|
ஓவியங்கள் |
புகைப்படங்கள் |
கூடுமா? |
'ஓவியக்கலையின் பரிணாம வளர்ச்சியே புகைப்படக்கலை' என்று
விளங்கும் அறிஞர்களில் சிலர்,
'புகைப்படங்கள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டவை' என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
ஹதீஸ் விளக்கத்தில் ஆழ்ந்த ஞானமிக்க அறிஞர்களில் சிலர் இதற்கு மாற்றமான கருத்தைக்
கொண்டுள்ளனர். 'ஓவியக்கலையின் நவீன வளர்ச்சி தான் புகைப்படக்கலை என்பதை உண்மை என்று
வைத்துக் கொண்டாலும் அது புகைப்படங்களை கட்டுப்படுத்தாது' என்பது இவர்களின்
நிலைப்பாடு.
ஹதீஸ்களின் வாசக அமைப்பையும், அது சொல்லப்பட்டுள்ள விதங்களையும் சிந்திக்கும் போது
இரண்டாவது கருத்துதான் சரியானது என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
இதுபற்றி ஒரு தெளிவை பெறுவதற்காக விரிவாக அணுகுவோம்.
உருவப்படங்களும், நாயும் உள்ள வீடுகளில் வானவர்கள் நுழைய
மாட்டார்கள் என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். இப்னு அப்பாஸ், அபூதல்ஹா, அபூஸயீத்
போன்ற சில நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி பல நூல்களில் வருகிறது (பார்க்க,
புகாரி 2956, 2957, 5182)
யாரேனும் உருவப்படம் வரைந்தால் மறுமையில் அந்த உருவத்துக்கு
இறைவன் உயிர் கொடுக்க சொல்லுவான். வரைந்தவரால் ஒரு காலமும் உயிர் கொடுக்க முடியாது
என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ் ரலி புகாரி 2225)
இந்த இரண்டு செய்திகளிலும் பொதுவாக உருவங்கள் என்ற வார்த்தையே வந்துள்ளன.
எல்லாவிதமான உருவங்களையும் இந்த வார்த்தை கட்டுப்படுத்தவே செய்யும். ஆனாலும் உருவப்
படங்கள் என்ற வார்த்தையை நபி ஸல் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை
மற்ற ஹதீஸ்கள் விளக்குகின்றன.
நான் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபி ஸல் அங்கு
வந்தார்கள். திரைக்கு பின்னே என் விளையாட்டு பொம்மைகள் இருப்பதை பார்த்து
'ஆய்ஷாவே..! இது என்ன..?' என்றார்கள். 'எனது விளையாட்டு பொம்மைகள்' என்றேன். 'அது
என்ன ஒரு குதிரை பொம்மைக்கு இரண்டு இறக்கைகள் இருக்கின்றதே..!' என்றார்கள். 'ஏன்
நபி சுலைமானிடம் இருந்த குதிரைக்கு இரண்டு இறக்கைகள் இருந்ததை நீங்கள்
கேள்விப்பட்டதில்லையா..?' என்றேன். இதை கேட்ட நபி ஸல் தமது கடவாய் பற்கள் தெரியும்
அளவிற்கு சிரித்து விட்டு சென்றார்கள். (அபூ ஸலாமா ரலி, நூல்: அபூதாவூத்)
எங்களிடம் பறவைகள் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு திரை சீலை
இருந்தது. வீட்டில் நுழைபவர்கள் கண்ணுக்கு அது தெரியும். இதைக் கண்ட
நபியவர்கள்.'இதை அப்புறப்படுத்து, இதை நான் காணும் போதெல்லாம் உலக நினைவுதான்
வருகிறது' என்றார்கள். (ஆய்ஷா ரலி, நூல்: முஸ்லிம்)
பொதுவாகவே உருவப்படங்களை வரையவேக் கூடாது, வைத்திருக்கவேக் கூடாது என்பது
இஸ்லாத்தின் சட்டமாக இருந்தால் உருவங்களை கண்டவுடன் அவற்றை அழிக்கும் வேலையில் நபி
ஸல் இறங்கியிருப்பார்கள். தீமையை களைவதில் அவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் -
இருக்க வேண்டும் - என்ற உண்மையோடு இந்த நபிமொழிகளை அணுகும் போது 'வரைவதற்கும்,
வைத்துக் கொள்வதற்கும் தடை செய்யப்பட்ட உருவங்கள் இவையல்ல..' என்பதை விளங்கலாம்.
பொம்மைகள் என்ற உருவங்கள் உருவாக்கப்பட்டு அவை நபி அவர்களுடைய வீட்டில்
இருக்கின்றன. அதை நபியவர்கள் காண்கிறார்கள் 'உருவங்கள் வரைபவரை, உருவாக்குபவரை
மறுமையில் இறைவன் தண்டிப்பான்' என்று தாம் கண்டிக்கும் ஒரு காரியத்தின் வடிவமே தம்
வீட்டில் இருக்கிறது. அதை பார்த்து, அதுபற்றி கேள்வி கேட்டு, சிரித்து அங்கீகரித்து
விட்டு செல்கிறார்கள் என்றால், அவர்கள் கண்டித்து எச்சரித்துள்ள உருவங்கள் இவையல்ல
என்று விளங்குவதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
வீட்டு திரை சீலையை நீக்க சொன்னதற்கு காரணம் கூட அதில் பறவை உருவங்கள் இருக்கின்றன
என்பதற்காக அல்ல. உலக நினைவை இது அதிகப்படுத்துகின்றது என்பதுதான். உலக நினைவை
அதிகப்படுத்தும் எதிலும் நாம் ஐக்கியமாகி விடக்கூடாது என்பதற்கான சட்டம்தான் இந்த
செய்தியில் அடங்கியுள்ளது.
நபி ஸல் கண்டித்துள்ளது பொதுவான எல்லா உருவங்களையும் அல்ல என்பதை இன்னுமொரு ஹதீஸூம்
கூறுகின்றது.
உருவப்படங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள்
என்ற செய்தியை அறிவிக்கும் ஸைத் பின் காலித் அவர்கள் வீட்டிற்கு, அவர்களின் உடல்
நலன் பற்றி விசாரிக்க நான் சென்றேன். அவர்கள் வீட்டு வாசலில் தொங்கிய திரை சீலையில்
உருவப்படங்கள் இருந்தன. இதைக்கண்ட நான் அங்கு இருந்த உபைதுல்லாவிடம் (இவர் மைமுனா
ரலியின் வளர்ப்பு மகன்) 'இவர்தான் உருவப்படங்கள் குறித்து எச்சரித்தார்' (அவர்
வீட்டிலேயே மாற்றமாக நடக்கின்றதே!) என்றேன். அதற்கு உபை, 'துணியில் இருக்கும்
சிறியப் படங்களைத் தவிர' என்று ஸைத் கூறியதை நீர் அறியவில்லையா..? என்று கூறினார்.
(பிஸ்ர் பின் ஸயீத், புகாரி,5501)
இதுவரை நாம் எடுத்துக்காட்டிய செய்திகளிலிருந்து வீட்டில் சாதாரணமாக பயன் படுத்தும்
எந்த உருவங்களுக்கும் தடையில்லை என்பதை விளங்கலாம்.
எதை வைத்துக் கொள்ள அனுமதியுள்ளதோ அதை உருவாக்கிக் கொள்ளும் அனுமதியும்
அதற்குள்ளேயே அடங்கி இருப்பது அதற்குறிய சட்ட விதியாகி விடுகிறது. இதில்
அறிஞர்களுக்கு மத்தியில் மாற்று கருத்து இருக்காது என்று நம்புகிறோம்.
இந்த அடிப்படையில் விளையாட்டு பொம்மைகளை வடிவமைப்பதோ, அவற்றை விற்பதோ, பாட
புத்தகங்களில் உருவப்படங்கள் வரைவதோ, உருவப்படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதோ,
கார்ட்டூன்கள் போடுவதோ, உருவப்படங்கள் உள்ள கைலிகள், திரை சீலைகள், உடைகள் இவற்றை
இல்லங்களில் பயன் படுத்துவதோ விற்பதோ மார்க்கத்திற்கு முரணான காரியமல்ல என்பதை
விளங்கலாம். பள்ளிக் கூடங்களில் வரைக்கலை பாடம் எடுத்துப்
பயிலலாம். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வரைக்கலைப் பாடங்களில் வண்ணம் தீட்டலாம்
இதற்கெல்லாம் தடையொன்றும் இல்லை.
அப்படியானால் நபி ஸல் கண்டித்து தடை செய்த உருவங்கள் என்பது என்ன..? என்பதை விளங்க
வேண்டும்.
இறைவனுக்கு இணையை ஏற்படுத்தி, தனிமனித வழிபாடுகளை உண்டாக்கும் உருவங்களும்,
வடிவங்களும்தான் தடை செய்யப்பட்டுள்ளன.
ஒருமுறை வீட்டின் உள்ளே வருவதற்கு நபி ஸல் அவர்களிடம்
ஜிப்ரயீல் அலை அவர்கள் அனுமதி கேட்டார். நபியவர்கள் அனுமதித்தார்கள். ஆனாலும்
ஜிப்ரயீல் உள்ளே நுழைய வில்லை. ' வீட்டில் உருவப்படங்கள் இருப்பதால் நான் நுழைய
மாட்டேன். அதை கிழித்து மதிப்பற்றவகையில் மிதிப்படும் தலையணையின் உரையாக்கிக்
கொள்ளுங்கள்' என்று கூறினார். அதை நான் கிழித்து இரண்டு தலையணை உரை தைத்தேன்.
உருவம் அதில் இருக்கும் நிலையிலேயே நபி ஸல் அதில் சாய்ந்துக் கொள்வார்கள்.ஆய்ஷா,
அபூஹூரைரா இருவரும் அறிவிக்கும் இச்செய்தி நஸயி (5370) அபூதாவூத் அஹ்மத் ஆகிய
நூல்களில் வருகிறது.
மதிப்பற்ற வகையில் மிதிப்பட செய்யுங்கள் என்று ஜிப்ரயீல் கூறியதிலிருந்தே அது
மதிப்பு மிக்க உருவமாக இருந்துள்ளது என்பதை விளங்கலாம். மதிப்பு மிக்க
உருவங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதோடு நின்று விடாமல் பிற முஸ்லிம்களின்
முன்னிலையில் அது மதிப்பற்ற விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இச்
செய்தி விளக்கத் தயங்கவில்லை.
ஷேக்குகள், முரீதுகள், அவ்லியாக்கள் என்று முஸ்லிம்களின் வீடுகள் பலவற்றில்
மாட்டப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டவைகளாகும்.மிதிபடும்
விதத்தில் பயன்படுத்தத்தக்கவைகளாகும். இந்த நோக்கத்தில் வரையப்படும்
உருவங்களைத்தான் நபி ஸல் எச்சரித்துள்ளார்கள்.
நபி ஸல் நோய்வாய் பட்டிருக்கும் போது, அவர்களின் மனைவியரில்
ஒருவர் தாம் அபீஸீனியாவில் பார்த்த மாரியா என்ற ஒரு கிறித்துவ ஆலயத்தைப் பற்றிக்
கூறினார். ஏற்கனவே அபிஸீனியா சென்று வந்துள்ள உம்மு ஸலமா, உம்மு ஹபீபா இருவரும்
அந்த ஆலயத்தைப்பற்றிய அழகையும், அதில் வரையப்பட்டிருக்கும் உருவங்களைப் பற்றியும்
வர்ணித்துப் பேசிக் கொண்டார்கள். இதை கேட்ட நபி ஸல் அவர்கள் தம் தலையை உயர்த்தி
'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்து விட்டால் அவர் அடக்கத் தளத்தின் மீது கட்டிடம்
எழுப்பி அதில் அவரது உருவங்களை வரைந்து வைத்து விடுகிறார்கள் அல்லாஹ்விடத்தில்
படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே..! என்றுக் கூறினார்கள். (ஆய்ஷா ரலி,
புகாரி - 1341)
இந்த செய்தியில் அடிக்கோடிட்ட வாசகங்களிலிருந்து நாம் மேலே எழுதியுள்ள இறைவனுக்கு
இணையை ஏற்படுத்தும் வகையிலான உருவங்களுக்கே தடை என்பதை இன்னும் தெளிவாக புரிந்துக்
கொள்ளலாம். கடவுளாக, அல்லது அவதாரமாக, அல்லது மகாசக்தி பொருந்தியவராக கருதப்படும்
எதையும் விற்பனை செய்யக்கூடாது.
சிலைகளை விற்பனை செய்வதை நபி ஸல் தடுத்துள்ளார்கள். (ஜாபிர்
ரலி, புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயி)
இந்த ஹதீஸில் சிலைகள் என்று நாம் மொழி பெயர்க்கும் இடத்தில் 'ஸனம்' என்ற சொல் இடம்
பெற்றுள்ளது. சிலைகள், சிலுவைகள், கப்ருகள் என்று பல தெய்வக் கொள்கையை உருவாக்கும்
எந்தப் பொருளையும் 'ஸனம்' என்ற சொல் உள்ளடக்கக் கூடியது.
இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது இறைவனுக்கு இணை ஏற்படுத்தக் கூடிய, முகம் கை,
கால்கள் உள்ள உருவங்கள் மட்டும் என்று புரிந்துக் கொள்ளாமல் சிலுவைகள், தர்காக்கள்
போன்ற வடிவங்களும்தான் என்பதை இந்த ஹதீஸின் வாசகமும் கீழே இடம் பெறும் ஹதீஸூம்
உணர்த்துகிறது.
மதீனாவில் கப்ருகளையும், சிலுவைகளையும், உருவங்களின்
தலைகளையும் உடைத்தெறியும்படி நபி ஸல் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதே பணிக்காக
நான் உன்னை நியமிக்கிறேன் என்று ஹஜ்ஜாஜ் பின் யூசுபிடம் அலி ரலி அவர்கள் சொன்ன
செய்தி முஸ்லிமில் வருகிறது.
இணைவைப்பு என்ற மாபாதக செயலை தூண்டும் எல்லா வழிகளையும் அடைப்பதற்கான இஸ்லாத்தின்
ஏற்பாடுகளுக்கு உட்பட்டதுதான் அத்தகைய உருவங்களை வரைய, செதுக்க, விற்க வந்துள்ள
தடைகளாகும்.
பொதுவாக புகைப்படங்களுக்கு அனுமதி உண்டு என்றாலும் முக்கியமான சில விஷயங்களை நாம்
மறந்து விட்டு இதை பயன்படுத்தக் கூடாது. நாம் எடுக்கும் புகைப்படங்கள்
மார்க்கத்திற்கு உட்பட்டவைதானா..? என்பதையும் நாம் எடுக்கும் புகைப்படங்கள் நாளை
தவறான வழிகளை உருவாக்கி விடக்கூடாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.
நவீன யுகத்தில் புகைப்பட ஆதாரங்கள் எத்துனையோ பிரச்சனைகளுக்கும், வழக்குகளுக்கும்
சாட்சியாகி விடுகின்றன. இந்த வகைக்கு பயன்படுத்தலாம். பூமியின் வியக்கத்தக்க
அத்தாட்சிகளையும், அங்கு வாழும் மக்களின் நிலைப்பாடுகளையும் பிற மக்களுக்குக்காட்டி
அறிவூட்ட, இறை நம்பிக்கையை வளர்க்க பயன்படுத்தலாம். இது போன்ற வகைக்கு
பயன்படுத்துவதில் அர்த்தமும், நன்மையும் இருக்கின்றது. ஆடம்பர விழாக்கள், கூத்து
கும்மாளம் போன்ற இஸ்லாத்திற்கு முரணான, அறிவுக்கு முரணான, பொருளாதாரத்தை
பாழ்படுத்தக் கூடிய காரியங்களுக்கு இதை பயன்படுத்துவதால் யாருக்கும் பிரயோஜனமில்லை.
மாறாக பாவங்கள்தான் வந்து சேரும்.
நாம் வாழும் நவீன யுகத்தில் வளர்ந்து நிற்கும் புகைப்படக் கலையை நல் வழியில்
பயன்படுத்துவதில் முஸ்லிம்களுக்கு தயக்கம் தேவையில்லை.
(ஆட்சேபனைகள், எதிர்வாதங்கள் இருந்தால் சகோதரர்கள் தாராளமாக எழுதலாம். இந்த
பிரச்சனையை இன்னும் ஆழமாக அணுக அது வழி வகுக்கும்)
|
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை. |