கண்மூடிப் பழக்கங்கள்

     மண்மூடிப் போகட்டும்     தொடர் - 7

அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

தொடர் - 6

பள்ளிகளில் உண்டியல் வசூல்


புதிய பள்ளிவாசல் கட்டட நிதிக்காகவும் ஏழை மாணவர்கள் பயிலும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களுக்காகவும் வெள்ளிக் கிழமைகளில் அதிகமானோர் தொழுகைக்குக் கூடுவதால் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு சில சமயம் நிதி வசூல் செய்வது வழக்கத்தில் உள்ளது. இது தவறு அல்ல.

ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் பல பள்ளிவாசல்களில் இதையே வழக்கமாக்கிக் கொண்டுவிட்டனர். ஜும்ஆத் தொழுகை முடிந்து சலாம் கொடுத்ததும் இந்த வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர்.

சமூகத்தில் ஏற்பட்ட மூடப் பழக்கங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இப்படித்தான் சிறுகச் சிறுக மூக்கை நுழைத்தன. போகப் போக பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.

முதலில் பெருநாளைக்கு மட்டும் என்றிருந்த இப்பழக்கம், இப்போது ஒவ்வொரு ஜும்ஆவுக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டது. பிறகு தினமும் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் என்று தொடர ஆரம்பித்து விட அதிக காலம் பிடிக்காது.

இதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு பள்ளிகளைப் பரிபாலனம் செய்வதாகப் பள்ளி நிர்வாகிகள் கூறலாம். பைத்துல்மால் என்னும் இஸ்லாமியப் பொது நிதி இல்லாத பள்ளிகளை நிர்வகிக்க பொருளாதாரம் தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு வழி இதுவல்ல.

அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்களிடம், அல்லாஹ்வின் பள்ளிக்காக செலவுச் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொன்னால் வாரி வழங்க எத்தனையோ தயாள மனம் கொண்ட செல்வந்தர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பள்ளிச் சொத்துக்களை அல்லாஹ்வுக்கு அஞ்சிய நல்லவர்களிடம் ஒப்படைத்து ஹலாலான முறையில் வருமானம் கிடைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து நிரந்தர வருமானத்திற்கு வழி வகை செய்யவேண்டும்.

வாரந்தோறும் ஜும்ஆத் தொழுகையை வசூலுக்கு பயன்படுத்தும் வன் கொடுமையை பள்ளி நிர்வாகிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இப்பழக்கம் எதிர் காலத்தில் பெரும் விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எச்சரிக்கை!

---------------------------------------------


முரீது வாங்க வேண்டுமா?


பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.

'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள்.

எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.

இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.

இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்குச் சொல்லக்கூடாது என்பார்கள்.

இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தெள்ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்று ஏமாற்றுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)


இவ்வளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.

ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதுகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே!

எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம்.

இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதையெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும்.

அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

---------------------------

மீலாது விழா

அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடும்போது, உலகத்தின் எல்லா தலைவர்களையும் விட எல்லா வகையிலும் உயர்வான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா கொண்டாடுவது எப்படித் தவறாகும்?

வருடந்தோறும் ரபீவுல் அவ்வல் 12 ஆம் நாள்- மீலாது விழா கொண்டாடுவோரின் வாதம் இது.

தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட,  நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தான் இந்த மீலாது விழா என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மார்க்கத்தில் இதற்கு அனுமதி உண்டா? நம்மை விடப் பன்மடங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருந்த - தம் இன்னுயிரைக் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருந்த - நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தபோதோ அல்லது அவர்கள் இம் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகோ இப்படி மீலாது விழா கொண்டாடினார்களா?

நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்த வேண்டும், எனில் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது தான். அவர்களின் அங்கீகாரம் இல்லாத மீலாது விழாவை கொண்டாடுவது அவர்களை மகிமைப் படுத்துவதாகாது.

தம் மீது ஸலவாத் சொல்லும்படி கேட்டுக் கொண்ட நபி (ஸல்), தமக்காக மீலாது விழா கொண்டாட வேண்டும் என்றால் அதையும் சொல்லியிருப்பார்கள்.

மீலாது விழா கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்தும் என்றிருந்தால், நபித் தோழர்கள் நம்மை விட இச்செயலில் முந்தியிருப்பார்கள்.

வருடத்தில் ஒரு நாள் மீலாது விழா கொண்டாடி விட்டு மற்ற நாட்களில் அவர்களை மறந்து விடுவதை விட- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் அவர்களை நினைக்கவேண்டும். அவர்களின் பொன்னான போதனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். அதிகமதிகம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். இதுவே அவர்களை மகிமைப் படுத்தும்.


---------------------------------------------

சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும்

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தொண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.

அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.

அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.

அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.

'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.

அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.

பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?

யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹுiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)

நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?

பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.                     (வரும் இறைவன் நாட்டப்படி)

 

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த...

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை.

www.tamilmuslim.com