www.tamilmuslim.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்
 

தன்னார்வ உபரி நோன்புகள்

ஆதில் ஸலாஹி


வணக்க வழிபாடுகளின்பால் முஸ்லிம்களை ஈர்த்த சிறப்பான ரமலான் மாதம் நிறைவடைந்து விட்டது. இந்த மாதம் முழுவதும் அதிகாலை முதல் அந்திசாயும் வரை நாம் குடிக்காமல், உண்ணாமல் நோன்பிருந்தோம். இந்த இரண்டு தேவைகளுக்காகவும் நம் உடல்கள் ஏங்கியபோதும் அந்தக் கடமையில் கண்ணாயிருந்தோம். இயற்கையின் அடிப்படைத் தேவைகளை புறக்கணித்து மனமுவப்புடன், இறைவனின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு கீழ்படியும் இந்தத் தன்மையை மனிதனின் உள்ளத்தில் இந்த நோன்பு ஏற்படுத்துவதினால்தான் அது அல்லாஹ்வின் சன்னிதியில் மற்ற வழிபாடுகளையெல்லாம் விட மகத்தான பரிசைப் பெற்றுத் தருகிறது.

வாலிப வயதடைந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும். எனினும், கட்டாயக் கடமைகளையும் தாண்டி தன்னார்வத்துடன் உபரியாக எவ்வளவு வேண்டுமானாலும் எத்தகைய வணக்கத்திலும் ஈடுபடலாம் என்பதை நாம் அறிவோம். இத்தகைய உபரியான வழிபாடுகள் மிக உயர்ந்த நன்மைகளை பெற்றுத் தருபவையாகும். ஆகவே இந்த விஷயத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய தனிப்பெரும் கருணையினாலும், பெருந்தன்மையினாலும் மட்டுமே அளவிடப்படக்கூடிய அளவிற்கு பிரத்யேகமான பரிசுக்குரிய வணக்க வழிபாடாக நோன்பு இருக்கின்ற உண்மையை அறிந்துக்கொண்ட முஃமீன்கள், சுவர்க்கத்தை அடைய இதைவிட சிறந்த வழி என்ன இருக்க முடியும் என்று எண்ணி தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாட்களும் நோன்பு நோற்று விடலாமே என்று அவா கொள்வார்கள். ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் இவ்வாறு நோன்பு நோற்றால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு நபிவழியில் நாம் தரும் விடை இத்தகைய நோன்பு நபி (ஸல்) அவர்களது வழிமுறைக்கு எதிரானது என்பதாகும். தொடர்ந்து உபரியான நோன்புகளை நோற்ற அப்துல்லாஹ் இப்னு அம்ர் என்ற நபித்தோழரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டித்த நபிமொழியை நாம் அறிவோம். இன்னும் சொல்லப்போனால், இந்த வகை நோன்புகளை ஒருமுறைக்கும் மேலாகவே நபிகளார் கண்டித்திருக்கின்றார்கள். நபியவர்களது சொந்த வாழ்க்கையிலேயே சில நாட்கள் நோன்பிருப்பார்கள், சில நாட்கள் விட்டுவிடுவார்கள். மிக அதிகமாக ஒரு முஸ்லிம் நோன்பு நோற்க அனுமதிக்கப்படுவது ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற விதத்தில் ஆகும். தாவுத் நபி (அலை) அவர்கள் இவ்வாறு நோன்பு நோற்றிருப்பதால், இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

இதை இவ்வாறு அறியும் வேளையில், எந்தெந்த நாட்கள் உபரியான நோன்பிற்கு பரிந்துரைக்கப்பட்டவை என்பதையும் நாம் அறிவது அவசியம். உபரியான நோன்பு என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நபி (ஸல்) அவர்கள் ரமலானைத் தொடர்ந்து நம்மை நோற்கும்படி ஏவிய ஆறு நாட்களாகும். பெருநாள் அன்று நோன்பு நோற்க தடையிருப்பதை எல்லோரும் அறிவோம். இந்தத் தடைக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று - பெருநாள் தினம் ரமலானுடைய தொடர்ச்சியாக கருதப்படும் வாய்ப்புள்ளது, ரமலான் மாதத்தின் நாட்களை கூட்டுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. சில அறிஞர்கள் ஷவ்வால் மாதத்திலேயே இந்த ஆறு நோன்புகளை நோற்க வேண்டும் என்கின்றனர். வேறு சிலரோ அவ்வாறு அவசியம் இல்லையென வாதிடுகின்றனர். சரி ஏன் ரமலானுக்குப் பிறகு ஆறு நாட்கள் மட்டும் நோன்பு நோற்க வேண்டும்? அதற்குக் காரணம் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் அல்லாஹ் பத்து மடங்கு நன்மைகளை வாக்களித்துள்ளான். அதாவது, ஒருவர் ரமலானுடைய மாதம் முழுவதும் நோன்பிருந்தால் அது பத்து மாதங்களுக்குச் சமமானது. கூடுதலாக அவர் ஆறு நாட்களில் நோற்கும் நோன்பானது அறுபது நாட்கள் அல்லது இரண்டு மாதங்களுக்குச் சமமானது. ஆக பன்னிரண்டு மாதங்கள் அல்லது ஒரு வருடம் அவர் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுகிறார்.

அது மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நம்மை ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதற்கும் ஒன்றுக்கு பத்து என்ற நன்மைகளின் கணக்கே காரணம். இந்த அடிப்படையில் மூன்று நாட்களின் நோன்பு ஒரு முழு மாதத்தின் நன்மையைப் பெற்றுத் தருகிறது. இவ்வாறு ஒருவர் வழமையாக ஒவ்வொரு மாதமும் நோன்பிருந்தால் அவர் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுகிறார். மாதத்தின் எந்தெந்த நாட்களில் நோற்கலாம் என்பதிலும் மார்க்க அறிஞர்கள் வித்தியாசம் கொள்கின்றனர். சிலர் மாதத்தின் ஆரம்ப நாட்கள் நல்லது என்றும், சிலர் மாதத்தின் இறுதியில் உள்ள நாட்கள் என்றும், இன்னும் சிலர் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒரு நாள் வீதம் நோற்பதுதான் நல்லது என்றும் சொல்கின்றனர்.

எனினும், ஒருவர் இந்த மூன்று நாட்களை மாதத்தின் மத்தியில் அமைத்துக் கொண்டால், நோன்பின் நன்மையோடு சேர்த்து நபியின் சுன்னத்தைப் பேணிய நன்மையும் கிடைக்கும். காரணம், நபி (ஸல்) அவர்கள் மூன்று வெள்ளை நாட்களில் நோற்பதை ஆதரித்துள்ளார்கள். மாதத்தின் மத்தியில் உள்ள மூன்று நாட்களின் இரவுகள் முழு நிலவின் காரணமாக பகல் போன்று வெண்மையாக இருப்பதால் அவற்றை வெள்ளை நாட்கள் என்றனர்.

உண்மையில், மாதத்தின் எந்த மூன்று நாட்களில் நோற்றாலும் அதே அளவு நன்மை கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் ஒரே ஒரு விதிவிலக்கான நாள் மட்டும் உண்டு. அது வெள்ளிக்கிழமையாகும். அதற்கு முந்திய நாளான வியாழன் அல்லது பிந்திய நாளான சனிக்கிழமையுடன் சேர்த்து வெள்ளிக்கிழமையும் நோற்கலாம். முஹம்மது பின் அப்பாத் (ரலி) என்ற நபித்தோழர் இன்னொரு நபித்தோழரான ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதற்கு எதிராக பேசினார்களா? என்று கேட்டதாகவும், அதற்கு ஜாபிர் (ரலி) ஆம் என்று பதிலளித்ததாகவும் அறிவிக்கிறார்.

மேலும், நபி (ஸல்) அவர்களது மனைவியரில் ஒருவரான ஜூவைரியா (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வீட்டுக்கு வந்தபோது தான் நோன்பு நோற்றிருந்ததைக் கண்டதும், நீ நேற்றும் நோன்பு வைத்திருந்தாயா? என்று கேட்டதாகவும், அதற்கு தான் இல்லையென்று சொன்னதாகவும், பிறகு நபியவர்கள் நீ நாளையும் நோன்பு நோற்க நாடியுள்ளாயா? என்று கேட்டதற்கு தான் இல்லையென்று சொன்னதாகவும், அதற்கு நபியவர்கள் அப்படியானால் இன்றைய நோன்பை விட்டுவிடு என்று சொன்னதாகவும் தெரிவிக்கின்றார். இதற்கு காரணம், பொதுவாகவே வெள்ளிக்கிழமையானது முஸ்லிம்களின் ஓய்வுக்கும், கொண்டாட்டத்திற்கும் உரிய நாளாகும். ஆகவே அதை உபரியான நோன்புக்காக தனிமைப்படுத்தி விடக்கூடாது.

இன்னும், திங்கள்கிழமைகளிலும், வியாழக்கிழமைகளிலும் நோன்பு நோற்பது சில ஹதீஸ்களின் அடிப்படையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், நபி (ஸல்) அவர்கள் எந்த நாளிலும் நோற்றிருக்கிறார்கள் என்பதை முன்பே நாம் குறிப்பிட்டுள்ளோம். வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோற்காமல், வாரத்தின் எந்த நாளில் நோற்றாலும் அதற்கு முழு நன்மை உண்டென்பதை இங்கு நாம் நன்கு விளங்கலாம். ஒரு நபித்தோழர் தான் விரும்பிய வித்தியாசமான எந்த நாட்களிலும் நபியவர்களை நோன்பாளியாக கண்டதாக அறிவிப்பதிலிருந்து எந்த நாளிலும் நோற்கலாம் என்பதை மேலும் விளங்கலாம். ஆயிஷா அம்மையாரிடம் நபியவர்கள் குறிப்பிட்ட சில நாட்களில் நோற்றார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் இல்லையென்று பதிலளித்ததிலிருந்தும் வாரத்தின் எந்த நாளும் உகந்ததுதான் என்பது உறுதியாகிறது.

எந்த சந்தர்ப்பத்திலும் நபி (ஸல்) அவர்கள் முழு மாதமும் உபரியான நோன்பை நோற்கவில்லை. அவர்கள் முழு மாதம் நோற்றார்கள் என்றால் அது ரமலான் மாதம் மட்டும்தான். இது எதற்கென்றால், ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நோன்பு நோற்பது நபிகளாரால் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று எவரும் தவறாக சொல்லிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான். இன்னும், ரமலானுக்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தில் மட்டும் உபரியான நோன்பின் எண்ணிக்கையை நபியவர்கள் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். எதிர்வரும் புனித ரமலான் மாதத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக நபியவர்கள் அப்படி செய்திருக்கலாம். ஒரு சில அறிவிப்புகளில் நபிகளார் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு வைத்திருந்ததாக கூறப்பட்டாலும் அதற்கு ஆதாரங்கள் தெளிவாக இல்லை. ஷஃபானின் பெரும்பாலான நாட்களில் சில நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை நோன்பாளியாக கண்டதினால் இவ்வாறு அறிவித்திருக்கலாம். ஆனாலும் உண்மையில் நபிகளார் முழு மாதமும் நோற்கவில்லை என்பதே சரியாகும்.

வேறு சில விஷேச தினங்களிலும் நாம் நோன்பு நோற்க வலியுறுத்தப்பட்டுள்ளோம். அப்படியான ஒரு விஷேச நாள்தான் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். அல்லாஹ் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை முஸ்லிம்களுக்கு கடமையாக்குவதற்கு முன்பாக இந்த தினத்தில்தான் ஆரம்பகால முஸ்லிம்கள் நோன்பு நோற்று வந்தனர். ஆகவே, இந்த குறிப்பிட்ட நாளில் ஒருவர் நோன்பு நோற்பது ஒருவரது விருப்பத்திற்குட்பட்டது. இதுபோன்றே, தியாகத் திருநாளுக்கு முந்திய தினமான அரஃபாத் நாளன்று ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு நோற்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தினத்தில்தான் தனது ஹஜ்ஜின் போது தன்னுடன் இருந்த முஸ்லிம்கள் காணும் வண்ணம்; அன்றைய தினத்தில் தாம் நோன்பு நோற்றிருக்கவில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் உறுதி செய்தார்கள்.

மேற்கண்ட இரண்டு தினங்களைத் தவிர வேறு எந்தவொரு விஷேசமான நோன்பு நாட்களும் இல்லை. இதில் சில முஸ்லிம்களிடம் வழக்கத்தில் உள்ள ரஜப் 27, ஷஃபான் 15, மீலாதுன்னபி தினம் ஆகியவையும் அடங்கும். இவற்றில் எந்த நாளும் நோன்பு நோற்க வழிக்காட்டப்படவில்லை.

ஆகவே, உபரியான நோன்பில் நன்மையிருப்பதால், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நபிவழியில் உபரியான நோன்புகளை நபிகளாரின் வழிமுறையில் நோற்பதுடன், தன்னுடைய குடும்பத்தினரையும், பிற முஸ்லிம்களையும் நோற்கத் தூண்ட வேண்டும். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் உபரியான நோன்பை நோற்று முழு வருடத்தின் நன்மையை அடைய நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக.

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை