வாசகர்களே... இது இணைய உலகம்.
கருத்துப் பறிமாற்றமும், கருத்து திணிப்பும் மிக வேகமாக
இணைங்கள் வழியாக பரவி வருகின்றன. இணையங்கள் வழியாக வழக்கம்
போல பயங்கரமாக பார்க்கப்படுவது இஸ்லாம் தான். இஸ்லாம்
என்றைக்குமே தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை
புறந்தள்ளியதில்லை. அந்த வகையில் இஸ்லாத்தை உயிர் மூச்சாகக்
கொண்ட முஸ்லிம்கள் விமர்சனங்களை எதிர்கொண்டு வரவேற்கவே
செய்வர்.தமிழ் இணைய உலகில்
விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக தங்கள்
சிந்தனையோட்டங்களை பதித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்
நேசக்குமார். (இது புனைப்பெயராக இருக்கலாம்)
அவரது பல விமர்சனங்களுக்கு சகோதரர்கள்
தொடர்ந்து பதிலளித்து வந்துள்ளார்கள். அவற்றை தொடர்ச்சியாக
இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம். இறைவன் நாட்டப்படி.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய
விமர்சனத்தில் ஒரு அரசியல் ஆதாயத்திற்காகவே நபி(ஸல்) தமது
ஆன்மீக பலத்தை பயன்படுத்தினார்கள் என்றும் இன்றைக்கு உலகில்
இஸ்லாமிய ஆன்மீக பலத்தை விட இஸ்லாமிய அரசியல் பலமே ஆதிக்கம்
வகுக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டை பதித்துள்ளார். அந்தக்
கட்டரையில் அபத்தங்களை அலசுகிறது *கொஞ்சம் அறிவு! கொஞ்சம்
இயலாமை!! கொஞ்சம் வன்முறை!!!* என்ற இந்தக் கட்டுரை.
கொஞ்சம் அறிவு, கொஞ்சம் இயலாமை, கொஞ்சம் வன்முறை.
அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்ற தனது கட்டுரையில்
தலைப்பில் கூட அரசியலையே முதன்மைப்படுத்தி இஸ்லாத்தின் ஆன்மீக
பலத்தை அரசியல் பலமாக சித்தரிக்க முற்பட்டுள்ளார் நேசக் குமார்.
தனது தகுதிக்கு ஏற்றார்போலதான் சிந்திக்க முடியும் என்பதை
இக்கட்டுரையின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளார்
நண்பர் நேசக்குமார்.
சந்திக்கும் தொலைவில் அவர் (போன்றோர்) இருந்தால்
கலந்துரையாடலுக்கோ, நேர்கானலுக்கோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
அதற்கு வழியில்லை என்றே நினைக்கிறேன்.
இஸ்லாம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமல்ல - 'அரசியலிலிருந்து
மதத்தை பிரித்து விடுங்கள்' என்று சொல்லி மதத்தை
ஊனப்படுத்துவதையோ, அரசியல் ரவுடித்தனங்களை கண்டுக் கொள்ளாமல்
மதம் ஒதுங்கி நின்று "மறைமுக ஆசிர்வாதம்" செய்து மகிழ்வதையோ
இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது.
இஸ்லாத்தின் ஆன்மீக பலம் நூறு சதவிகிதம் என்றால் அது
வழிகாட்டும் அரசியல் பலம் என்பதும் வலுவானதாகத்தான் இருக்கும்.
அரசியலை சொல்லாத எந்த ஆன்மீகமும்
ஆட்சியாளர்களை, அதிகாரம் பெற்றவர்களை 'வல்லாதிக்க'த்தின் பக்கமே
இழுத்து சென்றுக் கொண்டிருக்கும். அரசியலை சொல்லாத ஆன்மீக
மதங்களை ஏற்றவர்கள் ஆட்சிப் புரியும் நாடுகளின் 'ஆட்சியாளர்கள்
சிலரால் தான்' உலகம் அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறதே
தவிர நேசக்குமாரன் எடுத்துக்காட்டும் ஆப்கானிஸ்தான் - ஈரான் -
ஈராக் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களால் உலகின் அமைதி
கெட்டுப்போகவில்லை. ஆதாரங்கள் இல்லாத போதும் அனைவரும் பாடும்
பஜனையை நாமும் பாடினால் அது உண்மையாகி விடும் என்று
நேசக்குமாரர்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக்
கொள்ள வேண்டும். அதற்கு இயலாவிட்டால் குறைந்த பட்சம் தாம் யார்
என்பதை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவாவது செய்யட்டும்.
இனி நேசக்குமாரின் வாதங்களை பார்ப்போம்.
**அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாத்தின்
அடித்தளம் உருவமிலா ஏக இறைக் கொள்கை என்றால், அரசியல்
இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிவழிபாடு. இந்த அரசியல்
இஸ்லாத்தை நபிகளார் முன்மொழிந்ததற்கு பல காரணங்கள்
கூறப்படுகின்றன. அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று அந்தக் கால
கிறித்துவர்களும், யூதர்களும் கூறிய குற்றச்
சாட்டுக்களிலிருந்து, இன்று கூறப்படும் அச்சூழலுக்கேயான
நிர்ப்பந்தங்கள் என்பது வரை ஏகப் பட்ட காரணங்கள் இதன்
தோற்றுவாய் என அறிஞர்களால் இன்றளவும் விவாதிக்கப்
பட்டுவருகின்றன.**
உருவமில்லா இறைக் கொள்கை என்று இஸ்லாத்தில் எந்தக் கொள்கையும்
இல்லை. கடவுளை யாரும் நேரில் காணாததால் அவன் உருவத்தை யாரும்
கற்பனை செய்யாதீர்கள் என்பதுதான் இஸ்லாம் முன் வைக்கும் வாதம்.
உருவமற்ற சூனியத்தை எந்த முஸ்லிமும் வணங்கவில்லை. இறைவன்
அவனுக்கே உரிய தன்மைகளுடனும் - உருவத்துடனும் இருக்கத்தான்
செய்கிறான் அவனது உருவம் மனித சிந்தனைக்கோ - கற்பனைக்கோ
உட்படாதது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. (மனித சிந்தனை
வடிவமைத்துள்ள கடவுளைப் பாருங்கள். அந்த கற்பனைகளில் கடவுள்
எத்துனை கேவலப்படுத்தப்பட்டுள்ளான் என்பது புரியும்)
முஹம்மத் அவர்கள் முன் மொழிந்தது அப்பட்டமான ஆன்மீக மோசடி
என்று யூதமும் - கிறிஸ்த்துவமும் சொன்னதும் இன்றைக்கும்
சொல்வதும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் முஹம்மத் அவர்களோ
அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களோ யூதர்களுக்கு வந்த
வழிகாட்டியையோ (மோசே) கிறிஸ்த்துவர்களுக்கு வந்த
வழிகாட்டியையோ (இயேசு) ஒருபோதும் குறை சொன்னதே கிடையாது.
முஹம்மத் அவர்கள் வருவதற்கு முன் இயேசு முன் மொழிந்த
ஆன்மீகத்தைக் கூட அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் சவுல் உட்பட
'இயேசுவின் ஆன்மீக மோசடி' என்றே வர்ணித்தார்கள் என்பதை
நேசக்குமார் நினைவுக் கூற வேண்டும்.
'**இஸ்லாமியர்களிடையே கூட
முற்போக்கானவர்கள் என தம்மை கருதிக் கொள்வோர், அரசியல்
இஸ்லாத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து
இப்போதெல்லாம் கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது'**
இன்றைக்கு உலகில் நடக்கக் கூடிய அரசியலில் எந்த அரசியலை 'இஸ்லாமிய
அரசியல்' என்று இஸ்லாமிய முற்போக்குவாதிகள் கருதுகிறாரகள்
என்பதை நேசக்குமார் சற்று புரியும் படி விளக்கட்டும்.
**அரசியல் இஸ்லாம் என்றால் என்ன என்பதைப்
பார்ப்போம். அரசியல் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாமல்
அடிப்படைவாத முஸ்லிம்களின் பேச்சை, செயல்பாட்டை, சிந்தனா முறையை
புரிந்து கொள்ள முடியாது.அரசியல் இஸ்லாத்தின் நம்பிக்கைகள்
இந்த அரசியல் இஸ்லாம் ஒப்புக் கொள்ளும் 'உண்மையான முஸ்லிம்கள்'
கீழ்க்கண்ட நம்பிக்கைகளை உடையவர்கள்:
1. அல்லாஹ் எனும்
ஏக இறைவனை மட்டுமே உலகம் முழுக்க உள்ளோர் வணங்க வேண்டும். இங்கு
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், 'அல்லாஹ்' என்ற அரபிப் பெயரில்
- திருக்குரான் மற்றும் ஹதீதுகள் வர்ணிக்கும் குணாதிசயங்களுடன்
மட்டுமே இக்கடவுளை வணங்க வேண்டும். கடவுள் என்றோ, பிரும்மா,
சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம் போன்ற பெயர்களில் கூட
இந்த ஏக இறைவனை வணங்கக் கூடாது. இந்த கடவுளுக்கு திருக்குரான்
கற்பிக்கும் குணங்களையே வரித்து வணங்க வேண்டும். இந்த அல்லாஹ்வை
கருணையுள்ள ஒரு கடவுளாகவோ(கிறிஸ்துவர்களைப் போன்று), தாயுணர்வு
நிரம்பிய ஒரு அன்புத் தெய்வமாகவோ(இந்துக்களைப் போன்று),
விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாகவோ (இந்துக்களில்
ஒரு பகுதியினர் கருதுவது போன்று) இம்மாதிரி, தமக்கு பிடித்த,
வேண்டுகிற குணாதிசயங்களோடு உள்ள கடவுளாக உருவகப் படுத்தி
வணங்கக் கூடாது.(திருக்குரான், இந்த 'அல்லாஹ்' வை ஒரு பொறாமை
குணம் கொண்ட, கடுமையான ஆணாதிக்க அரபிக் கடவுளாக உருவகம்
செய்கிறது). கவனித்துப் பார்த்தால், இதை மூடி மறைத்து அழகிய
வாதங்களுடன், தர்க்க நியாயங்களுடன் இஸ்லாமிஸ்டுகள் நியாயப்
படுத்துவார்கள்.**
இந்த வாதங்கள் நேசக்குமாரனின் இயலாமையா.. அல்லது வன்முறைக்கு
வித்திடும் முதல் படியா என்பதை புரிந்துக் கொள் சற்று
கடினமாகத்தான் இருக்கின்றது.
'மொழி என்பதும் அதன் வார்த்தைகள் என்பதும் ஒன்றைப் புரிந்துக்
கொள்வதற்காக உதவிடும் ஒரு கருவியாகும்' தமிழ் என்பது எப்படி
ஒரு மொழியோ அதேபோன்றுதான் அரபும். 'இலாஹ்' என்பதும் 'அல்லாஹ்"
என்பதும் அந்த மொழியில் ஒரு பரம்பொருளை சுட்டும்
வார்த்தைகளாகும். முஹம்மத் அந்த மண்ணில் தனது பிரச்சாரத்தை
துவங்குவதற்கு முன் அந்த மக்களிடம் இருந்த ஆன்மீக நம்பிக்கையும்
அந்த நம்பிக்கைக்காக அந்த மக்கள் வெளிப்படுத்திய வார்த்தையும்
அல்லாஹ் என்றே இருந்தது.
முஹம்மத் வந்து இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தவில்லை. அரபு
மொழி பேசக் கூடிய யூத - கிறிஸ்த்துவர்கள் கூட அன்றிலிருந்து
இன்றுவரை கடவுளை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையே பயனடுத்தி
வருகிறார்கள். தமிழக கிறிஸ்த்துவர்களுக்கு வேண்டுமானால் 'அல்லாஹ்'
என்ற வார்த்தை முஸ்லிம்களின் வார்த்தையாகத் தெரியலாம். அரபு
நாட்டு கிறிஸ்த்தவர்களுக்கு முஹம்மத் அவர்கள் வருவதற்க முன்பே
அது மிக பரிச்சயப்பட்ட வார்த்தையாகும்.
முஸ்லிம்கள், நேசக்குமார் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளால்
அல்லாஹ்வை குறிப்பிடுவதில்லை காரணம் என்ன?
பெற்றெடுத்தவள் தாய், தாய் என்ற அந்தஸ்த்தை உலகில் ஒருவளுக்கு
மட்டும் தான் கொடுக்க முடியும். அவளை தாய் என்றோ, ஆத்தாள்
என்றோ, அம்மா என்றோ அவளது கண்ணியம் குறையாத எந்த
வார்த்தையாளும் குறிப்பிடலாம். ஆனால் பெற்றத்தாயை யாரும் மகள்
என்றோ, சின்னாத்தாள் என்றோ, சகோதரி மனைவி என்றோ குறிப்பிட
முடியுமா..? மகள், சகோதரி, சிறிய தாய் மனைவி போன்ற
வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த
வார்த்தைகளிலிருந்து பெறப்படும் பொருள் பெற்றத் தாயுடன்
பொருந்திப்போகக் கூடியதல்ல. அந்த வார்த்தைகள் சுட்டும்
தன்மைகள் பெற்றத்தாயின் தன்மைகளை ஒத்திருக்கக் கூடியவையல்ல.
இப்போது சிந்திப்போம்.
மாற்றுக் கொள்கையுள்ள மதத்தவர்கள் 'பிரும்மா, சிவன், ஜெஹோவா,
இயேசு, சாமி, தெய்வம்" என்றெல்லாம் கடவுளை குறிப்பிடுகிறார்கள்
என்று மேலோட்டமாக பூசி மொழுகாமல் அந்த வார்த்தைகளிலிருந்து
கடவுள் குறித்து அவர்கள் விளங்கியுள்ள பொருளும் அதன்
தன்மைகளும் என்ன என்பதை பார்க்கும் போது அவர்கள் கடவுளாக
விளங்கியுள்ள அந்த சிந்தனை வெளிப்பாடுகள் கடவுள் என்ற ஒரு சக்தி
இருந்தால் அந்த சக்திக்கு எந்த விதத்திலும் பொருந்திப் போகக்
கூடியவையாக இருக்கவேயில்லை. (இதுபற்றி இறைவனும் அவன் தன்மைகளும்
என்ற கட்டுரையில் நாம் விரிவாக விளக்கியுள்ளோம்) இறைவனுக்கு
எந்தத் தகுதிகளெல்லாம் இருக்கக் கூடாதோ அந்தத் தகுதிகளுடன்
அந்தத் தகுதியை குறிக்கும் பெயர்களுடன் பிறர் இறைவனை கற்பனை
செய்துக் கொள்வதையே முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டுமாம்.
முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள அந்த இறைவனிடம் கருணையுள்ளம்
இல்லையாம். (இயேசுவுக்கு (அதாவது இயேசுவாக கருதப்படுபவருக்கு)
ஓட்டு) முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட இறைவனிடத்தில் தாயன்பு
இல்லையாம் (தாயாக சித்தரிக்கப்படும் பல சிலைகளுக்கு ஓட்டு)
இப்படியெல்லாம் சிந்தனைப்பூர்வமாக? ஆராய்ச்சிப்பூர்வமாக?
எழுதிக் கொண்டே போகிறார் நேசக்குமார்.
பெண் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயின்றுவிட்டு தாயையும்
தாரத்தையும் ஒரே இயல்புடன் பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை.
இவளும் பெண்தான் அவளும் பெண்தான் என்று தாரத்திடம் கிடைக்க
வேண்டியதை தாயிடம் எதிர்பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை.
பெண் என்றாலும் தாயும் தாரமும் வெவ்வேறானவர்கள் என் தேவைக்காக
நான் இருவரையும் சம கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு என்று
ஒருவேளை நேசக்குமாரன் சிந்தித்தால் 'நீ பிற்போக்கான
சிந்தனையில் மூழ்குகிறாய்' என்று அவரது உள் மனம் அவரை கிண்டல்
செய்தாலும் செய்யும்.
இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன்மைகளும்
திருக்குர்ஆனில் ஆயிரக்கணக்கான வசனங்களில் சொல்லப்படிருந்தும்
- திருக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களிலேயே இறைவன் அளவற்ற அருளாளன்
- நிகரற்ற அன்புடையோன் என்று அவனது கருணையும் - இரக்கமும்
வெளிப்பட்டிருந்தும் நேசக்குமார் அந்த இறைவனை பொறாமைக்
காரனாகவும், ஆணாதிக்க வெறிபிடித்தவனாகவும் சித்தரிக்கிறார்
என்றால் சர்ச்சை நாயகனாக தன்னை சித்தரித்துக் கொள்வதற்கே அவர்
கீ போர்டில் கை வைக்கிறார் என்பது புலப்படுகிறது.
அல்லாஹ்வை விட அவனது தூதரான முஹம்மத் அவர்கள்
மதிக்கப்படுகிறார்களா... அரசியல் இஸ்லாம் என்று நேசக்குமாரர்
எழுதியுள்ள வாதங்கள் என்ன.. தொடர்ச்சியாகப் பார்ப்போம்.
கொஞ்சம் அறிவு - கொஞ்சம் இயலாமை -
கொஞ்சம் வன்முறை
அரசியல் இஸ்லாம் என்ற தலைப்பில் நேசக்குமாரர் எழுதியுள்ள
கருத்துக்களின் நிலைப்பாட்டை பார்த்து வருகிறோம். அவரது
கடந்தக்கால கட்டுரைகளில் இருந்த சற்றேனும் நியாய உணர்வுக் கூட
இந்தக் கட்டுரையில் இல்லை. இந்தக் கட்டுரையை 'இயலாமை' அல்லது 'வன்முறை'
என்ற ஏதோ ஒரு மனத் தூண்டலே அவரை எழுத வைத்துள்ளது.
அரசியல் இஸ்லாம் குறித்து அவர் வைத்துள்ள வாதங்களை பார்ப்போம்.
**2. அல்லாஹ்வால் அனுப்பப் பட்ட (இறுதி)
இறைத்தூதர் முகமது அவர்கள்.
மேலே கண்ட அல்லாஹ்வையும் விட அதிக மரியாதைக்குரியவராக முகமது
நபி அவர்கள் கருதப் படுகிறார்கள். அல்லாஹ்வை அவன் இவன் என்பதைக்
காணலாம். ஆனால், முகமது நபியவர்களைப் பற்றி எந்தவொரு
கட்டத்திலும் சிறிது கூட மரியாதைக் குறைவான வார்த்தைகள்
குறைகூறல்கள் எழும்பா. பாகிஸ்தானில் அல்லாஹ்வைத் திட்டினால்
ஆயுள் தண்டனை, நபிகள் நாயகத்தைத் திட்டினால் மரண தண்டனை
என்பதெல்லாம் இந்த அரசியல் இஸ்லாத்தின் நீட்சிதான்.
அல்லாஹ்வையும் விட அதிக சக்திவாய்ந்தவராக, கடவுளும்,
வானவர்களும் கூட வணங்குபவராக நபிகள் நாயகம் சித்தரிக்கப்
படுகிறார்**.
இயலாமை.
உலக அளவில் மக்கள் மனங்களை வென்றெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு
கொள்கையை விமர்சிக்கும் போது அந்தக் கொள்கையின் அடிப்படைகளை
விளங்கி அதில் தவறிருந்தால் விமர்சிக்கலாம். அதற்கு
இயலாவிட்டால் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட உலக மக்களையாவது
ஒரு பார்வை பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டும். இந்த இரண்டும்
இல்லாத விமர்சனம் எந்த விதத்திலும் வலுப் பெறாது. நேசக்குமாரன்
வலுப்பெறாத விமர்சனத்தையே வைத்துள்ளார்.
அல்லாஹ்வை 'அவன்' 'இவன்' என்று கூறுகிறோமாம். முஹம்மத்
அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இப்படி குறிப்பிடாமல் மிக
மரியாதையுடன் குறிப்பிடுகிறோமாம். இது இஸ்லாத்தின் அரசியல்
பலத்தைக் காட்டுகிறதாம். அல்லாஹ்வை விட சக்தி வாய்ந்தவராகவும்
கடவுளும் - வானவர்களும் கூட வணங்கக் கூடியவராக முஹம்மத் அவர்கள்
சித்தரிக்கப்படுகிறார்களாம். அனைத்தையும் கற்றுணர்ந்தவர் போல
அவ்வப்போது இணையத்தள முகவரிகளையும் - பல புத்தகங்களையும்
மேற்கோள் காட்டும் நேசக்குமாரர் குறைந்தப் பட்சம்
அரபுமொழியின் சில வார்த்தைகளையாவது கற்றிருந்தால் - பிறரிடம்
கேட்டு தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் உளறி கொட்டாமல்
இருந்திருப்பார்.
அரபு மொழியில் தமிழ் மொழியில் உள்ள மரியாதை வார்த்தைகள்
போன்று கிடைப்பது மிக மிக அறிது. தமிழில் 'அவன்' 'அவர்' என்று
நாம் இரண்டாக பிரிக்கும் இரு வார்த்தைகளுக்கு அரபு மொழியில்
இரு வார்த்தைகள் கிடைக்காது. அவன் என்றாலும் அவர் என்றாலும் அதை
குறிக்க அரபு மொழியில் 'ஹுவ' என்ற ஒரே வார்த்தைதான் உள்ளது.
இறைவனை 'அவன்' என்று நாம் குறிப்பிடுகிறோம் இதற்கும் அரபுவில்
'ஹுவ' என்ற வார்த்தைதான் கிடைக்கும். முஹம்மதை 'அவர்' அல்லது 'அவர்கள்'
என்று குறிப்பிடுகிறோம் இதற்கும் அரபுவில் 'ஹுவ' என்ற அதே
வார்த்தைதான்.
அரபு மொழியில் தந்தை மகனை பற்றி குறிப்பிடும் போதும், மகனோ,
மகளோ தன் தந்தையைப் பற்றி குறிப்பிடும் போதும் 'ஹுவ' (இதன்
நேரடிப் பொருள் அவன் - அவர்) என்றே குறிப்பிடுவார்கள். அவ்வளவு
ஏன் தமிழ் வழக்கில் மனைவி தன் கணவனை சுட்டிக் காட்டும் போது
பரவலாக 'அவங்க' என்ற மரியாதைக் குறியீடை பயன்படுத்துகிறார்கள்.
அரபு மொழிக்கு அவங்க என்பதெல்லாம் தெரியாது. அங்கு ஒரு பெண்
தன் கணவனை சுட்டிக் காட்டும் போதும் 'ஹுவ' என்ற வார்த்தையையே
பயன்படுத்துவாள்.
இதை புரிந்துக் கொள்வதற்காக இரண்டு வசனங்களைப் பார்ப்போம்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன்
ஒருவனே. (அல் குர்ஆன் 112:1)
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில்
செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது
அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்
குர்ஆன் 53:3-5)
இந்த இரண்டு வசனங்களில் முதல் வசனம் இறைவனைப் பற்றியும்
இரண்டாவது வசனம் முஹம்மதைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அந்த
வசனங்களில் அவன் - அவர் என்று மொழியாக்கப்பட்டுள்ள இடங்களில்
'ஹுவ' என்ற பதமே வந்துள்ளது. அவன் - அவர் என்ற இடங்களை மாற்றி
மொழிபெயர்க்க அரபிமொழி வழக்கில் தடையொன்றும் இல்லை.
(நபியே) நீர் கூறும் அல்லாஹ் அவர் ஒருவரே! என்று முதல்
வசனத்தையும்,
உங்கள் தோழன் வழிகெட்டுவிடவுமில்லை. தவறான வழியில்
செல்லவுமில்லை. அவன் தன் இச்சைப்படி எதையும் பேசுவதில்லை. அது
அவனுக்கு வஹிமூலம் (நேசக்குமாரன் சொல்வது போல இறை ஆவேசம்
மூலம்) அறிவிக்கப்படுவதேயன்றி வேறில்லை என்று இரண்டாவது
வசனத்தையும் மொழியாக்கினால் தடையொன்றும் இல்லை.
ஆனால் யாரும் அப்படி மொழியாக்குவதில்லை. இறைவன் நாட்டம்
இருந்து நாளைக்கு நேசக்குமாரரே இஸ்லாத்தை எற்று குர்ஆனை
மொழியாக்கம் செய்யும் சூழ்நிலை வந்தாலும் அவர் கூட அவன் - அவர்
ஆகியவற்றை இடமாற்றி போட்டு மொழி பெயர்க்க மாட்டார். மொழிப்
பெயர்க்கக் கூடாது என்பதல்ல. அவ்வாறு மொழி பெயர்ப்பது
நாகரீகமல்ல என்று உணர்வார்.
இறைவனை 'அவன்' என்று குறிப்பிடுவது எதனால்?
இறைக் கொள்கை விஷயத்தில் முஸ்லிம்களாகிய நாம் தெளிவான
கண்ணோட்டத்தில் இருக்கிறோம். மரியாதை என்றப் பெயரில் இறைத்
தன்மையின் இடற்பாடு ஏற்படுவதை நாங்கள் ஒரு போதும் செய்ய
மாட்டோம்.
மரியாதைக்கும் தனித்தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தைப்
புரிந்துக் கொண்டால் தெளிவுப் பெற விரும்புவோர் தெளிவு பெற்று
விடுவார்.
நேசக்குமாரரையே உதாரணமாக்குவோம்.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு 'கிறுக்கன்' நேசக்குமார்
அவர்களே... என்று யாராவது குறிப்பிடுகிறார்கள் என்று வைத்துக்
கொள்வோம். மதிப்பு - மரியாதை - அவர்கள் என்ற மதிப்பான அனைத்து
வார்த்தைகளும் தனக்கு கிடைத்து விட்டது என்று அவர் மனம்
மகிழ்வாரா...?
அதே சமயம் இன்ன பிறர் இப்படி குறிப்பிடுகிறார்கள் என்று
வைத்துக் கொள்வோம்.
நேசக்குமாரன் நல்ல சிந்தனையாளன் எதையும் தனித்தன்மையுடன் அணுகக்
கூடியவன் என்று குறிப்பிடுகிறார்கள் என்றால் இதில் அவன் - அவன்
என்ற வார்த்தை வருகிறது அதனால் அவர்கள் என்னை கேவலப்படுத்தி
விட்டார்கள் என்று முடிவெடுத்து முகம் சுளிப்பாரா...?
தனித்தன்மை கெட்டுப்போகும் விதத்தில் வெளிப்படும் மரியாதை
வார்த்தைகள் உண்மையில் மரியாதை வார்த்தைகளாக இருக்கவே முடியாது.
அது தனித்தன்மைகளை கொச்சைப்படுத்தும் கேவலமான வார்த்தைகளாகவே
காட்சியளிக்கும்.
தனித்தன்மையில் தனக்கு நிகரில்லாமல் இருக்கக் கூடியவன் இறைவன்.
அவனது தனித்தன்மையின் சாயலில் கூட பிறருக்கு பங்கில்லை என்பதை
தெளிவாக குர்ஆனில் உணர்த்துபவன் இறைவன். அவனது தனித்தன்மைகளை
குறிப்பிட 'அவன்' என்ற வார்த்தையே பொருத்தமானதாகும்.
முஸ்லிம்கள் இறைவனை தமிழில் 'அவர்' என்று குறிப்பிடுவார்களானால்
கிறிஸ்த்துவர்கள் இயேசுவைக் குறிப்பிடும் 'அவர்' என்ற சாயல்
இங்கு படியும். அவரைத் தான் முஸ்லிம்களும் குறிப்பிடுகிறார்களோ
என்ற பார்வைக் கூட உருவாகலாம். இது அவனது தனித்தன்மைக்கு
இடற்பாடுகளை ஏற்படுத்த வல்லது என்பதால் தான் முஸ்லிம்கள் இறைவனை
அவர் என்று குறிப்பிடுவதில்லை.
அவன் என்பது கேவலமான வார்த்தை இல்லையென்றால் அதே வார்த்தையால்
முஹம்மதையும் குறிப்பிடலாமே.. என்று நேசக்குமாரன் குறுக்கு
விசாரணை செய்யலாம். "வள்ளுவனையும் - கம்பனையும் ்அவன்' என்று
குறிப்பிடுவது போன்று உன்னையும் நான் 'அவன்' என்று தான்
குறிப்பிடுவேன்" என்று நேசக்குமாரனுடைய குழந்தை (திருமணம்
முடிந்து குழந்தை இருந்தால்) குறிப்பிட்டால் அதை அவர்
ஆமோதிக்க மாட்டார். வள்ளுவனையும் - கம்பனையும் 'அவன்' என்று
குறிப்பிட்டு பாடம் நடத்தும் ஆசிரியரை மாணவர்கள் அதே
அடைமொழியுடன் அழைத்தால் அதை ஒருவர் கூட ஒப்புக் கொள்ள
மாட்டார்கள். இதற்கு மொழி வழக்கில் மக்களிடம் வேறூன்றிப் போன
மரியாதைக் குறியீடுகளே காரணமாகும். மரியாதைக் குறியீடுகள்
அழிந்துப் போய் அவன் என்ற வார்த்தையே புழக்கத்திற்கு வந்து
விட்டால் அப்போது யாரும் யாரையும் வித்தியாசமாக எண்ண
மாட்டார்கள்.
"அல்லாஹ்வை விட சக்தி வாய்ந்தவராக, கடவுளும் வானவர்களும் கூட
வணங்குபவராக நபிகள் நாயகம் சித்தரிக்கப்படுகிறார்" என்று
கூறுகிறார் நேசக்குமார். நண்பரே ஏன் இப்படி பொய்யான சிந்தனையை
உரமிட்டு உமிழ்கிறீர்கள்.
அந்த இறைத்தூதரை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற உணர்ச்சிவசப்பாடே
உங்களிடம் அதிகமாகத் தெரிகிறது (குறிப்பாக இந்தக் கட்டுரையில்)
'தான் இறைவனின் அடிமைதான்' என்பதை செயல்பாடுகளின் வழியாகவும்
வார்த்தைகளாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்த்தி
வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் முஹம்மத் அவர்கள். தன்னை ஏற்றுக்
கொண்டவர்களில் யாரொருவரும் தனி மனித வழிபாட்டிற்கு இரையாகி
விடக் கூடாது. தன்னை உட்பட எந்த மனிதனுக்கும் வழிபாடு நடத்தி
விடக் கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாகவும் கண்ணும்
கருத்துமாகவும் இருந்தவர் அந்த மாமனிதர்.
தான் இன்று செய்துக் கொண்டிருக்கும் அதே பணியை தனக்கு முன்
இஸ்ரவேல் சமூகத்தாரிடம் செய்வதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட
இறைத்தூதர் இயேசு அவர்கள் மதகுருக்களாலும் - மக்களாலும் வணங்கக்
கூடிய கடவுளாக ஆக்கப்பட்டு விட்டதை பார்க்கிறார்கள். இயேசு
கடவுளோ கடவுளின் குமாரரோ அல்ல என்று தொடர்ந்து எச்சரித்து
வந்த அதே வேலையில் 'மரியாளுடைய மகன் இயேசுவை விட என்னை
சிறந்தவன் - உயர்ந்தவன் என்று சொல்லி விடாதீர்கள்" என்ற
கண்டிப்பையும் தான் இறக்கும் வரை தொடர்ச்சியாக முன்
வைக்கிறார்கள்.
அருகிலிருக்கும் நாடுகளுக்கு வியாபார
நிமித்தமாக சென்ற முஆத் என்ற நபித்தோழர் அந்த நாட்டு மக்கள்
தனது மன்னருக்கு சிர வணக்கம் செய்வதை பார்க்கிறார். 'இந்த
சிற்றரசனை விட நாம் ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் பல மடங்கு
உயர்ந்தவர்கள் அவர்களுக்கு நாம் ஏன் இவ்வாறு மரியாதை செய்யக்
கூடாது என்று தனக்குள் முடிவு செய்துக் கொண்டு போன காரியம்
முடிந்ததும் ஊர் (மதீனா) திரும்புகிறார்கள். இறைத்தூதரை
சந்தித்து தான் கண்ட காட்சியையும் அதிலிருந்து தனக்கு உதித்த
எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இதை கேட்டதும்
இறைத்தூதரின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிகிறது. "முஆதே!
நான் இறந்து விட்டால் எனது மண்ணறையில் (கப்ரில்) வந்து
வணங்குவீரா.. என்று கேட்கிறார்கள். 'வணங்கமாட்டேன்' என்று முஆத்
பதிலளிக்கிறார். ஆம்! அதே போன்று தான் உயிரோடு இருக்கும்
போதும் எனக்கு சிர வணக்கம் செய்யக் கூடாது. ஒரு மனிதன்
இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்தலாம் என்றிருந்தால் கணவனுக்கு
மனைவியை சிரம்பணிய சொல்லி இருப்பேன் ஆனால் அதற்கு கூட
அனுமதியில்லை" என்று கூறினார்கள்.
மனித இயல்புடன் அவர்களிடம் சில நேரங்கள் வெளிப்பட்ட சிறு சிறு
தவறுகளைக் கூட இறைவன் சுட்டிக் காட்டி கடினமாக எச்சரித்துள்ளான்.
குர்ஆனை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு இத்தகைய சம்பவங்கள் ஆங்காங்கே
இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும்.
தான் இறைவனின் அடிமை என்பதை மக்களுக்கு உணர்த்தி அதில் இறுதி
வரை வெற்றிக் கண்டவர் உலகில் முஹம்மத் அவர்கள் ஒருவராக மட்டும்
தான் இருக்க முடியும். அந்த அடிமைத் தனத்தை நிலைப்பெற வைத்ததால்
தான் அவருக்கு கப்ர் வழிபாடோ, சிலையோ, படமோ, வடிவமோ
இன்றுவரை உலகில் இல்லாமல் இருக்கிறது. அத்தகைய ஒரு இறைத்தூதரைப்
போய் 'அல்லாஹ்வும் வானவர்களும் கூட வணங்குபவராக அவர்
சித்தரிக்கப்படுகிறார்' என்று எழுதுவதற்கு நீங்கள் (நேசக்குமாரர்)
வெட்கப்பட்டிருக்க வேண்டும்.
|
தமிழ் இஸ்லாமிய
செய்தி ஊடகத்தின் உலகவலை |
|