கிளிக் - 5

கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும்


  சீர் திருத்தத்திற்காக.. (6)              திருப்பந்துருத்தி மஸ்தூக்கா

பஞ்சா எடுப்பதும்- தீ மிதிப்பதும்

முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் நம்மில் சிலர், மார்க்கத்தில் இல்லாத இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;.

பிற மதத்தவரின் தீ மிதித் திருவிழாவைப் பின் பற்றி அன்றைய திpனம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹுஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர்.

இப்படிப்பட்ட காட்டுமராண்டித் தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. இவை யாவும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கொடிய பாவங்களாகும்.

பக்தியின் பெயரால் தீ மிதிக்கும் செயலை - கடவுள் பக்தி அறவே இல்லாத நாத்திகர்களும் கூட செய்து காட்டுகின்றனர்.

பஞ்சா என்ற பெயரில் அன்றைய தினம் கைச் சின்னத்தைக் கையிலேந்தி மாலை மரியாதையுடன் பவனி வருவதும் மார்க்கத்தில் மாபெரும் பாவச் செயலாகும்.

பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள். நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள்.

ஓரிறைக் கொள்கையை வேறுக்கும் இது போன்ற கொடிய குற்றங்கள் ஈமானுக்கே ஆபத்தானவை. எச்சரிக்கை.

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின் பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) நிச்சயமாக ஏவுவான்.(அல் குர்ஆன்:24:21)


புதுக்கணக்கும் பொய்க்கணக்கும்

வீடுகளில் மூடப் பழக்கங்கள் வியாபார நிறுவனங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அவற்றில் ஒன்று தான் புதுக் கணக்கு எழுதுதல்.

தொழிலில் ஏற்படும் லாப நஷ்டங்களை அறிந்துக் கொள்ளவும் வருமானக் கணக்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவும் கணக்கு எழுதி வைக்க வேண்டும்.

அரசாங்கத்தை ஏமாற்றப் பொய்க்கணக்கு எழுதுபவர்களும் உண்டு. இவர்கள் கூடப் புது வருடத் துவக்கத்தில் புதுக் கணக்கு எழுத, சிலச் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் பாத்திஹா ஓதுவதற்குத்தான் சில அசரத்துமார்கள் இருக்கின்றார்களே! கூப்பிட்டதும் ஓடி வந்து ஒரு அவசர பாத்தியாவை ஓதிவிட்டு தட்சனையை பெற்றுக் கொள்வ தோடு அவர்கள் வேலை முடிந்து விட்டது.

இப்படியெல்லாம் மார்க்கத்தில் இல்லை என்று எப்படி சொல்வார்கள்.புதுக் கணக்கு எழுதினால் நமக்கென்ன, பொய்க் கணக்கு எழுதினால் நமக்கென்ன? நமது வருமானக் கணக்கு சரியானால் போதும் என்று இருந்து விடுகிறார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைத்த குற்றத்துக்கு ஆளாவதை அவர்கள் உணரவில்லை.

பாத்திஹா ஓதி சடங்கு சம்பிரதாயங்களுடன் புதுக் கணக்கு எழுதிவிட்டால் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும் என்றால்- நஷ்டத்தில் நடந்துக் கொண்டிருக்கின்ற அல்லது மூடப்பட்டு விட்ட கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், அசரத்தைக் கூப்பிட்டு அல்பாத்திஹா ஓதி புதுக் கணக்கு எழுதிவிட்டால் புத்துயிர் பெற்று விடுமே!

தொழிலில் நேர்மையும், ஹலாலான முறையும், தரமான பொருளும், கனிவான பேச்சும், நியாயமான விலையும், வியாபாரத்தைப் பெருக்கும். புதுக் கணக்கு பூஜைகள் வருமானக் கணக்கில் எவ்வித மாற்றத்தையும் எற்படுத்திவிடாது.
 


786 எழுதுவது கூடுமா?

சிலர் கடிதம் எழுதும் போதும், அல்லது ஏதேனும் எழுதத் தொடங்கும் போதும், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று தொடங்குவதற்குப் பதிலாக 786 என்று எழுதுகின்றனர்.

நியூமராலஜி என்னும் எண் கணித முறையில், ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்துவர்.

இதே முறையைப் பின்பற்றி அரபி எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்தும் முறை சில வழிகேடர்களால் உருவாக்கப் பட்டது.

ஜோதிடத்தில் ஒரு வகையான பால் கித்தாபு பார்க்கும் கொடிய யூத கலாச்சாரத்திற்கு இந்த அரபி நியூமராலஜி தான் அடிப்படை காரணமாகும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்... என்னும் அழகான பொருள் கொண்ட திருமறையின் உன்னத வாக்கியத்தை- இறைவன் கற்றுத் தந்த இனிய வாசகத்தை, சில வழிகேடர்கள் 786 என்னும் எண்ணாக மாற்றி வேத வரிகளுடன் விளையாடுகின்றனர். இது மிகவும் தவறு.

கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதும் போது தவறுதலாகக் கண்ட இடங்களிலும் விழுந்து விடலாம். எனவே தான் 786 எழுதுவதாகச் சிலர் கூறலாம். அப்படியானால் 786 என்பதில் புனிதம் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். புனிதம் இல்லாததை ஏன் எழுத வேண்டும்?

எவரேனும் தமது பெயருக்குப் பதிலாக இவ்விதம் பெயரில் உள்ள எழுத்துக்களை எண்களாக்கி அழைக்கப் படுவதை விரும்புவாரா? அப்படியிருக்க அல்லாஹ்வின் திருநாமத்தை எப்படி எண்களாக்குகிறார்கள்?

அரபியில் ஹரே கிருஷ்னா என்று எழுதி அதன் எண்களைக் கூட்டினாலும் இதே கூட்டுத் தொகை தான் வரும். எனவே இது போன்ற மூடப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால் எதையும் தொடங்க வேண்டும்.
                                         (வரும் இன்ஷாஅல்லாஹ்)

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த...

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை.

www.tamilmuslim.com