இத்தகைய தங்கங்களை தேவைக்கேற்ப ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கம் - பட்டு - வெள்ளிப் போன்றவை பெண்கள் பிரத்யேகமாக பயன்படுத்துபவையாகும். அதில் ஆண்கள் போட்டிப் போடக் கூடாது என்பதால் அவை ஆண்களுக்கு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆரம்ப வரிகளைப் படியுங்கள். "ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் (எல்லா நிலைகளிலும்) இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புவதைப் புரிந்துக் கொண்டால் இந்தத் தடைக்காண அர்த்தம் புரிந்து விடும்.


அன்பு சகோதரருக்கு

முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.

கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது "அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்" என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.

Name: ansar
email: hssnansar@...
Location: srilanka
Subject: Question

....................................

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒட்டகம் இல்லை என்பதற்காக அது வாழக்கூடிய அரபு பிரதேசத்திலிருந்தோ அல்லது ராஜஸ்தானிலிருந்தோ கொண்டுவரமுடியாது என்று அர்த்தமாகிவிடாது.

கங்காரு என்ற விலங்கு இந்தியாவில் எங்குமே வாழுவது கிடையாது. ஆதனால் அந்த விலங்கை அது வாழக்கூடிய ஆஸ்திரேலியாபோண்ற நாடுகளிலிருந்து கெண்டுவர முடியாது என்று அர்தமாகிவிடுமா?

அது போலத்தான் அக்காலத்தில் பலம் வாய்ந்த மன்னனாக இருந்த அப்ரஹா என்பவன் தனது பலத்தைக் காட்டுவதற்காக யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் இன்னும் தனது ராஜ்யத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தனக்கு தேவையான படைகளையும் அது கிடைகக்கூடிய பகுதிகளிலிருந்து தயார் செய்திருப்பான். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு இது ஒன்றும கஷ்டமான காரியமாக இருக்காது.

இந்தக் கேள்வி எப்பொழுது வரும் என்றால்? 1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லைஎன்றாலோ, அது விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் எப்படி ரோபோவைக் மனிதன் உருவாக்குகின்றானோ அதே போலத்தான் யானைகளையும் உருவாக்கினான் என்று சொன்னால் தான் இந்தக் கேள்வியே வரவேண்டும்.

1400 ஆண்டுகளும் முன் யானைகள் இருந்தததா? இல்லையா? என்பதை சகோதரர் கிறிஸ்தவர் என்பதால் மற்ற ஆதாரங்கள் வைத்து நிரூபிப்பதைவீட பைபிளின் சான்றுகளை வைத்து நிரூபிப்பது தான் சரியாக இருக்கும் என்பதால் அதையே நாம் சான்றாக வைக்கின்றோம்.

'ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

1 இராஜாக்கள் 10 : 22, 2 நாளாகமம் 9 : 21

மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன். அப்பொழுது யானைத்;தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும் பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆமோஸ் -3:15

தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள். அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது. யானைத்;தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக்கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 15

அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது. அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

உன்னதப்பாட்டு – 5 : 14

உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், ...
உன்னதப்பாட்டு 7 : 4

இந்த பைபிள் வசனங்களில் வந்துள்ள யானைத் தந்தங்கள் என்பது யானைகளே அந்தக்காலக்கட்டத்தில் இல்லாமல் இருந்திருந்தால் பைபில் குறிப்பிட்டுள்ள இந்த மன்னர்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்?

தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை கப்பல்களின் மூலமாக கொண்டுவந்துள்ளார்கள் என்பதையும், வியாபாரிகளான தேதான் புத்திரர்கள்;; தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை உலகின் பலத் தீவுகளுக்கு சென்றுத்தான் வாங்கிவந்துள்ளனர் என்பதையும், யானைத்தந்தங்களையும், கருங்காளி மரங்களையும் அவ்வாறே கொண்டு வந்துள்ளனர் என்பதற்கு நாம் மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களே சான்றாகும்.

இங்கே நாம் குறிப்பிடும் பைபில் வசனங்களில் வரும் சம்பவங்கள் முஹம்மது நபி (ஸல்) பிறப்பதற்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்;
 

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை